கத்திக்குத்து சம்பவம்: அமைச்சருடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு; டாக்டர்களின் போராட்டம் வாபஸ்

1 week ago 5

சென்னை,

சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவில் பணியாற்றி வருகின்றவர் டாக்டர் பாலாஜி ஜெகந்நாதன். இவரை பெருங்களத்தூரை சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞர் இன்று கத்தியால் தாக்கியதில் அவர் பலத்த காயமடைந்து, அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

கடந்த மே மாதம் முதல் அந்த இளைஞருடைய தாயார் இந்த மருத்துவனையில் புற்றுநோய் பிரச்சனைக்காக இதே டாக்டரிடம் சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். பின்னர் வேறு ஒரு தனியார் மருத்துவனைக்கு அவர் அழைத்து செல்லப்பட்டிருக்கிறார். அவரது தாயாருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் பக்கவிளைவுகள் ஏற்பட்டது குறித்து, டாக்டர் பாலாஜி ஜெகந்நாதனை அந்த இளைஞர் ஏற்கனவே சந்தித்து கேட்டுள்ளார் என்று கூறப்படுகின்றது.

இந்த நிலையில், இன்று மருத்துவமனைக்கு வந்த அந்த இளைஞர், டாக்டர் பாலாஜி ஜெகந்நாதனை கத்தியால் குத்தியிருக்கின்றார். இப்போது அவர் தீவிர சிகிச்சை பிரிவில் கண்காணிப்பில் இருக்கிறார். தற்போது டாக்டர் பாலாஜியின் உடல்நலம் சீராக உள்ளது என டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அந்த இளைஞர் காவல் துறையினரால் உடனடியாக கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்த சம்பவம் குறித்து முழு விசாரணை மேற்கொள்ளப்படும். அந்த இளைஞர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னையில் அரசு மருத்துவமனையின் டாக்டர் ஒருவர் நோயாளியின் உறவினரால் தாக்கப்பட்ட நிலையில், அதனை கண்டித்து, ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்வது என மருத்துவர்கள் முடிவு செய்தனர். இதன்படி, இன்று மாலை 6 மணி முதல் நாளை மாலை 6 மணி வரை இந்த வேலைநிறுத்தம் நடைபெறும் என இந்திய மருத்துவ சங்கம் அறிவித்தது. இதன்படி அவசர சிகிச்சை பிரிவுகள் தவிர, பிற பிரிவுகள் செயல்படாது என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தலைமையில், மருத்துவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு உள்ளது என கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறப்படுகிறது என மருத்துவர்கள் சங்கம் அறிவித்து உள்ளது.

இதுபற்றி அமைச்சர் கூறும்போது, அரசு மருத்துவர்களின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டு உள்ளன. டாக்டர் பாலாஜி நலமுடன் உள்ளார். வீடியோ காலில் அவருடைய உடல்நிலையை பற்றி கேட்டறிந்தேன். உயிர் காக்கும் அரசு மருத்துவர்கள் மீது தாக்குதல் என்பது ஒருபோதும் ஏற்க முடியாது என ஆவேசத்துடன் கூறினார்.

அவர் தொடர்ந்து கூறும்போது, மருத்துவர்களின் பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு கோரிக்கைகளை மருத்துவ சங்கம் முன்வைத்துள்ளது. அனைத்து மருத்துவமனைகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என அரசு மருத்துவர்கள் தரப்பில் கோரிக்கை விடப்பட்டது. நோயாளிகளுடன் வரக்கூடிய நபர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும்.

அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. மருத்துவமனைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு, ரோந்து பணி, பாதுகாப்பு குழு உள்ளிட்ட மருத்துவர்களின் பல்வேறு கோரிக்கைகள் ஏற்கப்பட்டு உள்ளன என அவர் கூறியுள்ளார்.

Read Entire Article