கண்டனூர் செல்லாயி அம்மன் கோவில் தேரோட்டம்

5 hours ago 2

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ளது கண்டனூர். இங்கு பிரசித்தி பெற்ற ஸ்ரீ செல்லாயி அம்மன் கோவில் உள்ளது. இது இப்பகுதி மக்களின் காவல் தெய்வமாக விளங்குகிறது. ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் இக்கோவிலில் திருவிழா சிறப்பாக நடைபெறும். அவ்வகையில் இந்த ஆண்டுக்கான திருவிழா கிடந்த சில தினங்களுக்கு முன்பு காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் செல்லாயி அம்மன் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. தேரோட்டத்தை முன்னிட்டு நேற்று அதிகாலை முதலே, பச்சிளம் குழந்தைகளை கரும்புத் தொட்டிலில் சுமந்து வந்து கோவில் வீதிகளை வலம் வந்து வழிபட்டனர். அதனைத் தொடர்ந்து ஏராளமான பெண்கள், சிறுவர்கள் பால்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தனர். மதியம் சுமார் 2 மணி அளவில் தேரில் அம்மன் எழுந்தருளியதும், பக்தர்கள் அர்ச்சனை செய்து வணங்கினர்.

இரவு 7 மணி அளவில் தேரோட்டம் தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க, தேர் ரத வீதியை சுற்றி கோவிலுக்கு இரவு 10 மணியளவில் வந்து சேர்ந்தது. கண்டனூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான மக்கள் இந்நிகழ்வில் பங்கேற்று அம்மனை வழங்கினர்.

Read Entire Article