*விவசாயிகள் கவலை
நாகர்கோவில் : கன்னியாகுமரி பொற்றையடியில் விவசாய பயிர்களை வனவிலங்குகள் அழித்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். குமரி மாவட்டத்தில் மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கடுக்கரை, தடிக்காரன்கோணம், காட்டுப்புதூர், கீரிப்பாறை உள்பட பல இடங்களில் விவசாய பயிர்கள், யானை மற்றும் பன்றிகளால் அழிக்கப்பட்டு வருகின்றன.
இதனால் விவசாயிகள் பலத்த நஷ்டத்தை அடைந்து வருகின்றனர். கேரளாவில் இருப்பதுபோல் விவசாய பயிர்களை அழிக்கும் பன்றிகளை கொல்வதற்கு வனத்துறை அனுமதி வழங்கவேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இது ஒரு புறம் இருக்க மேற்கு தொடர்ச்சி மலையை விட்டு தனியாக இருக்கும் குமரி மாவட்டத்தின் தெற்கு மலையின் தொடர்ச்சியாக மருங்கூர் மலை, பொற்றையடி பகுதியில் உள்ள மருத்துவாழ்மலை என பல பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக பன்றி, மிளா அதிகம் காணப்படுகிறது. இரவு நேரங்களில் மலையில் இருந்து கீழே வரும் பன்றி, மிளாக்கள் கூட்டம் விவசாய நிலங்களில் பயிரிட்டுள்ள வாழைக்குலை, வெண்டை, கொய்யா உள்பட தொட்டக்கலை பயிர்களை உண்டு, அழித்துச்செல்கின்றன. இதனால் விவசாயிகள் பலத்த நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பொற்றையடி பகுதியில் மலையில் இருந்து விவசாய நிலத்திற்கு வரும் வழியில் கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற மிளா மீது பைக்கில் சென்ற பஸ் கண்டக்டர் மோதி பலியான சம்பவம் நடந்துள்ளது. இதுபோல் மிளா மீது மோதி பல்வேறு விபத்துக்களும் ஏற்பட்டு வருகின்றன. மலையில் இருந்து இறங்கி வரும் மிளாக்கள் விவசாய நிலத்திற்குள் புகாதவகையில் வனத்துறை தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இது குறித்து பொற்றையடியில் விவசாய பயிர் சாகுபடி செய்துள்ள நாகராஜன் என்ற விவசாயி கூறியதாவது:பொற்றையடி, கொட்டாரம் உள்பட பல்வேறு இடங்களில் தோட்டக்கலை பயிர்கள் அதிகம் பயிரிடப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக மிளா தொந்தரவால், காய்கறிகள் மற்றும் வாழைகுலைகளை அறுவடை செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நான் பயிரிட்டிருந்த வெண்டை தோட்டத்தை முழுவதும் அழித்துவிட்டது.
இதுபோல் பல விவசாய நிலங்களில் பயிரிட்டுள்ள பயிர்களை அழித்துள்ளது. இதனால் விவசாயிகள் வனவிலங்குகளால் பலத்த நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். விவசாய நிலத்திற்குள் வனவிலங்கு வராமல் இருக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் விவசாய நிலத்தில் வனவிலங்குகளால் ஏற்படும் இழப்பை ஈடுகட்ட வனத்துறை உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றார்.
வனவிலங்குகள் – மனிதர்கள் மோதல்
பருவகால பிரச்னை காரணமாக வனங்களில் ஏற்படும் மாற்றங்கள், தொழில் வளர்ச்சி என்ற போர்வையில் தொடர்ச்சியாக காடுகள் அழிக்கப்பட்டு வரும் சூழலில் வன விலங்குகள் தங்களின் உணவு, தண்ணீர் தேவைகளை கருத்தில் கொண்டு வனப்பகுதியை விட்டு நிலப்பகுதியில் தங்களது நடமாட்டத்தை அதிகரிக்கிறது. இதனால் வனவிலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் இடையே மோதல்கள் உருவாகிறது.
விவசாய நிலங்களில் சாகுபடி செய்யும் பயிர்களை வன விலங்குகள் தங்களின் உணவுத் தேவையை கருத்தில் கொண்டு உண்ண வரும் போது மோதல்கள் துவங்குகிறது. இத்தகைய சூழலில் விவசாயிகள் வெடிப் பொருட்கள், துப்பாக்கிகள், ஆயுதங்களை கொண்டு தங்களது வேளாண் விளை பொருட்களை, உயிர் மற்றும் உடமைகளை பாதுகாக்கும் முயற்சிகள், வனச் சட்டங்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு எதிராக போய் முடிகிறது.
The post கன்னியாகுமரி பகுதியில் விவசாய பயிர்களை அழிக்கும் வனவிலங்குகள் appeared first on Dinakaran.