
கோவை,
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவில் காவலாளியாக பணியாற்றியவர் அஜித்குமார் (வயது 28). தன் காரில் இருந்த நகைகள் மாயமாகி இருப்பதாக நிகிதா என்ற பெண் அளித்த புகார் தொடர்பாக அஜித்குமாரை போலீஸ் விசாரணைக்கு அழைத்து சென்றனர்.
அப்போது, மானாமதுரை தனிப்படை போலீசார் தாக்கியதில் கடந்த 29-ந்தேதி அஜித்குமார் உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காவலாளி அஜித்குமார் மீது நகை திருட்டு புகார் கொடுத்த நிகிதா மீது தற்போது அனைவரது கவனமும் திரும்பியுள்ளது. நிகிதா மீது ஏற்கனவே பல்வேறு மோசடி புகார்கள் இருந்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அவரால் பாதிக்கப்பட்ட பலர் போலீசில் புகார் அளித்த வண்ணம் உள்ளனர்.
இந்தநிலையில், கைது நடவடிக்கைக்கு பயந்து நிகிதா கோவையில் பதுங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. கோவை-பொள்ளாச்சி சாலையில் உள்ள ஒரு ஓட்டலுக்கு நிகிதா, அவரது தாயார் ஒரு காரில் டிரைவருடன் வந்துள்ளனர். பின்னர் ஓட்டலில் அமர்ந்து அவர்கள் சாப்பிட்டுள்ளனர்.
இதைப்பார்த்த சிலர், அவர்களிடம் விசாரித்துள்ளனர். பின்னர் அவர்களை சிறைபிடித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். போலீஸ்நிலையத்துக்கும், கட்டுப்பாட்டு அறைக்கும் அவர்கள் தகவல் சொன்னதாக கூறப்படுகிறது. சுமார் 2 மணி நேரம் கடந்தும் போலீசார் யாரும் அங்கு செல்லாததால் தகவல் சொன்னவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இதையடுத்து நிகிதாவை விடுவித்துவிட்டு அவர்கள் அங்கிருந்து சென்றனர். நிகிதா, தனது தாயாரை அழைத்துக்கொண்டு காரில் புறப்பட்டுச் சென்றுள்ளார். அந்த கார் கோவையை நோக்கிச் சென்றதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். இதனால் நிகிதா கோவையில் தஞ்சம் அடைந்து இருக்கலாம் என கூறப்படுகிறது.
நிகிதா, ஓட்டலில் அமர்ந்திருக்கும் காட்சி மற்றும் அவரை சிறைபிடித்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்து உரையாற்றிய ஆடியோக்கள் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.