
கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் ஏழைக்குழந்தைகளுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும். இந்த திட்டத்தில் மாணவர்களின் கல்வி கட்டணத்தில் 60 சதவீதத்தை மத்திய அரசும், 40 சதவீதத்தை மாநில அரசும் வழங்க வேண்டும். ஆனால், இந்த திட்டத்திற்கான பங்குத்தொகையை கடந்த 4 ஆண்டுகளாக மத்திய அரசு இதுவரை வழங்கவில்லை. இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், புதிய கல்விக்கொள்கையில் தமிழக அரசு கையெழுத்திடாததால் கட்டாயக்கல்வி சட்டத்தின்கீழ் ஏழை குழந்தைகளுக்கான 25 சதவீத இடஒதுக்கீட்டிற்கான பங்கு ஒதுக்கப்படவில்லை என்று மத்திய அரசு தெரிவித்தது.
கோடை விடுமுறை நிறைவடைந்து பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் கட்டாயக்கல்வி திட்டத்தின்கீழ் ஏழைக்குழந்தைகளுக்கான 25 சதவீத இடஒதுக்கீட்டை தனியார் பள்ளிகள் அமல்படுத்தவில்லை. இந்த திட்டப்படி அரசு கல்விக்கட்டணம் செலுத்தாததால் இடஒதுக்கீட்டை தனியார் பள்ளிகள் அமல்படுத்தவில்லை. இதனால், ஏழைக்குழந்தைகள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தஞ்சையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கட்டாயக்கல்வி திட்டத்தில் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளதா? மத்திய அரசு நிதி வழங்காதது தொடர்பாக அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அந்த கேள்விக்கு பதில் அளித்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கட்டாயக்கல்வி திட்டத்தில் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை விவரம் ஆகஸ்ட் 1ம் தேதிதான் வெளிவரும். அதைப்பொறுத்துதான் ஊழியர்கள் நீட்டிப்பை மேற்கொள்வோம். கட்டாயக்கல்விக்கொள்கை நிதி தொடர்பாக கடந்த 16 மற்றும் 17 ஆகிய 2 நாட்கள் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் டெல்லி சென்று மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.
கட்டாயக்கல்வி திட்டம் தொடர்பாக மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லையென்றால் வழக்கு தொடருவோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே கூறியிருந்தார். அதன்படி, கல்வி நிதி தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக வழக்குத்தொடர்வதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது' என்றார்.