கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்

2 hours ago 1

திருவையாறு திருக்கோயில் குடமுழுக்கு 3.2.2025

மாதர்ப் பிறைக்கண்ணி யானை
மலையான் மகளொடும் பாடிப்
போதொடு நீர்சுமந் தேத்திப்
புகுவா ரவர்பின் புகுவேன்
யாதுஞ் சுவடு படாமல்
ஐயா றடைகின்ற போது
காதன் மடப்பிடி யோடுங்
களிறு வருவன கண்டேன்
கண்டே னவர்திருப் பாதங்
கண்டறி யாதன கண்டேன்.’’

என்ற அப்பரின் தேன்தமிழ் காதில் ஒலிக்கிறது.கண் கவரும் கயிலைக் காட்சியை, நாவுக்கரசரின் கண்ணில் காட்டிய திருவையாறு, குடமுழுக்கு உற்சவத்துக்குத் தயாராக வண்ணமயமாக ஜொலிக்கிறது.ஐந்து நதிகள் “நமசிவாய” எனும் ஐந்தெழுத்தை ஓதும் ஒலியுணர்ந்து, நாதமயமான மண்ணில் கால் வைக்கிறோம்.ஏன் நாதமயமான மண் என்கிறீர்களா? காரணமிருக்கிறது.அதோ…அங்கே நாத பிரம்மம் தியாகராஜர் சூட்சுமமாகப் பாடிக்கொண் டிருக்கிறாரே. அவர் முக்தியடைந்த இடமல்லவா.இன்றும் இசைக் கலைஞர்கள் ஜனவரியில் தவறாமல் வந்து ஐந்து நதி பாயும் (திரு)ஐயாறில், பஞ்சரத்னம் பாடுகின்றார்களே.

வாருங்கள். அந்தத் தலத்தைத் தரிசிப்போம்.

மானுடர்கள் காண்பதற்கு அரியது திருக்கயிலாயம்.விண்ணில் உள்ள திருக்கயிலாயத்தை மண்ணில் காண விரும்பினார் அப்பர் பெருமான். இறைவன் அருளால் அத்தலத்தை இத்தலத்தில் கண்டு மகிழ்ந்தார்.
பூலோக கயிலாயம் என்று அழைக்கப்படும் திருவையாறு. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் சிறப்புடைய தலமாகவும், தேவாரப் பாடல்பெற்ற காவேரி வடகரைத் தலங்களில் 51-வது தலமாகவும் திகழ்கிறது. காசி தலத்திற்குச் சமமான திருவையாறு ஐயாறு, பஞ்சந்தம், ஜீவன் முக்திபுரம், காவிரிக்கோட்டம் என்ற பலபெயர்களில் அழைக்கப்படுகிறது.

திருவையாறு பெயர்க் காரணம்

சமய உலகில் ஐந்து என்கின்ற எண்ணுக்கு மிகப்பெரிய சிறப்பும் சக்தியும் உண்டு. திரு+ஐந்து+ஆறு= திருவையாறு. காவிரி, மற்றும் காவிரியில் இருந்து திருவையாறு அருகில் கிளை ஆறுகளாக குடமுருட்டி, வெண்ணாறு, வெட்டாறு, வடவாறு என்னும் ஐந்து ஆறுகளாகப் பிரிந்து செல்வதால் திருவையாறு என இவ்வூர் பெயர் பெற்றது. ஞானம், பக்தி, வைராக்கியம், தியாகம், திருவடிப் புகல் என்னும் ஐந்து ஆறுகள் (குடமுருட்டி, வெண்ணாறு, வெட்டாறு, வடவாறு, காவிரி) மூலம் ஐயாற்றீசனை மக்கள் அடையக் கூடும் என்பதைக் குறிப்பால் உணர்த்தும்.நந்திதேவர் இப்பதியில் ஏழுகோடி முறை உருத்திர ஜபம் செய்து இறைவனால் தீர்த்தமாட்டப் பெற்றார். அது ஐந்து தீர்த்தங்களாகப் புகழ் பெற்றன. அந்த ஐந்து தீர்த்தங்களின் காரணமாக திருவையாறு என அழைக்கப்படுகின்றது.சுந்தரரும் சேரமான் நாயனாரும் தரிசிக்க வரும்போது, காவிரியின் இரு மருங்கிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓட, சுந்தரர் பதிகம் பாட, வெள்ளம் ஒதுங்கி நின்று வழி தந்த பதி.திருவண்ணாமலையை நினைத்தால் முக்தி ஏற்படும் என்பதைப் போல், திருவையாறு மண்ணை மிதித்தால் முக்தி கிடைக்கும் என்பதும் நம்பிக் கையாக உள்ளது.

