கந்தசஷ்டி திருவிழா நாட்களில் திருச்செந்தூர் கோயிலில் தங்கத்தேர் உலா : திருக்கோயில் நிர்வாகம் அறிவிப்பு

6 months ago 22

Thiruchendur, Gandashashti Festival, gold charriotதிருச்செந்தூர் : கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நவ.2 முதல் நவ.6ம் தேதி வரை தங்கத்தேர் உலா நடைபெற உள்ளதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாள்தோறும் மாலை 6 மணியளவில் தங்கத்தேர் கிரிப்பிரகாரம் சுற்றி வருவது வழக்கமாகும். தேரில் வள்ளி, தேவசேனா அம்மனுடன் எழுந்தருளியிருக்கும் சுவாமி ஜெயந்திநாதரை பக்தர்கள் ரூ.2,500 கட்டணத்தில் முன்பதிவு செய்து தேர் இழுத்து வேண்டுதலை நிறைவேற்றுவர்.

தற்போது கோயிலில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் பெருந்திட்ட வளாகப் பணிகளில் கோயிலின் வடக்கு மற்றும் கிழக்கு பிரகார தரைத்தள பணிகள் நடைபெறுவதற்காக கடந்த ஜூலை 17ம் தேதி முதல் தங்கத்தேர் உலா ரத்து செய்யப்பட்டு பணிகள் வேகமாக நடந்தது. இந்நிலையில் பிரசித்திப் பெற்ற கந்தசஷ்டி விழா, நாளை மறுதினம் (நவ.2) தொடங்கி நவ.7ம் தேதி சூரசம்ஹாரமும், 8ம் தேதி திருக்கல்யாண வைபவமும் நடைபெறுகிறது.

இவ்விழாவை முன்னிட்டு நவ.2ம் தேதி முதல் 5ம் திருவிழாவான நவ.6ம் தேதி வரை தினசரி மாலை கிரி பிரகாரத்தில் தங்கத்தேர் உலா நடைபெறும் என்றும் அதன் பிறகு பணிகளை பொறுத்து தங்கத்தேர் உலா மீண்டும் தொடங்கும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.

The post கந்தசஷ்டி திருவிழா நாட்களில் திருச்செந்தூர் கோயிலில் தங்கத்தேர் உலா : திருக்கோயில் நிர்வாகம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article