‘‘தூங்காநகரில் இலைக்கட்சி செய்யும் அரசியலை விட, இலைக்கட்சிக்குள் நிகழும் அரசியல்தான் இப்போது பரபரப்பான ஹாட் டாபிக் என்கிறார்களே.. என்னவாம்..’’ என கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘ஆமா..ஏற்கனவே, தூங்கா நகர்ப்புற மாஜி மந்திரிக்கும், புறநகர் மாஜி மந்திரிக்கும் ஏழாம் பொருத்தம். இருவரும் ஒரே நிகழ்வில் பங்கேற்றாலும், பெரியதாக பேசிக் கொள்ள மாட்டார்கள். மறுபுறம் முதல் படை வீட்டு எம்எல்ஏவும் இவர்களிடத்தில் ஒத்துப்போக மாட்டார். மாவட்டத்தில் முக்கோணமாக நடந்து வரும் பாலிடிக்ஸ், தற்போது நான்காவதாக ஒரு அணியை உருவாக்கி விட்டுள்ளது.
மாஜி எம்எல்ஏவான மருத்துவர், இலைக்கட்சியில் சேர்ந்ததில் இருந்து, அவர் தனது ஆதரவாளர்களுடன் தனி ஆவர்த்தனம் செய்கிறாராம். சமீபத்தில் இலைக்கட்சி சார்பில் தூங்கா நகரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் இவரது ஆதரவாளர்கள், தனியாக கோஷமிட்டது, தலைமை வரை சென்றுள்ளது. ஏற்கனவே கோட்டையாக இருந்தது, சேலத்துக்காரர் தலைமையேற்றதும் பெரும் ஓட்டையாக மாறி கிடக்கிறது. இதில் 4, 5 அணியாக செயல்பட்டால் நிலைமை மேலும் கவலைக்கிடமாகும் என தலைமைக்கு தூங்காநகர மாஜி நிர்வாகிகள் சிலர் கூறியுள்ளனராம்…
சீனியர்கள் – ஜூனியர் இடையே நடக்கும் இந்த கோஷ்டி பூசலை எப்படி சமாளிப்பது என தெரியாமல் தலைமை விழி பிதுங்கி நிற்கிறதாம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘மம்மியை மறந்தவங்க லீடரையாவது நினைக்கிறாங்களா பார்ப்போம் என இலைக்கட்சி விசுவாசிகள் குமுறுகிறாங்களாமே..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘இலை கட்சியில் இருந்து கொண்டு பெரும் பதவிகளை அனுபவித்தவர்களும், அதிகார மையங்களாக இருந்தவர்களும் மறைந்த மூன்றெழுத்து தலைவரையும், மம்மியையும் ஒரு பொருட்டாகவே நினைப்பதில்லை என்ற பெருங்குமுறல் ஒலிக்க ஆரம்பிச்சிருக்காம்..
சமீப காலங்களாகவே இலைகட்சியில் யார் பெரியவர்? அந்த கட்சியின் சின்னம் யாருக்கு? யார் தான் உண்மையான இலைக்கட்சி என்று முட்டல் மோதல்கள் தொடர்ந்து வருது.. தற்போதைய நிலவரப்படி அனைத்தும் சேலத்துக்காரருக்கு சாதகமாகவே இருக்கிறது.. இது ஒருபுறமிருக்க, இவர்களின் அதிகார யுத்தம் மூன்றெழுத்து தலைவரையும், மம்மியையும் மறக்கடிச்சிருக்கு என்ற குமுறல் கட்சியின் தீவிர விசுவாசிகளிடம் எழுந்திருக்காம்.. சேலத்துக்காரர் ஒரு புறம் நான்தான் அதிகாரப்பூர்வ இலைக்கட்சி என்கிறார்.
அதேநேரத்தில் தேனிக்காரர், குக்கர்காரர், சின்னமம்மி என்று அனைவரும் மூன்றெழுத்து தலைவர், மம்மி பெயரை சொல்லித்தான் அரசியல் நடத்திக் கொண்டிருக்கின்றனர். சமீபத்தில் மம்மியின் நினைவு நாளுக்கு இவர்கள் மூன்று பேரும் மாநிலத்தின் தலைநகரில் மரியாதை செலுத்தினாங்க.. ஆனால் இவர்களின் ஆதரவாளர்கள் என்று வலம் வருவோர் பெரும்பாலான மாவட்டங்களில் மரியாதை செலுத்தவில்லையாம்.. இது மிகவும் வேதனையானது. வரும் 17ம்தேதி மூன்ெறழுத்து தலைவரின் பிறந்தநாள் வருகிறது.
