
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள மன்னார் வளைகுடா கடல் பகுதியில் ஆமை, டால்பின், கடல் பசு, கடல் குதிரை, கடல் பன்றி உள்ளிட்ட 3600 வகையான அரியவகை கடல் வாழ் உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. இதைத்தவிர இயற்கையாகவே பல வகையான பாசிகள், தாழை செடி, கடல்புல் உள்ளிட்டவைகளும் உள்ளன. இதற்கிடையே திருப்புல்லாணி அருகே உள்ள களிமண்குண்டு கடற்கரை மற்றும் பெரியபட்டினம் கடற்கரை பகுதிகளிலும் ஆங்காங்கே கடல் சீற்றம் மற்றும் நீரோட்டத்தால் பாசி செடிகளும், தாழை செடிகளும் கடற்கரை பகுதி முழுவதும் கரை ஒதுங்கி கிடக்கின்றன. இதேபோல் கீழக்கரை, ஏர்வாடி உள்ளிட்ட கடற்கரை பகுதிகளிலும் ஆங்காங்கே பாசி மற்றும் தாழை செடிகள் கரை ஒதுங்கி கிடக்கின்றன.
இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், கடல் சீற்றம் மற்றும் நீரோட்டம் அதிகமாக இருக்கும்போது கடலின் அடியில் வளர்ந்து நிற்கும் பாசி, தாழை செடிகள் பெயர்ந்து நீரோட்ட வேகத்தால் கடற்கரையில் கரை ஒதுங்கிவிடும். இதனால் எந்த ஒரு பயமும் இல்லை என்றனர். கரை ஒதுங்கி கிடக்கும் இச்செடிகளை ஆமை, கடல் பசு உள்ளிட்ட உயிரினங்கள் உணவாக சாப்பிடும் என்பது குறிப்பிடத்தக்கது.