இந்திய குடியுரிமைக்கான சான்றாக பிறப்பு, இருப்பிட சான்றிதழ் அவசியம்: ஒன்றிய அரசு அதிரடி

4 hours ago 4


புதுடெல்லி: தற்போதைய சூழலில், ஓய்வூதிய உத்தரவு, வாக்காளர் அட்டையில் பெயர் சேர்க்கவும், ஒன்றிய, மாநில அரசு பணிகளில் சேரவும், குழந்தையை பள்ளியில் சேர்ப்பதற்காகவும், திருமணம் பதிவு செய்வதற்காகவும், டிரைவிங் லைசென்ஸ், பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை பெறுவதற்காகவும், பிறப்பு சான்றிதழ் அவசியமாகிறது. இந்த அனைத்து பணிகளுக்கும் ஒரே அடையாள ஆவணமாக பிறப்பு சான்றிதழை பயன்படுத்தலாம். அதேபோல, ஒன்றிய வெளியுறவு அமைச்சகம் சமீபத்தில் சில திருத்தங்களை செய்திருந்தது. அதில், கடந்த, 2023ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதிக்கு பிறகு பிறந்தவர்கள், புதிதாக பாஸ்போர்ட் பெறுவதற்கு பிறப்பு சான்றிதழ் கட்டாயம். மாநகராட்சி, நகராட்சி போன்றவை அல்லது அதற்கு நிகரான அமைப்புகள் வழங்கும் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் மட்டுமே பிறப்பு சான்றிதழ் ஆவணமாக ஏற்கப்படும்.

ஆனால், கடந்த 2023 அக்டோபர் 1க்கு முன்பு பிறந்தவர்களுக்கு இத்தகைய பிறப்பு சான்றிதழ் தேவை இல்லை என்றும் தெளிவுபடுத்தியிருந்தது. இந்நிலையில் ஒன்றிய அரசு மீண்டும் ஒரு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது, மேற்கு வங்கம், அசாம், குஜராத் போன்ற மாநிலங்களில் அண்டை நாடுகளான வங்கதேசம், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள், சட்ட விரோதமாக வசித்து வருவதாக தகவல்கள் வந்தவண்ணம் இருந்தன. இதையடுத்து பல்வேறு மாநிலங்களில் போலீசார், சோதனை நடத்தி, சட்ட விரோதமாக வசித்தவர்களை கண்டறிந்து அதிரடியாக கைது செய்து வருகின்றனர். அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டபோது, ஆதார் கார்டுகள், பான் கார்டுகள் ரேஷன் கார்டுகள் மட்டுமே வைத்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்துதான், இந்திய குடியுரிமைக்கான சான்றிதழாக பிறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ்கள் மட்டுமே ஏற்று கொள்ளப்படும் என்று ஒன்றிய அரசு அதிரடியாக தெரிவித்துள்ளது. ஆதார், பான், ரேஷன் கார்டுகள் அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கு மட்டுமே பயன்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஆதார் கார்டு வசிப்பிடத்திற்கான சான்றிதழாக கருதப்படுகிறது. குடியுரிமைக்கான சான்றாக கருதப்படுவதில்லை. பான், ரேஷன் கார்டுகளுக்கும் இது பொருந்தும் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இந்திய குடியுரிமைக்கான சான்றாக பிறப்பு, இருப்பிட சான்றிதழ்கள் ஏற்று கொள்ளப்படும் என்ற அறிவிப்பு பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.

The post இந்திய குடியுரிமைக்கான சான்றாக பிறப்பு, இருப்பிட சான்றிதழ் அவசியம்: ஒன்றிய அரசு அதிரடி appeared first on Dinakaran.

Read Entire Article