
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் சமூக மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள ஏழை மாணவர்களுக்கான 25 சதவீத இடஒதுக்கீட்டின்படி இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை இதுவரை தொடங்கப்படவில்லை எனக்கூறி, சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமிநாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
வழக்கு விசாரணையில், தமிழ்நாடு அரசு சார்பில் வாதிடுகையில், இத்திட்டத்தில், மாணவர்களின் கல்விக் கட்டணத்தில் மத்திய அரசின் பங்கு 60 சதவீதம் மற்றும் மாநில அரசின் பங்கு 40 சதவீதம். ஆனால், மத்திய அரசு கடந்த 2021 முதல் கல்வி நிதியை வழங்காமல் இருப்பதாக தமிழ்நாடு அரசு சார்பில் வாதிடப்பட்டது.
அப்போது, கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்கீழ் 25 சதவீத இடஒதுக்கீட்டு இடங்களுக்காக தமிழகத்துக்கு ஒதுக்கப்பட வேண்டிய நிதி விவரங்களை சமர்ப்பிக்கும்படி மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், "புதிய கல்விக் கொள்கை உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பான மத்திய அரசின் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடாத காரணத்தால் கட்டாயக் கல்வி சட்டத்தின்கீழ் 25 சதவீத இடஒதுக்கீட்டுக்கான ஒன்றிய அரசின் பங்களிப்பு தொகை ஒதுக்கப்படவில்லை. பல்வேறு மாநிலங்கள் இதுதொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள நிலையில் தமிழக அரசு மட்டும் கையெழுத்திடவில்லை" என்றார்.
மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் கல்வி நிதியை வழங்க முடியும் என்று கூறி தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய ரூ.2,291 கோடி நிதியை மத்திய அரசு தர மறுக்கிறது. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ள தமிழ்நாடு அரசு, கல்வி நிதியை உடனடியாக விடுவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளது.
புதிய கல்விக் கொள்கையை ஏற்காத, "பி.எம்.ஸ்ரீ' பள்ளி திட்டத்தை செயல்படுத்தாத மாநிலங்களுக்கான நிதி நிறுத்தப்படுவதை ஏற்க முடியாது. உடனடியாக தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கத்துக்கான நிறுத்தி வைக்கப்பட்ட நிதியை விடுவிக்க வேண்டும்" என, நாடாளுமன்ற நிலைக்குழு திட்டவட்டமாக தெரிவித்திருந்தது. ஆனால் மத்திய அரசு தற்போது வரையில் தமிழ்நாட்டுக்கான கல்வி நிதியை ஒதுக்கீடு செய்யாமால் காலம் தாழ்த்தி ஒருதலை பட்சமாக செயல்பட்டு வருவது கண்டனத்துக்குரியது.
இத்திட்டத்தின் மூலம் தமிழகத்தில் 7,738 தனியார் பள்ளிகளில் சுமார் 85 ஆயிரம் முதல் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மாணவ, மாணவிகள் வரை பயன்பெற்று வந்தனர். இத்திட்டம் தொடங்கி 14 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் நிலையில், வருடந்தோறும் ஏப்ரல் மாதம் தொடங்கி மே மாதம் வரை காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு தகுதியான மாணவர்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கை நடைபெறும்.
ஆனால், இந்தாண்டு தமிழகத்தில் ஏப்ரல் மாதம் வெளியிடப்பட வேண்டிய கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு தற்போது வரை வெளியிடப்படவில்லை. மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை ஏற்காததால், சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு தர வேண்டிய 2,291 கோடி ரூபாய் கல்வி நிதியை ஒன்றிய அரசு நிறுத்தி வைத்திருப்பது இந்த தாமதத்திற்கு காரணம் ஆகும்.
கல்வித்துறையில் தமிழகம் முன்னோடி மாநிலமாக இருந்து வருகிறது. இச்சூழலில் தமிழகத்தில் கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009ஐ முடக்கி வைக்கும் வகையில் இத்திட்டத்திற்காக மத்திய அரசு வழங்க வேண்டிய 617 கோடி ரூபாயை விடுவிக்காமல் அடாவடியாக ஒன்றிய அரசு செயல்படுவது கடும் கண்டனத்துக்குரியது. உடனடியாக கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு நிதியை மத்திய அரசு விடுவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.