
புதுடெல்லி,
ஐ.பி.எல். தொடரில் டெல்லியில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 20 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 204 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா தரப்பில் அதிகபட்சமாக ரகுவன்ஷி 44 ரன் எடுத்தார். டெல்லி தரப்பில் ஸ்டார்க் 3 விக்கெட் வீழ்த்தினார்.
தொடர்ந்து 205 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய டெல்லி 20 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 190 ரன்கள் மட்டுமே எடுத்தது. டெல்லி தரப்பில் அதிகபட்சமாக டு பிளெஸ்சிஸ் 62 ரன் எடுத்தார். கொல்கத்தா தரப்பில் சுனில் நரேன் 3 விக்கெட் வீழ்த்தினார். இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருது சுனில் நரேனுக்கு வழங்கப்பட்டது.
தொடர்ந்து இந்த போட்டி முடிந்த பின்னர் வழக்கம் போல இரு அணி வீரர்களும் ஒருவரை ஒருவர் சந்தித்து பேசிக் கொண்டிருந்தனர். அந்த வகையில் கொல்கத்தா அணியின் இளம் வீரர் ரிங்கு சிங், டெல்லி அணியின் மூத்த வீரர் குல்தீப் யாதவ் ஆகியோர் பவுண்டரி எல்லை அருகே நின்று பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென ரிங்கு சிங் கன்னத்தில் குல்தீப் யாதவ் சிரித்துக்கொண்டே விளையாட்டாக பளார் என்று அறைந்தார். அதை தவிர்க்க முயற்சித்தும் கடைசியில் ரிங்கு கன்னத்தில் அடி வாங்கினார். இதன் காரணமாக ரிங்கு சிங் முகம் வாடிப்போனது.
மறுபுறம் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்த குல்தீப் யாதவ் அடுத்த சில நொடிகளில் மீண்டும் ரிங்கு சிங் கன்னத்தில் அறையச் சென்றார். இருப்பினும் அம்முறை சுதாரித்துக் கொண்ட ரிங்கு நகர்ந்து கொண்டதால் அடியில் இருந்து தப்பினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.