கடனை வாங்கி சிபிஎஸ்இ பள்ளியில் சேர்க்கும் பெற்றோர் எவ்வளவு மன உளைச்சலுக்கு ஆளாவார்கள்? : அமைச்சர் அன்பில் மகேஷ் கொந்தளிப்பு!!

11 hours ago 4

திருச்சி : சிபிஎஸ்இ பள்ளிகளில் 3, 5, 8ம் மாணவர்கள் குறைந்த மதிப்பெண் எடுத்தால் FAIL என்ற நடைமுறைக்கு தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தேசிய கல்விக் கொள்கை 2020ன் படி 8ம் வகுப்பு வரை, இருந்த கட்டாய தேர்ச்சி முறை மாற்றப்பட்டு, 3,5 மற்றும் 8ம் வகுப்புகளில், குறைவான மதிப்பெண் பெறும் மாணவர்களை பெயிலாக்கும் முறை சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தங்களின் குழந்தை குறைவான மதிப்பெண் எடுத்தால் பெயில் ஆக்க சம்மதிப்பதற்காக பெற்றோர்களிடம் பள்ளிகள் ஒப்புதல் கடிதம் பெற்று வருகின்றன. அனைவருக்கும் கல்வி உரிமைச் சட்டம் 2009-ன் படி 8ம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி இருந்த நிலையில், இந்த ஆண்டு 2025 மே 1 முதல் இந்த நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.

இந்த நிலையில், திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் அன்பில் மகேஷ், “தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மாட்டோம் என்று ஆரம்பம் முதலே கூறி வருகிறோம்.சிபிஎஸ்இ பள்ளிகளில் 3, 5, 8ம் மாணவர்கள் குறைந்த மதிப்பெண் எடுத்தால் FAIL என்ற நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம். 5, 8ம் வகுப்பு மாணவர்களை பெயில் ஆக்குவது பெற்றோர்களுக்கு பெரும் மனஉளைச்சலையும் ஏற்படுத்தும். மாணவர்கள் கல்வி கற்பதை விட்டே செல்லும் நிலை உருவாகும். இதனால் இடைநிற்றல் அதிகரிக்கும். தேசிய கல்விக் கொள்கையை சிபிஎஸ்இ பள்ளிகள் செயல்படுத்தும்போது பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். சிபிஎஸ்இ பள்ளிகள் கையெழுத்து கேட்டால் பெற்றோர் போட்டுத் தாக்கூடாது.

5, 8ம் வகுப்பு மாணவர்களை பெயில் ஆக்கும் முடிவை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. கடனை வாங்கி சிபிஎஸ்இ பள்ளியில் சேர்க்கும் பெற்றோர் எவ்வளவு மன உளைச்சலுக்கு ஆளாவார்கள்?. திமுகவினரின் பிள்ளைகளுக்காக பேசவில்லை; அனைத்து மாணவர்களுக்காகவும் பேசுகிறோம். தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால் மாநில பாடத்திட்டத்திலும் இதேநிலைதான். அரசின் நடவடிக்கையால் மாநிலப் பாடத்திட்ட மாணவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.முதலமைச்சர் அறிவுறுத்தல்படியே இன்று இந்த விளக்கத்தை அளித்துள்ளேன். உச்சநீதிமன்ற உத்தரவின்படி கொண்டு வரப்பட்ட சட்டங்களை நீர்த்துப்போக ஒன்றிய அரசு முயற்சிக்கிறது,”இவ்வாறு தெரிவித்தார்.

The post கடனை வாங்கி சிபிஎஸ்இ பள்ளியில் சேர்க்கும் பெற்றோர் எவ்வளவு மன உளைச்சலுக்கு ஆளாவார்கள்? : அமைச்சர் அன்பில் மகேஷ் கொந்தளிப்பு!! appeared first on Dinakaran.

Read Entire Article