
கன்னியாகுமரி.
கன்னியாகுமரி கடலின் நடுவே ஒரு பாறையில் அய்யன் திருவள்ளுவர் சிலையும் மற்றொரு பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும் அமைந்துள்ளன. விவேகானந்தர் பாறையில் இருந்து திருவள்ளுவர் சிலைக்கு செல்ல கடலின் நடுவே கண்ணாடி நடை பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கண்ணாடி நடை பாலத்தில் நடந்து சென்றவாறு கீழே உள்ள கடல் அழகை ரசிப்பதுதான் இதன் தனிச்சிறப்பாகும்.
இந்த பாலத்தை பார்வையிட வருகை தரும் வெளிநாட்டு, வெளிமாநில, வெளிமாவட்ட சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்தநிலையில் கண்ணாடி நடை பாலத்தில் பராமரிப்பு பணிகளை நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்கள் நேற்று தொடங்கினர். இதனால் பாலத்தில் சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.
இந்த பராமரிப்பு பணிகள் வருகிற 19-ந் தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது. இந்த நாட்களில் கண்ணாடி நடை பாலத்தில் சுற்றுலா பயணிகள் நடந்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி பாலத்தின் நுழைவு வாயிலில் கயிறுகள் கட்டி தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் நுழைவு வாயிலில் 'பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை' என அறிவிப்பு பதாகையும் வைக்கப்பட்டுள்ளது.
இதனால் நேற்று சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை மட்டும் சுற்றி பார்த்துவிட்டு, திருவள்ளுவர் சிலைக்கு செல்ல முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.