பட்டிவீரன்பட்டி: பெரும்பாறை மலைப்பகுதியில் தொடரும் கனமழையால் புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால், குடகனாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், பெரும்பாறை அருகே, மஞ்சள்பரப்பு பகுதியில் 300 அடி பள்ளத்தாக்கு பகுதியில் புல்லாவெளி நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. மலைப்பகுதியில் இருந்து நீண்டதூரம் ஆறாக பயணித்து மஞ்சள்பரப்பு பகுதியில் அருவி போன்று கொட்டுகிறது.
மலைகள் சூழ்ந்து பசுமையாகவும், சில்லென்ற சீதோஷ்ண நிலை நிலவுவதால் இங்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வர். இந்நிலையில் பெரும்பாறை, புல்லாவெளி, மஞ்சள்பரப்பு, கானல்காடு, கும்பம்மாள்பட்டி, தடியன்குடிசை, கல்லாங்கிணறு உள்ளிட்ட மலைக்கிராமங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையில் விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. இதனால், புல்லாவெளி நீர்வீழ்ச்சிக்கு நீர்வரத்து அதிகரித்து தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
இந்த நீர்வீழ்ச்சியில் இருந்து வெளியேறும் தண்ணீரால் குடகனாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. புல்லாவெளி நீர்வீழ்ச்சி தண்ணீர் செல்லும் குடகனாறு, திண்டுக்கல்லின் குடிநீர் ஆதாரமான காமராஜர் நீர்த்தேக்கத்திற்கு செல்கிறது. இதனால் காமராஜர் அணையின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்து வருகிறது. மேலும் ஆத்தூர், நிலக்கோட்டை தாலுகாவிலுள்ள குளங்களுக்கு பெரியாறு ராஜவாய்க்கால் மூலம் தண்ணீர் செல்கிறது. குளங்கள் வேகமாக நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நேற்று விடுமுறை தினம் என்பதால் புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து குளித்து மகிழ்ந்தனர்.
The post கனமழையால் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்; ‘புல்லரிக்க’ வைக்கும் புல்லாவெளி நீர்வீழ்ச்சி: விவசாயிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.