
சென்னை,
சமீபத்தில் சர்ச்சையில் சிக்கிய சிறகடிக்க ஆசை சீரியலில் நடித்து வரும் நடிகை ஸ்ருதி நாராயணன் தற்போது வெள்ளித்திரையில் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார். புதுமுக நடிகர் ரங்கராஜ் தயாரித்து, இயக்கி, கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'கட்ஸ்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
'கட்ஸ்' திரைப்படத்தில் ரங்கராஜ், ஸ்ருதி நாராயணன், ஸ்ரீலேகா, டெல்லி கணேஷ், சாய் தீனா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மனோஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜோஸ் பிராங்களின் இசையமைத்திருக்கிறார். ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இப்படத்தை ஓ பி ஆர் பி புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஜெயபாரதி ரங்கராஜ் தயாரித்திருக்கிறார்.
விரைவில் வெளியாகவிருக்கும் இத்திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியிட்டு விழாவில் இயக்குநர் ரங்கராஜ், நடிகை ஸ்ருதி நாராயணன், ஜாக்குவார் தங்கம், கில்ட் செயலாளர் துரைசாமி, டைகர் சக்கரவர்த்தி, ஷிவானி செந்தில், சத்யபதி, இஸ்மாயில், ஸ்ரீலேகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நடிகை ஸ்ருதி நாராயணன் பேசுகையில், "இந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய இயக்குநர் ரங்கராஜுக்கு நன்றி. படப்பிடிப்பு தளத்தில் என்னுடைய கதாபாத்திரத்திற்குரிய நடிப்பை சொல்லிக் கொடுத்து நடிக்க வைத்த இயக்குநருக்கு நன்றி. இப்படத்திற்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்," என்றார்.