தல வரலாறு

சிவாச்சாரியார் ஒருவர் காசியாத்திரை சென்று உரிய காலத்தில் வர தாமதம் ஏற்பட, இறைவன், சிவாச்சாரியார் வடிவம் கொண்டு தம்மைத் தாமே பூசித்துக்கொண்டார். (இதனை மாணிக்கவாசகர் ஐயாறு அதனிற் சைவனாகியும் என்பார்.)

நந்தியின் அவதார தலம் இது

சிலாத முனிவர் என்ற முனிவர் யாகசாலை நிலத்தை உழுதபோது, அவருக்குப் பெட்டியில் கிடைத்த குழந்தை, மார்க்கண்டேயன் போல் தமக்கு ஆயுள் 16 ஆண்டுகளே என்பதறிந்து, கழுத்தளவு திருக்குள நீரில் நின்று கடுந்தவம் புரிந்தான். ஐயாறப்பரின் பேரருட்காட்சியால் கங்கை நீர், சந்திர நீர், அம்மையின் திருமுலைப்பால், நந்தி வாய் நுரைநீர், கமண்டல நீர் ஆகிய ஐந்து ஆறுகளாலும் அபிடேகம் செய்யப்பெற்றான். அதன் பின் ஐயாறப்பர் ஞானோபதேசமும், நந்தீசர் எனும் தீட்சாநாமமும், சி
வகணத் தலைமையும் முதல் குருநாதனாம் தகுதியும் அருளினார்.

சப்தஸ்தான விழா

திருவையாறு என்றாலே ஏழூர் திருவிழா எனப்படும் சப்தஸ்தான விழா நினைவுக்கு வரும். சப்தஸ்தான விழாவிற்கு முன்னதாக நடைபெறுவது நந்திதேவர் விழா ஆகும். திருநந்திதேவருக்கு திருமழ மாடியில் தோன்றிய சுயசாம்பிகையை திருமணம் செய்துவைக்க திருவையாற்றிலிருந்து ஐயாறப்பரும், தர்மசம்வர்த்தினியும் பங்குனி மாதம் புனர்பூசத்தன்று திருமழபாடிக்கு பல்லக்கில் செல்வர். அன்று இரவே புதுமணத் தம்பதியரோடு கொள்ளிடத்தைக் கடந்து திருவையாற்றை அடைவர்.ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தில் ‘சப்தஸ்தானம்’ விழா கொண்டாடப்படுகிறது. திருவையாறு மற்றும் அதன் அருகிலுள்ள ஏழு கோயில்களிலிருந்து கண்ணாடிப் பல்லக்குகளில் அந்தந்தக் கோயில் கடவுளர்கள் இக்கோயிலில் சங்கமிக்கின்றனர். அங்கு ‘பூச்சொரிதல்’ நடைபெறும். விழாவின் இறுதியில் பல்லக்குகள் மீண்டும் அந்தந்த கோயில்களுக்குத் திரும்பிச் செல்கின்றன. திருவையாறு தவிர மற்ற ஆறு கோயில்கள்.