அன்றைய தினத்திலாவது இவர்களது ஆதரவாளர்கள் தலைவருக்கு மரியாதை செய்வாங்களான்னு பார்க்கிறோம் என்பதுதான் கட்சி விசுவாசிகளின் குமுறலாம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘இலை கட்சியில் முக்கிய நிர்வாகிகளுக்கு ரெஸ்பான்ஸ் இல்லாததால் மேலிடத்திற்கு பிரச்னையை கொண்டு செல்லப் போறாங்களாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘சமீபத்தில் டெல்டாவில் இலை கட்சியில் முக்கிய நிர்வாகிகளுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டதாம்..
பொறுப்பு வழங்கிய பிறகு, ஆரம்பத்தில் அவர்களுக்கு இலை கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் ரெஸ்பான்ஸ் தந்தார்களாம்.. தற்போது, நிலைமை தலைகீழாக உள்ளதாம்.. நிர்வாகிகள், தொண்டர்கள் முக்கிய நிர்வாகிகளை மதிப்பது கிடையாதாம்.. அவர்களை இவர்கள் கண்டுகொள்வதும் கிடையாதாம்.. இந்த விஷயத்தை தற்போது தலைமைக்கு எடுத்து செல்ல முக்கிய நிர்வாகிகள் முடிவு எடுத்துள்ளார்களாம்.. நிர்வாகிகள், தொண்டர்கள் தங்களுக்கு வேண்டிய நபர்கள் மூலம் இப்பிரச்னையை மேலிடத்திற்கு கொண்டு சென்றாலும், அதை சரிகட்டும் வேலையில் இறங்கியுள்ளார்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘பட்டா மாறுதல் விவகாரத்தில் அம்மணியின் அடாவடியால் உள்ளூர்வாசிகள் ரொம்பவே கொந்தளிப்பா இருக்காங்களாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘கடல் ஊரில் நிலக்கரிக்கு பெயர் பெற்ற தொகுதிக்குட்பட்ட பலாப்பழ புகழ்வாய்ந்த ஊரின் வருவாய் எல்லையில் விஏஓ அலுவலகம் ஒன்று உள்ளதாம்.. இதை சுற்றிய பகுதிகளில் வசிக்கும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகள் பட்டா மாறுதல் மற்றும் அடிப்படை சான்றிதழ்களை பெற அங்கு வந்து செல்வார்களாம்.. இந்த ஆபீசில் 2 வருடமாக பணிபுரியும் பெண்மணி, துணிச்சலாக முறைகேட்டில் ஈடுபடுகிறாராம்..
விவரம் தெரிந்தவர்கள் ஆதாரங்களுடன் சென்று தட்டிக் கேட்டால் மேலிடத்தை கைகாட்டி தப்பிக் கொள்கிறாராம்.. மேலும் வாரத்தில் 3, 4 நாட்கள் மட்டுமே பணிக்கு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ள அந்த அம்மணி, பட்டா மாறுதல் விவகாரத்தில் இருதரப்புக்கு இடையே மோதலை ஏற்படுத்திவிட்டு வேடிக்கை பார்ப்பதிலும், அடாவடி செய்வதிலும் கைதேர்ந்தவராம்.. இதுபற்றி பலாப்பழ வட்டாட்சியரிடம் புகார் சென்றும், அங்கேயே கிடப்பில் உள்ளதாம்.. மாவட்ட நிர்வாகத்தின் பார்வைக்கு கடிதம் அனுப்பப்படாமல் அடக்கி வாசிக்கப்படுகிறதாம்.. இதனால் கொந்தளிப்பில் உள்ள உள்ளூர்வாசிகள் விரைவில் கடல் ஊருக்கு படையெடுத்து பவர்புல் அதிகாரியை சந்திக்க முடிவு செய்துள்ளார்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
The post கட்சிக்குள் நாலாவது அணியும் உருவாகியிருப்பதால் இலை தலைமை விழி பிதுங்கியிருப்பதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.