புழல்: மாதவரம் மண்டலம் 31வது வார்டுக்கு உட்பட்ட புழல் அடுத்த எம்ஜிஆர் நகர், பத்மாவதி நகர் வழியாக செல்லும் கொரட்டூர் மழைநீர் கால்வாய், அறிஞர் அண்ணா நகர், ராகவேந்திரா அவென்யூ, கதிர்வேடு டேவிட் ஜெயவேல் தெரு, திருவிக தெரு, கட்டிட தொழிலாளர்கள் நகர், சீனிவாசன் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் அனைத்து பகுதிகளிலும் மழைநீர் தேங்கி இருந்ததால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
மேலும், பல்வேறு பகுதிகளில் மின்சாரம் இல்லாமல் இருந்த நிலையில் எம்ஜிஆர் நகர் பகுதியில் மாநகராட்சி மின்கம்பம் சாய்ந்து விழுந்ததில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்நிலையில், மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளை மாதவரம் மண்டல குழு தலைவர் நந்தகோபால், 31வது வார்டு கவுன்சிலர் சங்கீதா பாபு, திருவள்ளூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் கதிர்வேடு பாபு மற்றும் காங்கிரஸ், திமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் நேற்று நேரில் பார்வையிட்டனர்.
அப்போது, மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி அறிஞர் அண்ணா நகர், ராகவேந்திரா அவென்யூ, கட்டிட தொழிலாளர் நகர் பகுதிகளில் உள்ள 1000க்கு மேற்பட்ட மக்களுக்கு உணவுகளை கவுன்சிலர் சங்கீதா பாபு வழங்கினார். இதனையடுத்து, பத்மாவதி நகர் வழியாக செல்லும் கொரட்டூர் மழைநீர் கால்வாயை ஆய்வு செய்து, கால்வாயின் கரை பகுதிகளை மேலும் பலப்படுத்த வேண்டும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனைத்தொடாந்து, 31வது வார்டு பகுதிக்கு உட்பட்ட கட்டிடத் தொழிலாளர்கள் நகரில் சுமார் 300க்கு மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். கடந்த, 3 தினங்களாக பெய்த கனமழையால் சிலர் பாதிக்கப்பட்டனர். இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடத்தப்பட்டது. இம்மருத்துவ முகாமினை மாநகராட்சி கவுன்சிலர் சங்கீதா பாபு தொடங்கி வைத்தார். இம்முகாமில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் பல்வேறு நோய்கள் குறித்து சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.
The post கதிர்வேடு பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு appeared first on Dinakaran.