* திருப்பழனம்ஆபத்சகாயேஸ்வரர் கோயில்,
* திருச்சோற்றுத்துறை சோற்றுத்துறை நாதர் கோயில்,
* திருவேதிகுடி கோயில்,
* திருக்கண்டியூர் பிரமசிரக் கண்டீசுவரர் கோயில்,
* திருப்பூந்துருத்தி புஷ்பவனேஸ்வரர் கோயில்,
* தில்லை ஸ்தானம் நெய்யாடியப்பர் கோயில்

பாடியவர்கள்

பொதுவாகவே தேவாரத்தில் யாராவது ஒருவர் பாடல்கள் பாடினாலே அது பாடல் பெற்ற ஸ்தலம் ஆகிறது. வேறு ஒரு திருத்தலத்தின்போது ஒரு சொல்லால் அல்லது ஒரு தொடரால் ஒரு தலம் குறிப்பிடப்பட்டால் அது வைப்புத் தலம் என்று போற்றப்படுகின்றது ஆனால் திருவையாறு பொறுத்த வரை சமயக்குரவர்கள் அனைவருமே ஐயாறப்பனை பாடி இருக்கின்றனர்.

மன்னர்களின் பணி

தமிழகத்தை ஆண்ட எல்லா மன்னர்களின் திருப்பணியும் இந்த கோயிலுக்கு அமைந்திருக்கிறது. மிகப் பழமையான இந்த கோயிலுக்கு சோழர்கள் மட்டுமல்ல பாண்டியர்களும் பல்லவர்களும் நாயக்க மன்னர் களும் பற்பல திருப்பணிகளை செய்திருப்பதோடு ஏராளமான நிதி ஆதாரங்களை கோயிலுக்கு வழங்கிச் சென்றிருக்கின்றனர்.

கோயில் அமைப்பு

அற்புதமான கோயில் அமைப்பு. உயர்ந்த ராஜகோபுரம். ஐந்து பிரகாரங்கள். உள்ளேயே மூன்று சிவாலயங்கள் ஒன்று தென் கைலாயம் இன்னொன்று வடகயிலாயம் இன்னொன்று காவிரிக் கோட்டம். தஞ்சை கோயிலை பெரியகோயில் என்று சொல்வார்கள். ஆனால் தஞ்சை கோயிலை விட மூன்று மடங்கு பெரிய கோயில் ஐயாறப்பர் கோயில் சுமார் 15 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள கோயில்.அஸ்தினாபுரம் நகரத்தின் அரசனாக இருந்தவர் சுரதன். இவருக்கு புத்திர பாக்கியம் இல்லாமல் இருந்தது. புத்திர பாக்கியம் கிடைக்க திருக்கயிலை மலையை ஒரு மண்டலம் பிரதட்சணம் செய்யும்படி. சில மகரிஷிகள் தெரிவித்தனர். ஆனால் திருக்கயிலை சென்று இந்த பரிகாரத்தை செய்வது என்பது கடினம். இதனை உணர்ந்திருந்த சுரதன். துர்வாச மகரிஷியிடம் தனது நிலையை எடுத்துரைத்தான்துர்வாசர். சுரத மன்னனுக்காக ஈசனிடம் வேண்டினார். ஈசன் மனமிரங்கி நந்தி தேவரிடம் கூறி திருக்கயிலையை திருவையாறுக்கு எடுத்து வரும்படி கூறினார். நந்திதேவரும் திருக்கயிலை மலையை தூக்கி வந்து இரண்டாகப் பிளந்து, இந்த தலத்தில் ஐயாறப்பருக்கு தென்புறம் ஒரு பகுதியையும். மற்றொரு பகுதியை வடபுறமும் வைத்தார். இதன் காரணமாக இந்த தலம் ‘பூலோக கயிலாயம்’ என்று அழைக்கப்படுகிறது. இதனை உணர்த்தும்வண்ணம் இத்தலத்தில் தென் கயிலாயம் வட கயிலாயம் என இரு தனிக்கோவில்கள் வெளிப்பிரகாரத்தில் அமைந்துள்ளன.பூலோக கயிலாயம்’ என்று அழைக்கப் படும் இத்தல ஈசன். சுயம்பு லிங்கமாக கிழக்கு பார்த்தவண்ணம் உள்ளார். மணலால் ஆன இவருக்கு அபிஷேகம் கிடையாது. ஆவுடையாருக்கு மட்டும் அபிஷேகம் நடை பெறும். லிங்கத்திற்கு புனுகு சாத்தப்படும். அம்பாள் அறம்வளர்த்த நாயகி என்ற திருநாமத்துடன் கிழக்கு பார்த்த வண்ணம் நின்ற திருக்கோலத்தில் தனிக்கோவிலில் அருள்பாலிக்கிறார்.ஐயாறப்பரை பூஜித்துவந்த அர்ச்சகர் ஒரு முறை காசிக்கு சென்றுவிட்டார். இதனால் ஆலயத்தில் பூஜை முறை தவறும் நிலை ஏற்பட்டது. அப்போது ஐயாறப்பரே. அந்த அர்ச்சகரின் வடிவில் வந்து தன்னைத்தானே பூஜித்துக்கொண்ட புண்ணிய பூமியாகவும் இந்த இடம் திகழ்கிறது. இந் நிகழ்வை ‘ஐயாறு அதனில் சைவனாகியும்’ என்று தமது திருவாசகத்தில் பதிந்துள்ளார் மாணிக்கவாசகர். கருவறையில் ஐயாறப் பரின் சடை இன்றும் வளர்வதாக ஐதிகம். எனவே முதல் பிரகாரத்தில் வலம் வந்தால் ஈசனின் சடையை மிதிக்கும் பாவம் உண்டாகும் என்பதால், இங்கு பக்தர்கள் வலம் வர தடை செய்யப்பட்டுள்ளது.

