சென்னை: ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கதிரியக்க அதிர்வெண் நீக்கியல் கருவி சேவை தொடங்கப்பட்டுள்ளது. கட்டுப்படுத்த முடியாத வலிகளுக்கு கதிரியக்க அதிர்வெண் நீக்கம் மூலம் பக்க விளைவுகள் ஏற்படாமல் வலி நிவாரணம் அளிக்க முடியும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், அரசு பேராட்சியர் மற்றும் அரசு பொறுப்பு சொத்தாட்சியர் நிதியின்கீழ் ரூ.42 லட்சம் மதிப்பீட்டில், கதிரியக்க அதிர்வெண் நீக்கியல் கருவி சேவையினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் நேற்று தொடங்கி வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர்.
பிறகு, நிருபர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: புற்றுநோய் மற்றும் மூட்டு வலியால் வரும் கடுமையான வலிகளுக்கு உரிய நிவாரண சிகிச்சைகள் 2013ம் ஆண்டு முதல் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் மயக்கவியல் துறையில் செய்யப்பட்டு வருகிறது. மருந்து, மாத்திரை, ஊசிகள் மூலம் கட்டுப்படுத்த முடியாத நாட்பட்ட வலிகளுக்கு கதிரியக்க அதிர்வெண் நீக்கம் மூலம் உடம்பில் எந்தவித பாகத்திற்கும் பக்க விளைவுகள் ஏற்படாமல் வலி நிவாரணம் அளிக்க முடியும். ப்ளோரோஸ்கோபி என்று சொல்லப்படும் மிக நேரம் எக்ஸ்ரே மூலம் இந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த சிகிச்சையானது பொதுவாக, தனியார் மருத்துவமனைகளில் ஒரு நோயாளிக்கு சுமார் ரூ.50,000/- முதல் ரூ.1,00,000/- வரை செலவாகும். ஆனால் இந்தக் கருவி மூலம் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் மயக்கத்துறையில் நாள்பட்ட வலி நிவாரண மையத்தின் மூலம் இந்த சிகிச்சை இலவசமாக அளிக்கப்படுகிறது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.
இந்நிகழ்வில் சென்னை உயர்நீதிமன்ற அரசு பேராட்சியார் மற்றும் அரசு பொறுப்பு சொத்தாட்சியர் லிங்கேஸ்ரவன், மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் சங்குமணி, சென்னை மருத்துவக்கல்லூரி முதல்வர் தேரணிராஜன், மயக்கவியல் துறை இயக்குநர் சந்திரசேகரன் மற்றும் மருத்துவப் பேராசிரியர்கள், உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post கட்டுப்படுத்த முடியாத நாள்பட்ட வலிகளுக்கு கதிரியக்க அதிர்வெண் நீக்கம் மூலம் சிகிச்சை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் appeared first on Dinakaran.