கண்ணீர் நல்லது!

2 weeks ago 6

‘பொண்ணு மாதிரி என் அழுவுற’ …

‘ உங்கள எதுவும் சொல்லிடக் கூடாது உடனே கண்ணுல இருந்து தண்ணி கொட்டிடும்’ ‘ இதுக்குத்தான் பொண்ணுங்கள டீம்ல சேர்க்கறதே இல்ல. எதுக்கெடுத்தாலும் அழுதுடுவாங்க’. ‘ம்மா உடனே நீலிக் கண்ணீர் வடிக்காதம்மா!’ இப்படி பொதுவாகவே பெண்களின் கண்ணீரை அவர்களுக்கு பாதகமாக மாற்றிதான் ஆண்கள் சமூகம் பேசுவதுண்டு. ஆனால் மருத்துவர்களும், உளவியல் வல்லுநர்களும் கண்ணீர்தான் பெண்களின் ஆகச்சிறந்த பலம் என்கிறார்கள். ‘நிதர்சனம் என்னவென்றால் ஆண்களும் கண்ணீர் விட கற்றுக் கொள்ள வேண்டும்’ அழுத்தமாக சொல்கிறார் பர்சனாலிட்டி டெவலப்மெண்ட் பயிற்சியாளர் ஜெயந்தி ( Life Coach – Corporate Trainer) .

பெண்களுக்கு மட்டும் ஏன் கண்ணீர் வருகிறது?

‘பெண்களுடைய உடல் உறுப்புகளே அப்படியான தகவமைப்புகளுடன் தான் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதிலும் பெண்களின் பால் சுரப்புக்கான அதே ஹார்மோன் தான் கண்ணீர் சுரப்பியிலும் வேலை செய்கிறது. போலவே ஆண்களின் உடல் இயல்பாகவே கண்ணீரை கட்டுப்படுத்தக்கூடிய ஹார்மோன்களை கொண்டிருக்கிறது. பெண்களில் கண்ணீரை வெளியேற்றும் சுரப்பிகளாக தகவமைப்பு கொண்டிருக்கும். மேலும் ஆண்களின் கண்ணீர் சுரப்பி முடிந்தவரை கண்ணீரை உள் இழுத்துக்கொள்ளும். அதேபோல் பெண்களின் சுரப்பி முடிந்தவரை கண்ணீரை வெளியேற்றும். பெண்கள் சுலபமாக பிறந்த வீட்டிற்கும் புகுந்த வீட்டிற்குமான வித்தியாசங்களை புரிந்து கொண்டு மிக சுலபமாக எவ்வித உணர்வானாலும் அதை கண்ணீர் மூலம் வெளியேற்றிவிட்டு அடுத்தடுத்த வாழ்க்கைக்கு தங்களை எளிதாக தயார் படுத்திக் கொள்வார்கள். எனவே பெண்களுக்கான கண்ணீர் பலவீனமானது அல்ல மிகப்பெரிய பலமே அதுதான்.

பணியிடங்கள் மற்றும் பொது இடங்களில் பெண்களின் கண்ணீர் அவர்களுக்கான பலவீனமாக பயன்படுத்தப்படுகிறதே?

‘ இனிவரும் சமூகத்தினுடைய வேலை ஒன்றுதான் பெண் என்றால் தனது உணர்ச்சியை வெளிப்படுத்த நிச்சயம் அழுவாள். அதைப் புரிந்து கொண்டு அவளுக்கான உணர்வுகளுக்கான நேரத்தை கொடுக்க ஆண்கள் பழகிக்கொள்ள வேண்டும். உண்மையில் உள்ளிருக்கும் அழுத்தத்தையும், மனக்குழப்பங்களையும் விரட்ட கண்ணீர்தான் ஒரே வழி. இனி ‘பெண் போல் அழாதே’ என ஆண்களுக்கு சொல்லிக் கொடுக்காமல் பெண்கள் போல் அழ கற்றுக்கொள் நீயும் பிரச்னையிலிருந்து மிகவும் எளிதாக வெளியே வந்து விடுவாய் என ஆண்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்.

