பதிவுத்துறை சார்பில் ரூ.22.36 கோடியில் புதிதாக கட்டப்பட்ட 12 புதிய சார்பதிவாளர் அலுவலகங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

3 hours ago 1

சென்னை: தமிழகத்தில் ரூ.22.36 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 12 புதிய சார்பதிவாளர் அலுவலகங்களை முதல்வர் நேற்று திறந்து வைத்தார். 2024-2025ம் ஆண்டிற்கான வணிகவரி மற்றும் பதிவுத்துறையின் முத்திரைத்தாள் மற்றும் பத்திரப்பதிவு மானிய கோரிக்கை அறிவிப்பின்படி, திருவள்ளூர் வருவாய் மாவட்டம், திருவள்ளூர் மற்றும் ஊத்துக்கோட்டை வட்டங்களில் அமையும் திருவள்ளூர் பதிவு மாவட்டம், இணை சார்பதிவாளர் அலுவலகத்தில் உள்ள 82 கிராமங்களில் 36 கிராமங்களை பிரித்து, 36 கிராமங்களை உள்ளடக்கி திருவள்ளூர் பதிவு மாவட்டத்தில் புதிதாக இணை சார்பதிவாளர் அலுவலகம் உருவாக்கப்பட்டது.

இதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமை செயலகத்தில் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். புதிதாக உருவாக்கப்பட்ட திருவள்ளூர்- 2 எண் இணை சார்பதிவாளர் அலுவலகத்தில் சராசரியாக ஆண்டொன்றிற்கு 10,000-க்கும் மேற்பட்ட ஆவணங்கள் பதிவாகி ஏறத்தாழ ரூ.53 கோடி வருவாய் ஈட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. திமுக அரசு பொறுப்பேற்ற மே 2021 முதல் இதுவரை, பதிவுத்துறையில் ரூ.60 கோடியே 52 லட்சம் செலவில் 31 சார்பதிவாளர் அலுவலக கட்டிடங்கள் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளன.

அதன் தொடர்ச்சியாக, தற்போது தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு, திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி மற்றும் வலங்கைமான், மதுரை மாவட்டம் திருமங்கலம், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர், திருப்பூர் மாவட்டம் தாராபுரம், தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம், சாத்தான்குளம் மற்றும் ஸ்ரீவைகுண்டம், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம், புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை, கரூர் மாவட்டம் குளித்தலை ஆகிய இடங்களில் ரூ.22.36 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 12 புதிய சார்பதிவாளர் அலுவலகங்களையும் முதல்வர் நேற்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், பி.மூர்த்தி, தலைமை செயலாளர் முருகானந்தம், வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் குமார் ஜயந்த், பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post பதிவுத்துறை சார்பில் ரூ.22.36 கோடியில் புதிதாக கட்டப்பட்ட 12 புதிய சார்பதிவாளர் அலுவலகங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Read Entire Article