
புதுடெல்லி,
கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட சம்பவத்தில் இந்தியா-கனடா உறவு கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை தொடர்பாக இந்தியா மீது கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்த குற்றச்சாட்டை தொடர்ந்து, இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டு உள்ளது.இந்நிலையில், கனடாவிற்கான இந்திய தூதராக இருக்கும் சஞ்சய் குமார் மற்றும் சில குறிப்பிட்ட இந்திய அதிகாரிகள் மீது அந்நாடு புகாரை தெரிவித்து இருந்தது.
கொலை வழக்கு விவகாரத்தை ஆர்வமுடன் தலையிட்டு விசாரித்து வருவதாக குற்றம்சாட்டியது. இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கும் புகார் அளித்தது. ஆனால், இந்த குற்றச்சாட்டை மத்திய அரசு நிராகரித்து விட்டது. தூதரக பணியில் சஞ்சய் குமார் நீண்ட கால அனுபவம் பெற்றவர் எனவும், அவர் பல நாடுகளில் தூதராக இருந்துள்ளார் எனவும் கூறியிருந்தது.
இதனைத் தொடர்ந்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கனடா தூதருக்கு சம்மன் அனுப்பினோம்.அப்போது இந்திய தூதரக அதிகாரிகள் மீது அடிப்படை ஆதாரம் இல்லாமல் கனடா அரசு கூறும் குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவிக்கப்பட்டது.
எங்கள் தூதர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் தற்போதைய கனடா அரசாங்கத்தின் நடவடிக்கைகள் மீது நம்பிக்கை இல்லை. கனடாவின் மீது நம்பிக்கை இழந்து விட்டோம். எனவே, இந்திய தூதர் மற்றும் தூதரக அதிகாரிகளை திரும்ப பெற்றுக் கொள்வதாக முடிவு செய்துள்ளோம். இந்தியாவிற்கு எதிரான பயங்கரவாதம் மற்றும் வன்முறை சம்பவங்களுக்கு ஆதரவு அளிக்கும் ட்ரூடோ அரசு மீது நடவடிக்கை எடுக்க இந்திய அரசுக்கு உரிமை உள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.