கண்ணீர் சில இடங்களில் நாம் சொல்லவரும் கருத்தை சொல்ல விடாமலும் தடுக்கிறதே?

‘இங்கே Tears Management அவசியம். உதாரணத்துக்கு பணியிடத்தில் ஏதோ ஒரு பிரச்னை. உங்கள் மீது தவறு இல்லை. ஆனால் நிறுவனம் நடந்த பிரச்னைக்கு முழு காரணம் நீங்கள்தான் என முடிவு செய்து உங்களை சக பணியாளர்கள் முன்பு கடுமையாக திட்டுகிறார்கள் என வைத்துக்கொள்வோம். நிச்சயம் அவ்விடத்தில் பெரும்பாலான பெண்களுக்கு கண்ணீர் வரும். அப்படியான வேலைகளில் சட்டென எழுந்து ‘எனக்கு சில நிமிடங்கள் கொடுங்கள், இதை நான் உங்களுக்கு விளக்கி சொல்கிறேன்’ என நேரம் வாங்கிவிட்டு அந்த இடத்தில் இருந்து நகர்ந்து விட்டு ஒருவேளை அழ வேண்டும் என தோன்றினால் அதையும் செய்துவிட்டு மீண்டும் வந்து உங்களுடைய கருத்தை சொல்லிப் பாருங்கள். இப்படி உங்களுக்கு நீங்களே பயிற்சி எடுத்துக் கொள்ள ஆரம்பித்து விட்டால் பணியிடங்களில் கண்ணீரே மிகப்பெரும் சக்தியாக உங்கள் மனக்குழப்பங்களை நீக்கி தெளிவான மனநிலையை உருவாக்கும். அதேபோல ஆண் பெண் இருவரும் பணியிடங்களில் சமம்தான். எனினும் ஆண்களை பணியிடங்களில் நடத்துவதற்கும் பெண்களை பணியிடங்களில் நடத்துவதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. ஒருவேளை ஒரு பெண் உங்கள் முன் அழுகிறார் எனில் அவருக்கான நேரத்தை கொடுத்துவிட்டு மீண்டும் அவரிடம் பேச முயற்சி செய்யலாம். நிச்சயம் அந்த பெண்ணிடம் தெளிவான பதில்கள் கிடைக்கும். ஏன் ஆண்களை கூட கோபத்தை வெளிப்படுத்த அல்லது உணர்வுகளை காட்டுவதற்கு சத்தமாக கத்துவது, டேபிளில் ஓங்கி அடிப்பது, சிலர் கெட்ட வார்த்தைகளில் கூட பேசுவதை பார்த்திருப்போம். இது ஆண்களுக்கான வழியெனில் பெண்களுக்கு கண்ணீர் தான் வழி.

கண்ணீருக்கு அவ்வளவு சக்தி உண்டா?

‘நிச்சயம் உண்டு, நன்கு யோசித்துப் பாருங்கள் ஏதோ ஒரு பெரிய பிரச்னை அல்லது உங்கள் வீட்டில் யாரோ ஒருவர் மரணம் ஓரிரு தினங்கள் உங்களால் முடிந்த அளவு அழுதுவிட்டு பிறகு யோசித்துப் பாருங்கள் உங்கள் மனதில் ஒரு தெளிவு கிடைக்கும். மூளையை சூழ்ந்திருந்த ஏதோ ஒரு அழுத்தம் அல்லது ஒரு திரை விலகியது போல் உங்களுக்கு தோன்றும். நன்கு அழுதுவிட்டு ஒரு முடிவை எடுத்துப் பாருங்கள் தீர்க்கமாகவும் தெளிவாகவும் அந்த முடிவு இருக்கும். மேலும் உங்கள் பிரச்சினையை விளக்கிக் கூறும் பொழுது அதிலும் ஒரு தெளிவு இருக்கும். அதற்காக குழந்தைகள் அழுது அடம் பிடிக்கிறார்கள் எனில் அதை நாம் எளிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. தேவைப்படும் நேரங்களில் கண்டிப்புடன் நடந்து கொள்வது அவசியம். ஏனெனில் அழுது அடம் பிடிக்கும் குழந்தைகள் வருங்காலத்தில் எதற்கெடுத்தாலும் அழும் நிலையும் ஏற்படும். இதை ஆரம்பத்திலேயே சரி செய்யாவிட்டால் பெற்றோர்களின் சக்திக்கு மீறி அவர்களின் ஆசைகளை நிறைவேற்ற வேண்டிய சூழல் உருவாகிவிடும். அதீத அழுகையும் கூட முகச்சரும மங்கு, கண்கள் வீக்கம், தலைவலி உள்ளிட்ட பிரச்சனைகளை உருவாக்கும். எனவே எதுவும் ஒரு அளவில் இருந்தால் அவை மருந்து. அதிகமானால் அதுவே விஷமாகவும் மாறும்.

