வருசநாடு, பிப். 15: கண்டமனூர் ஊராட்சியில் புதிய சாலை அமைத்துக் கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டம், கடமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட 6வது வார்டில் அரண்மனை ஜமீன்தார் தெரு உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் இங்கு புதிய சாலை அமைப்பதற்கு ஆய்வு பணியை மேற்கொண்டு சென்றார்கள். ஆனால் இதுவரையும் சாலை பணியோ புதிய சாக்கடை அமைக்கும்பணியோ நடைபெறவில்லை. இப்பகுதியில் அங்கன்வாடி மையம், காவல்நிலையம் ஆகியவை உள்ளன.
இதனால் பள்ளி குழந்தைகள், பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியாக உள்ளது. ஆனால் தற்போதைய சாலை சேதமடைந்து காணப்படுகிறது. எனவே இந்த அரண்மனை ஜமீன்தார் தெருவில் புதிய சிமெண்ட் சாலை அல்லது தார் சாலை அமைத்துக் கொடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுகுறித்து கண்டமனூர் கிராமவாசிகள் கூறுகையில் “பள்ளி, காவல் நிலையம் இருக்கும் ஜமீன்தார் தெருவில் சாலை வசதி இல்லாமல் உள்ளது. எனவே கண்டமனூர் ஆறாவது வார்டு பகுதியில் புதிய சாலையை அமைத்து பொதுமக்களின் நலனை பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.
The post கண்டமனூர் ஊராட்சியில் புதிய சாலை அமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.