கல்வெட்டுக்கள்

கோயில்ல் உள்ள பல கல்வெட்டுகள் கோயிலுக்கு சோழர், பாண்டியர் மற்றும் பிற ஆட்சியாளர்கள் செய்த திருப்பணிகளைக் குறிப்பிடுகின்றன. கரிகால் சோழன், இராசராசன், சடையவர்மன் சுந்தரபாண்டியன், கிருஷ்ணதேவராயன் ஆகியோர் திருவையாறுடன் தொடர்புடையவர்கள். இக்கோயிலானது வடகைலாயம் (உத்தரகைலாசம்), தென் கைலாயம் (தட்சிணகைலாசம்) என்று இரண்டு தனித்தனிப் பிரிவுகளைக் கொண்டது. வடகைலாயம் 10 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இராசராச சோழனின் பட்டத்தரசியான உலகமாதேவியால் கட்டப்பட்டது. அவர் இக்கோயிலுக்கு பல கொடைகளையும் செய்தார். தென்கைலாயம் ராசேந்திர சோழனின் அரசியால் புதுப்பிக்கப்பட்டது. நாயன்மார்களில் முதன்மையான ஒருவரான அப்பர், இக்கோயிலுடன் நெருங்கிய தொடர்புடையவர்.கோயிலின் தெற்குச் சுவரில் நிலம் விற்பனை செய்யப்பட்டதைக் குறிக்கும் வகையில் முதலாம் இராசராசனின் 21ஆம் ஆட்சியாண்டு காலத்திய கல்வெட்டு (ARE 219 of 1894) உள்ளது. 22 ஆம் ஆட்சியாண்டில் பதிவுசெய்யப்பட்ட மற்றொரு கல்வெட்டு, கோவிலின் நொந்தவிளக்கு களுக்கு 96 ஆடுகளை கொடையாக வழங்கியதைக் குறிக்கிறது. மன்னரின் 24 வது ஆட்சியாண்டு கல்வெட்டு, தலைமை மற்றும் ஊர்வல் தெய்வங்களுக்கு வழங்கப்பட்ட பல்வேறு வகையான நகைகளைக் குறிக்கிறது. மண்டபத்தின் கிழக்குச் சுவரில் உள்ள ஒரு கல்வெட்டு (ARE 215 of 1894) இராசராசனின் மருமகன் விமலாதித்தன் எட்டு வெள்ளிப் பானைகளை கோயிலுக்கு அளித்ததைக் குறிக்கிறது. முதலாம் இராசேந்திரனின் நான்காவது ஆட்சியாண்டில் நிலம் வழங்கியதற்கான பதிவு 1894 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கபட்ட கல்வெட்டு எண் ARE 216 இல் காணப்படுகின்றது.முதலாம் இராசாதிராசனின் முப்பத்தி இரண்டாம் ஆண்டு ஆட்சியாண்டு காலத்தின் மற்ற பெரிய கல்வெட்டானது, மூன்று பாண்டிய மன்னர்களான மாணபிரான், வீரபாண்டியன், சுந்தரபாண்டியன் ஆகியோருக்கு எதிராக அவரின் வெற்றிகளைக் குறிக்கிறது.