பொது இடங்களில் அல்லது நிறுவனங்களில் பெண்கள் கண்ணீர் சிந்தினால் சக ஆண்கள் என்ன செய்ய வேண்டும்?

‘சக ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் சில நேரங்களில் சக பெண்களின் கண்ணீரை மதிப்பதில்லை. ‘எல்லாரும் பார்க்கறாங்க அழாதே’ இப்படிச் சொல்லி தான் ஒரு பெண்ணை இன்னொரு பெண் தேற்றுவார். அதை முதலில் பெண்கள் பெண்களுக்குள் மாற்றிக் கொள்வதுதான் நல்லது. போலவே ஒரு பெண் அழும் பொழுது ஆண்கள் மனதளவில் தங்களது வீட்டில் அல்லது சொந்த பந்தங்களில் அல்லது அவரது மனைவி, அம்மா, சகோதரிகள், யாரோ ஒருவர் எதுவாக இருந்தாலும் அழுது அடம் பிடித்து சாதித்துக் கொண்டிருக்கும் தன்வீட்டுப் பெண்ணால் ஒருவித சலிப்புக்கு ஆளாகி இருப்பார்கள். அந்த சலிப்பு தான் தன்முன் எந்தப் பெண் அழுதாலும் அவரையும் தன் வீட்டில் எப்போதும் அழும் பெண்ணுடன் ஒப்பிட்டுப் பார்த்து தங்களது விமர்சனத்தை சொல்லிவிடுவார்கள். உண்மையில் இனிவரும் காலங்களில் பெற்றோர்கள் பெண்களின் கண்ணீரை மதிக்க கற்றுக்கொள் என ஆண்களுக்கு வகுப்பு எடுப்பதுதான் சிறந்த தீர்வு. அதேபோல் எதுவானாலும் உன் மனதுக்குள் இருக்கும் குழப்பத்தை வெளியேற்ற மனம் விட்டு அழுவது மிகச்சிறந்த தீர்வு என்பதையும் மனித இனம் புரிந்து கொள்ள வேண்டும். மிருகங்கள் கூட பல நேரங் களில் தங்கள் உணர்வுகளை கண்ணீர் மூலம் தான் வெளிப்படுத்தும் அதில் மிகச்சிறந்த மிருகம் யானை. எப்படி சிரிப்பது மனித குணமோ அதேபோல் அழுவதும் மனித இயல்புதான். இந்த உண்மை நிலையை புரிந்து கொண்டாலே பெண்களின் கண்ணீர் பலவீனம் அல்ல பலம் என பெண்கள் ஆண்கள் என இரு தரப்பிலும் உணர்வார்கள். நல்ல மாற்றம் என்னவென்றால் சமீப காலமாக நிறைய ஆண்கள் மனதை விட்டு அழுவதை பார்க்கமுடிகிறது. குறிப்பாக நிறைய பிரபலங்கள், விருது மேடைகளில் நடிகர்கள் முதல் நம்மூர் சிவகார்த்திகேயன் வரையிலும் மேடையில் அழுது தங்களின் உணர்வை வெளிப்படுத்தி கண்ணீருக்கான பலத்தை காண்பித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். எனவே அழுவது நல்லது.
– ஷாலினி நியூட்டன்

The post கண்ணீர் நல்லது! appeared first on Dinakaran.

Read Entire Article