கன்னியாகுமரியில் கடலில் சாக்கடை கலப்பதால் கடும் அவதி

6 hours ago 4

*சுமார் மகேஷ் ஆய்வு- பொதுமக்கள் இன்று போராட்டம்

கன்னியாகுமரி : சர்வதேச சுற்றுலா நகரமான கன்னியாகுமரியில் கடலில் பெருமளவில் சாக்கடை நீர் கலப்பதால் சுற்றுச்சூழல் கடுமையாக மாசடைந்து வருகிறது. இதனால் பொதுமக்கள், மீனவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.

சுமார் 25,000 பேர் வசிக்கும் இந்த பகுதியில் வீடுகள், கடைகள், நிறுவனங்கள் உள்ளிட்டவைகளில் இருந்து வெளியேறும் சாக்கடை நீர் எந்தவித சுத்திகரிப்பும் இல்லாமல் நேரடியாக கடலில் கலக்கிறது. இச்சாக்கடையுடன் மனிதக் கழிவுகளும் கலந்து கடலை மாசுபடுத்தி வருவதாக பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

மேலும், நூற்றுக்கணக்கான மீனவர்கள் இந்த மாசடைந்த கடல் நீரில் சென்று மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அவர்கள் உடல்நலமும் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருவதாக தெரிவித்துள்ளனர். கடலில் கலக்கும் சாக்கடை நீரால், மக்கள் சருமக் கோளாறுகள், வயிற்று பிரச்னைகள், காய்ச்சல் உள்ளிட்ட நோய்களால் தொடர்ச்சியாக பாதிக்கப்படுகின்றனர்.

வழிபாட்டுத் தலங்கள் மற்றும் குடியிருப்புகள் அருகிலேயே சாக்கடை நீர் கலப்பதால், நோய் பரவும் அபாயம் அதிகரித்து வருகிறது. சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்கள் கடலில் இறங்கும்போது அவர்கள் அறியாமலேயே மாசுபட்ட நீரில் மூழ்கி வருகின்றனர் இந்த நிலையில் இந்த பிரச்னைக்கு தீர்வு காணக்கோரி 21ம் தேதி (இன்று) ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு அமைதியான முறையில் போராட்டம் நடத்தப்படும் என கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல பங்கு பேரவை துணைத்தலைவர் டாலன் டி.ஓட்டா அறிவித்திருந்தார்.

இந்நிலையில், கடலில் சாக்கடை கலப்பதை எதிர்த்து மீனவர்கள் போராட்ட அறிவிப்பு வெளியிட்டதை தொடர்ந்து, நாகர்கோவில் மேயர் மகேஷ் நேரடியாக சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தார். அவருடன் திருத்தல அதிபர் உபால்ட், துணைத்தலைவர் டாலன் டிவோட்டா, செயலாளர் ஸ்டார்வின், பொருளாளர் ரூபன், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய திமுக செயலாளர் பாபு, கன்னியாகுமரி நகராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், துணைத்தலைவர் ஜெனஸ் மைக்கேல், கவுன்சிலர் ஆட்லின், திமுக நிர்வாகிகள் மெல்பின், மைக்கேல், நிஷார், கெய்சர், ஷியாம் உட்பட பலர் இந்த ஆய்வில் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து திருத்தல அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. 15 நாட்களில் தற்காலிக தீர்வு வழங்கப்படும் என்றும், பின்னர் சாக்கடை நீரை சுத்தப்படுத்தும் பிளாண்ட் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மேயர் உறுதி அளித்தார். எனினும் இதில் திருப்தி அடையாத மீனவர்கள் இன்று திட்டமிட்ட படி போராட்டம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர்.

The post கன்னியாகுமரியில் கடலில் சாக்கடை கலப்பதால் கடும் அவதி appeared first on Dinakaran.

Read Entire Article