கந்து வட்டி கேட்டு பெண்ணை மிரட்டிய இந்து தமிழர் கட்சி நிர்வாகி கைது

2 hours ago 2

நாகர்கோவில்: கந்து வட்டி கேட்டு பெண்ணை மிரட்டிய இந்து தமிழர் கட்சியின் மாவட்ட தலைவர், அமைப்பாளர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சுங்கான்கடை அசோக் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி அனுஷா (32). இவர் மாவட்ட எஸ்.பி. ஸ்டாலினிடம் ஒரு புகார் மனு அளித்தார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
எனது கணவரின் நண்பராக இருந்த, குமரி மாவட்டம் ஈத்தாமொழி அருகே உள்ள நங்கூரான் பிலாவிளையை சேர்ந்த சந்தை ராஜன் (48) என்பவரிடம் கொரோனா கால கட்டத்தில் ரூ.1 லட்சம் கடனாக பெற்று இருந்தேன். 100க்கு 8 ரூபாய் வட்டி என்ற அடிப்படையில் மாதம் ரூ.8000 கட்ட வேண்டும் என்ற நிபந்தனையுடன் எழுதப்படாத காசோலை மற்றும் எழுதப்படாத பத்திரத்தில் கையெழுத்து வாங்கிக் கொண்டு இந்த தொகையை தந்தனர்.

இந்த தொகை்கு 2024ம் வருடம் வரை மொத்தம் ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் வரை கட்டி உள்ளேன். அதன் பின்னரும் என்னிடம் பணம் கேட்டு சந்தைராஜன் மற்றும் அவருடன் இருந்தவர்கள் மிரட்டினர். திடீரென எனது வீட்டின் முன் நின்ற ரூ.7 லட்சம் மதிப்பிலான காரை திருடி சென்றனர். கடந்த 3.1.2025 அன்று என்னை செல்போனில் அழைத்து, மிகவும் அவதூறாக பேசி ஜாதி பெயரை கூறி, சந்தைராஜன் திட்டினார். மேலும் சந்தைராஜன் மற்றும் அவரது டிரைவர் ராஜேஷ், நண்பர்கள் அம்பிளி கண்ணன், சதீஷ் ஆகிய 4 பேர் என்னை மிரட்டினர். இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என கூறி இருந்தார்.

இந்த புகார் மனு தொடர்பாக இரணியல் போலீசார் விசாரணை நடத்தினர். தற்போது கந்து வட்டி தடுப்பு சட்டம், எஸ்.சி., எஸ்.டி. பிரிவுஉள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் சந்தைராஜன், அவரது டிரைவர் ராஜேஷ், நண்பர்கள் அம்பிளி கண்ணன், சதீஷ் ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதில் சந்தைராஜன், அம்பிளி கண்ணன், சதீஷ் உள்ளிட்ட 3 பேர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதாகி உள்ள சந்தைராஜன், இந்து தமிழர் கட்சி என்ற கட்சியில் மாவட்ட தலைவர் பொறுப்பிலும், அவரது நண்பர் அம்பிளி கண்ணன் என்பவர் இந்த கட்சியின் மாவட்ட அமைப்பாளர் பொறுப்பிலும் உள்ளனர். கைதாகி உள்ள சந்தைராஜன், மீது கொலை வழக்கு உள்பட ஏராளமான வழக்குகள் உள்ளன. போலீஸ் சரித்திர பதிவேடு பட்டியலிலும் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post கந்து வட்டி கேட்டு பெண்ணை மிரட்டிய இந்து தமிழர் கட்சி நிர்வாகி கைது appeared first on Dinakaran.

Read Entire Article