கந்த சஷ்டி திருவிழா 2ம் நாள் யாகசாலை பூஜை - திருச்செந்தூரில் குவியும் பக்தர்கள்

2 months ago 13

திருச்செந்தூர்,

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பல்வேறு திருவிழாக்களில் கந்தசஷ்டி திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும். இந்த ஆண்டு கந்தசஷ்டி திருவிழா நேற்று தொடங்கியது.

இதையொட்டி அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி-தெய்வானை அம்பாள்களுடன் யாகசாலைக்கு எழுந்தருளினார். யாகசாலையில் பிரதான மூன்று கும்பங்களான சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானை மற்றும் சிவன், பார்வதி உள்ளிட்ட பரிவாரமூர்த்தி கும்பங்கள் என பல்வேறு கும்பங்கள் வைக்கப்பட்டு இருந்தன. யாகசாலையில், விக்னேசுவர பூஜை, புண்ணியவாசனம், பூதசுத்தி, கும்ப பூஜை, ஹோம பூஜை உள்பட பல்வேறு பூஜைகள் நடந்தது.

கோவில் மூலவர் மற்றும் சண்முகருக்கு உச்சிகால தீபாராதனை நடந்த பின்னர் யாகசாலையில் உள்ள சுவாமி ஜெயந்திநாதருக்கு உச்சிகால தீபாராதனை நடைபெற்றது. மதியம் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி-தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் எழுந்தருளி, வேல்வகுப்பு, வீரவாள் வகுப்பு பாடல்களுடனும், மேளவாத்தியங்களுடனும் சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு மகா தீபாராதனை நடந்தது.

மாலையில் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி-தெய்வானையுடன் திருவாவடுதுறை ஆதீன கந்தசஷ்டி மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு அபிஷேகம் அலங்காரமாகி தங்க ரதத்தில் எழுந்தருளி கிரிப்பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

விழாவையொட்டி அதிகாலை முதலே கோவிலில் குவிந்த திரளான பக்தர்கள் கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் கடலில் புனித நீராடி, நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். ஏராளமான பக்தர்கள் பச்சை மற்றும் காவி ஆடை அணிந்து, கோவில் கிரிப்பிரகாரத்தில் அங்கப்பிரதட்சணம் செய்து விரதத்தை தொடங்கினர். பெண்கள் அடிபிரதட்சணம் செய்து வழிபட்டனர்.

கோவில் வளாகத்தில் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கொட்டகைகளில் தங்கி விரதமிருக்கும் பக்தர்கள் குழுக்களாக அமர்ந்து முருகப்பெருமானின் பாடல்களை பாடி ஆடியவாறு வழிபட்டனர். கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு இருந்தன.

இந்நிலையில் கந்த சஷ்டி திருவிழா 2ம் நாள் யாகசாலை பூஜையுடன் தொடங்கி நடந்து வருகிறது. முருகனை தரிசிக்க பக்தர்கள் குவிந்து வருகின்ற்னர். தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், 6-ம் திருநாளான வருகிற 7-ந்தேதி (வியாழக்கிழமை) மாலை 4.30 மணிக்கு கடற் கரையில் நடக்கிறது. 7-ம் திருநாளான 8-ந் தேதி (வெள்ளிக்கிழமை) இரவு 11 மணிக்கு சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

Read Entire Article