கணவர் பிரிந்து சென்றதால் பிரபல சின்னத்திரை நடிகை அமுதா ஆசிட் குடித்து தற்கொலை முயற்சி: ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி

11 hours ago 4

சென்னை: கருத்து வேறுபாடு காரணமாக கணவர் பிரிந்து சென்றதால், மனமுடைந்த பிரபல சின்னத்திரை நடிகை ஒருவர் கழிவறைக்கு சுத்தம் செய்ய பயன்படுத்தும் மருந்தை குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இந்த சம்பவம் சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சாலிகிராமம் வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் அமுதா (28). சின்னத்திரை நடிகையான இவர், டிவி சீரியல்களில் நடித்து வருகிறார். ஆவடியை சேர்ந்த மென்பொருள் பொறியாளர் சக்தி பிரபு (30) என்பவருக்கும் சின்னத்திரை நடிகை அமுதாவுக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. சக்தி பிரபு பெருங்குடியில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இதற்கிடையே அமுதா அடிக்கடி சின்னத்திரை சூட்டிங் தொடர்பாக சென்றுவிட்டு இரவு நேரங்களில் காலதாமதமாக வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது.

இதை அவரது கணவர் கண்டித்து, இனி நடிக்க வேண்டாம் என்று கூறி கட்டுப்பாடுகள் விதித்ததாகவும், ஆனால் அமுதா நான் நடிப்பை விடமாட்டேன் என்று கூறி தகராறில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் சக்தி பிரபு மனைவி அமுதாவைவிட்டு பிரிந்து தனது தாய் வீடான ஆவடிக்கு சென்றுவிட்டார். இந்நிலையில் அமுதா பலமுறை தனது கணவரிடம் பேச முயன்றும் அவர் பேச மறுத்ததால், மனம் உடைந்த நிலையில் இருந்த அமுதா நேற்று முன்தினம் வீட்டில் கழிவறையை சுத்தம் செய்ய வைத்திருந்த ஆசிட்டை எடுத்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். குடித்த சிறிது நேரத்தில் அவருக்கு தொண்டையில் கடுமையான எரிச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் அச்சத்தில் அமுதா தனது தோழியான கிரண் என்பவருக்கு போன் செய்து நடந்த சம்பவத்தை கூறி அழுதுள்ளார்.

உடனே கிரண் விரைந்து வந்து அமுதாவை மீட்டு விருகம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். உரிய நேரத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதால், நடிகை அமுதா அபாய கட்டத்தை தாண்டி தற்போது நலமாக இருப்பதாக கூறப்படுகிறது. பின்னர் சம்பவம் குறித்து மருத்துவமனை தகவலின்படி விருகம்பாக்கம் போலீசார் சின்னத்திரை நடிகை அமுதா தற்கொலை முயற்சி தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

The post கணவர் பிரிந்து சென்றதால் பிரபல சின்னத்திரை நடிகை அமுதா ஆசிட் குடித்து தற்கொலை முயற்சி: ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி appeared first on Dinakaran.

Read Entire Article