கண்டமங்கலம், பிப். 16: கண்டமங்கலத்தில் நடத்தையில் சந்தேகப்பட்டு தூங்கிய மனைவியின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த கணவர் போலீசில் சரண் அடைந்தார். விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் வாய்க்கால் மேட்டுத்தெரு சுடுகாட்டுப் பாதை பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (45). இவர், செங்கல் சூளையில் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி உமா (42), கணவனுடன் சேர்ந்து வேலை செய்து வந்தார். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இவர்கள் இருவரும் கல்லூரியில் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று தொரவி பகுதியில் கணவன், மனைவி இருவரும் வேலை செய்துவிட்டு, மாலை வீட்டிற்கு திரும்பினர். அப்போது இரவில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கள்ளத்தொடர்பு வைத்துள்ளதாக கூறி உமாவை மணிகண்டன் கண்டித்ததாக கூறப்படுகிறது. அப்போது இரவு வெகுநேரம் வரையிலும் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. அதன்பிறகு அனைவரும் உணவு சாப்பிட்டுவிட்டு தூங்குவதற்கு சென்று விட்டனர். ஆனால் ஆத்திரத்தில் இருந்த மணிகண்டன் இரவில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த உமாவின் தலையில் வீட்டில் இருந்த அம்மிக் கல்லை எடுத்து போட்டு கொடூரமாக கொலை செய்துள்ளார். தொடர்ந்து அங்கிருந்து கண்டமங்கலம் காவல் நிலையத்திற்கு நேரடியாக சென்று, மனைவியை கொலை செய்து விட்டேன் என்று கூறி சரண் அடைந்துள்ளார்.
உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு, எஸ்ஐ விஜயகுமார் தலைமையிலான போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிந்த போலீசார் மணிகண்டனை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலை நடந்த இடத்தில் விழுப்புரம் டிஎஸ்பி நந்தகுமாரும் நேரில் சென்று விசாரணை நடத்தினார். நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை, கணவனே அம்மிக்கல்லை தலையில் போட்டு கொலை செய்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post கண்டமங்கலத்தில் நடத்தை சந்தேகத்தால் வெறிச்செயல் தூங்கிய மனைவியின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொன்ற கணவன் appeared first on Dinakaran.