அப்பரும் திருவையாறும்

ஒருமுறை திருக்காளத்தியைத் தரிசனம் செய்த திருநாவுக்கரசர் காசியை அடைந்தார். அங்கிருந்து கயிலை மலைக்குச் சென்று ஈசனை தரிசிக்க வேண்டும் என்பது அவரது எண்ணமாக இருந்தது. அந்த எண்ணமே அவரை கயிலை நோக்கி இழுத்துச் சென்றது.ஆனால் வயோதிகமும், அதனால் ஏற்பட்ட சோர்வும் சேர்ந்து திருநாவுக்கரசரை மேற்கொண்டு நடக்கவிடாமல் செய்தது. இருப்பினும் கயிலை சென்றடைவதை நிறுத்தும் எண்ணமின்றி நடையைத் தொடர்ந்தார் திருநாவுக்கரசர். அப்போது அவரைச் சோதிக்க எண்ணிய சிவபெருமான், ஒரு முனிவர் வடிவில் திருநாவுக்கரசர் முன்தோன்றி, “நீர் இம்மானிட வடிவில் கயிலை செல்வது இயலாத காரியம். எனவே திரும்பிச் செல்லுங்கள்” என்றார். ஆனால் திருநாவுக்கரசர் அந்த பேச்சை செவிமடுக்காமல், தன் பயணத்தைத் தொடர்ந்தார். அவரது பக்தியையும், மன உறுதியையும் கண்ட சிவபெருமான், “திரு நாவுக்கரசா! இங்குள்ள பொய்கையில் மூழ்கி, திருவையாறு தலத்தை நீ அடைவாய். அங்கு யாம் உனக்கு கயிலைக் காட்சியை தந்தருள்வோம்” என்று கூறி மறைந்தார்.இறைவன் அருளியபடி அங்கிருந்த பொய்கையில் மூழ்கிய திருநாவுக்கரசர், திருவையாறில் கோவிலுக்கு வடமேற்கே உள்ள சமுத்திரத் தீர்த்தம், உப்பங்கோட்டை பிள்ளை கோவில் குளம் என்று அழைக்கப் படும் தீர்த்தக்குளத்தில் எழுந்தார். அப்போது திருவையாறில் திருக்கயிலை காட்சியை ஈசன், திருநாவுக்கரசருக்கு காட்டி அருளினார். அந்த ஆனந்த காட்சியை பார்த்த திருநாவுக்கரசர், கயிலைநாதனை உருகிப்பாடினார். திருக்கயிலை காட்சி காட்டிய தினம் ஆடி அமாவாசை ஆகும்.

