
டி.ஆர்.டி.ஓ. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
கடல் நீரை குடிநீராக்குவதற்கான சுத்திகரிப்பு பணிக்காக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) மிக மெல்லிய வடிகட்டி ஒன்றை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது. கான்பூரிலுள்ள டி.ஆர்.டி.ஓ. ஆய்வகமான பாதுகாப்புப் பொருட்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DMSRDE), இந்த பாலிமெரிக் ஜவ்வு அமைப்பை உருவாக்கியுள்ளது. இந்திய கடலோர காவல்படை (ICG) கப்பல்களில் உள்ள கடல்நீர் சுத்திகரிப்பு கருவிகளில் இப்புதிய நவீன வடிகட்டி பெரிதும் பயன்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெறும் எட்டு மாதங்களில் இதனை உருவாக்கும் பணி நிறைவடைந்துள்ளது.
டி.ஆர்.டி.ஓ., இந்திய கடலோர காவல்படையின் ஒரு ரோந்து கப்பலில் (OPV) இப்புதிய வடிகட்டி அமைப்பை வெற்றிகரமாக சோதனை செய்தது. அதன் செயல்திறன் திருப்திகரமாக இருப்பதாகக் கண்டறியப்பட்டது. எனினும், 500 மணிநேர தொடர் சோதனைக்குப் பிறகு அதற்கான முழு அனுமதி கடலோர காவல் படையால் வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.