குடமுழுக்குவிவரம்

திருக்கயிலாய பரம்பரைத் தருமபுர ஆதீனத்திற்குச் சொந்தமான திருவையாறு ஸ்ரீ தர்மசம்வர்த்தினி அம்பிகா ஸமேத ஸ்ரீ பஞ்சநதீஸ்வர ஸ்வாமி ஆலயத்தினுள் உள்ள ஸ்ரீ பஞ்ச நதிஸ்வரஸ்வாமி ஸ்ரீதர்மஸம்வர்த்தினீ அம்பாள். ஸ்ரீ ஆதிவிநாயகர், ஸ்ரீ சுப்ரமணியர், ஸ்ரீ சண்டேஸ்வர், மற்றும் ஸ்ரீ காலஸம்ஹாரமூர்த்தி, (ஸ்ரீ ஆட்கொண்டார்) முதலான அனைத்து மூர்த்தங்களுக்கும். அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் தை மாதம் 21ம் தேதி (03-02-2025) திங்கட்கிழமை சஷ்டி திதி ரேவதி நக்ஷத்ரம் சித்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 9.36 க்கு மேல் 10.30 மணிக்குள் நடைபெற உள்ளது. 30-01-2025 முதல் 03-02-2025 முடிய யாகசாலைபூஜைகள் (8 காலம்) விமரிசையாக நடக்க இருக்கிறது. ஐந்து நாட்கள் சுமார் 108 வேதவிற்பன்னர்களைக் கொண்டு சதுர்வேத பாராயணமும் நடைபெற உள்ளது. தமிழ்த் திருமுறைகள் தொடர்ந்து ஓதப்பட உள்ளன.

முனைவர் ஸ்ரீராம்

* தஞ்சையில் இருந்து 14 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. நிறைய நகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
*இறைவர் திருப்பெயர்: பஞ்சநதீஸ்வரர், ஐயாற்றீசர், செம்பொற்சோதீஸ்வரர், பிரணதார்த்திஹரன்.
*இறைவியார் திருப்பெயர்: அறம்வளர்த்த நாயகி, தர்மசம்வர்த்தினி.
*தல மரம்: வில்வம்
*தீர்த்தம்: சூரியபுட்கரணி, காவிரி.
*வழிபட்டோர்: சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், சேக்கிழார், திருநந்தி தேவர், இலக்குமி, இந்திரன், வருணன், வாலி, சேரமான் பெருமாள், ஐயடிகள் காடவர்கோன், பட்டினத்துப் பிள்ளையார், அருண கிரிநாதர் முதலியோர்.
*சித்திரைப் பெருவிழாவில் இத்தலத்து இறைவன் தனைத்தானே பூசித்தது ஆத்மபூஜை என்ற உத்ஸவம்
நடக்கிறது.
*கோயிலின் வெளிப்பிரகாரத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நின்றுகொண்டு ஐயாறப்பா என உரக்க குரல் கொடுத்தால் ஏழு முறை திருப்பிக் கேட்கிறது.
*இங்குள்ள தியான மண்டபம் அபூர்வமானது. இந்த மண்டபம் கட்ட தேவைப் படும் பொருட்களை சேகரித்து வைக்க மிகப்பெரிய குழிகள் தோண்டப்பட்டிருந்தன இதைக் கட்டியவர்களுக்கு தங்கமும் வெள்ளியும் கூலியாகத் தரப்பட்டதாம் இவற்றையும் இரண்டு குழிகள் தோண்டி போட்டுவைத்திருந்தனர் ஒருவர் தன்னால் முடிந்த அளவு இவற்றை அள்ளிச் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தது இந்த நான்கு குழிகளும் இப்போதும் உள்ளன.
* அம்மனின் 51ப் சக்திப்பீடங்களில் இது தர்ம சக்தி பீடம் ஆகும்.
* இத்தலத்தில் தெற்கு கோபுர வாயிலில் விற்றிருக்கும் ஆட்கொண்டேஸ்வரருக்கு வடைமாலை சாத்தும் வழக்கம் இன்றும் நடை பெறுகிறது.
* கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை
* முகவரி: அருள்மிகு ஐயாறப்பன் திருக்கோயில், திருவையாறு 613204 தஞ்சாவூர் மாவட்டம்.

The post கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன் appeared first on Dinakaran.

Read Entire Article