
கடலூர்,
கடலூா் அருகே தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளிக்கு சொந்தமான வேன் ஒன்று கடலூர் அருகே உள்ள தொண்டமாநத்தம், சின்னகாட்டு சாகை ஆகிய கிராம பகுதிகளுக்கு மாணவர்களை ஏற்றி வர சென்றது. அந்த பள்ளி வேனை கடலூர் மஞ்சக்குப்பத்தை சேர்ந்த சின்னபையன் மகன் சங்கர் (வயது 47) என்பவர் ஓட்டினார்.
அந்த வேனில் சின்னகாட்டு சாகையைச் சேர்ந்த திராவிடமணி மகள் 11-ம் வகுப்பு படித்து வரும் சாருமதி (16), 10-ம் வகுப்பு படித்து வரும் அவரது தம்பி செழியன் (15), தொண்டமாநத்தம் விஜயசந்திர குமார் மகன் 10-ம் வகுப்பு படித்தும் வரும் விஸ்வேஷ் (15), 6-ம் வகுப்பு படித்து வரும் அவனது தம்பி நிமலேஷ் (12) ஆகிய 4 பேர் ஏறினர்.
பின்னர் அங்கிருந்து கடலூர் முதுநகர் பகுதியில் மாணவர்களை ஏற்றுவதற்காக வேன் அங்கிருந்து வந்து கொண்டிருந்தது. காலை 7.30 மணிக்கு செம்மங்குப்பம் ரெயில்வே கேட் அருகே அந்த பள்ளி வேன் வந்தது. அங்கு ரெயில்வே கேட் திறந்து இருந்தது. இதையடுத்து, எப்போதும்போல், சங்கர் வேனை முன்னோக்கி இயக்கி, ரெயில்வே கேட்டை கடந்து செல்ல முயன்றார்.
அந்த சமயத்தில், விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை நோக்கி சென்ற பயணிகள் ரெயில் வந்தது. இதனால் வேன் டிரைவர் என்ன செய்வதென்று தெரியாமல், யோசிப்பதற்குள் மின்னல் வேகத்தில் ரெயில் பள்ளி வேன் மீது மோதியது. இதில் ரெயில் என்ஜினுடன் பல அடி தூரத்துக்கு இழுத்து செல்லப்பட்ட வேன் சுக்குநூறாக உடைந்து பள்ளத்தில் விழுந்தது.
மேலும் ரெயில்வே கேட் கீப்பர் அறைக்கு வெளியில் இருந்த இரும்பு கம்பிகள் உடைந்தன. ரெயில் தண்டவாளத்தில் இருந்த மின்கம்பம் ஒன்று உடைந்து பல அடி தூரத்தில் விழுந்தது.
இந்த கோரவிபத்தில் பள்ளி வேனில் இருந்த மாணவி சாருமதி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். வேன் இடிபாடுகளுக்கு இடையே சிக்கி படுகாயம் அடைந்த டிரைவர் மற்றும் 3 மாணவர்கள் வலி தாங்க முடியாமல் கூச்சலிட்டனர்.
இதை பார்த்த செம்மங்குப்பத்தை சேர்ந்த அண்ணாதுரை (55) என்பவர் காப்பாற்றுவதற்காக ஓடி வந்தார். அப்போது தண்டவாளத்துக்கு மேல் சென்ற உயரழுத்த மின்கம்பி திடீரென அறுந்து அவர் மீது விழுந்தது. இதில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு அவர் படுகாயம் அடைந்தார். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
விபத்து பற்றிய தகவல் அறிந்து வந்த கடலூர் முதுநகர் போலீசார் காயம் அடைந்த மாணவர்கள் உள்பட 5 பேரை சிகிச்சைக்காகவும், பலியான மாணவி சாருமதி உடலை பிரேத பரிசோதனைக்காகவும் கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவர் நிமலேஷ் பரிதாபமாக உயிரிழந்தான்.
மேலும் முதல் உதவி சிகிச்சைக்கு பிறகு மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவர் செழியன் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் இந்த கோர விபத்தில் பலி எண்ணிக்கை 3 ஆக அதிகரித்தது. பள்ளி வேன் டிரைவர் உள்பட மற்ற 3 பேருக்கும் கடலூர் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே விபத்து நடந்த இடத்தை மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. உமா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். மேலும் ரெயில்வே அதிகாரிகள், போலீசாரும் வந்து விசாரணை நடத்தினர். விபத்து நடந்த இடத்தை தென்னக ரெயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் நேரில் சென்று பார்வையிட்டு அதிகாரிகளிடம் விபத்து குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "இந்த விபத்துக்கு கேட் கீப்பரின் கவனக்குறைவு மற்றும் அலட்சியப் போக்கே காரணம். நாட்டில் உள்ள ரெயில்வே கேட்கள் 100 சதவீதம் கேட் கீப்பருடன் இயக்கப்பட்டு வருகிறது. ஆளில்லாத ரெயில்வே கேட்டே இல்லை என்ற நிலை உள்ளது. அதிக போக்குவரத்து உள்ள இடங்களில், கேட் மூடப்படுவதற்கும், சிக்னலை தெரிந்து கொள்வதற்கும் 'இன்டர் லாக்' என்ற முறை பயன்படுத்தப்பட்டு வருகிறது. அது இங்கு இல்லை.
இங்கு இன்டர் லாக் இல்லாத முறை இருப்பதால், ரெயில்வே தொலைபேசி மூலம் அருகில் உள்ள நிலைய மேலாளரிடம் குறிப்பிட்ட எண்கள் பரிமாற்றத்திற்கு பின் கேட் மூடப்பட்டு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் இன்டர் லாக் சிக்னலுடன் இணைப்பு பணிகள் பல இடங்களில் நடைபெற்று வருகிறது. போக்குவரத்து குறைந்த அளவில் இருந்தாலும் பாதுகாப்பு நலன் கருதி, இன்டர் லாக் முறைகளை செயல்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டு சில இடங்களில் சுரங்கப்பாதை அமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்று கூறினார். முன்னதாக திருச்சி ரெயில்வே கோட்ட மேலாளர் அன்பழகன் விபத்து நடந்த இடத்தை நேரில் வந்து பார்வையிட்டார்.
ரெயில் மோதி 3 பேர் பலியான சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், இந்த ரெயில்வே கேட் ஆட்களால் மூடி, திறக்கக்கூடியது. ரெயில் வரும்போது பச்சை நிற சிக்னல் விளக்கு எரிந்தது. இதனால் ரெயில், அந்த இடத்தை கடந்து சென்றது. ஆனால் கேட் கீப்பர், ரெயில்வே கேட்டை மூடவில்லை. மாறாக திறந்து வைத்திருந்தார். ரெயில் வரும்போது, அவர் போர்வையை இழுத்து போர்த்தி தூங்கிக் கொண்டிந்தார். அதுதான் இந்த விபத்துக்கு காரணம் என்று தெரிவித்தனர்.
ரெயில்வே கேட் கீப்பருக்கு பொதுமக்கள் தர்ம அடி
கடலூர் செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரெயில் மோதி 3 மாணவர்கள் பலியான விபத்துக்கு, ரெயில்வே கேட் கீப்பரான மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த பங்கஜ் சர்மா அலட்சியமாக செயல்பட்டதே காரணம் என்று தெரியவந்தது.
ரெயில்வே கேட்டை மூடாமல் பங்கஜ் சர்மா தூங்கியதால்தான் இந்த கோர விபத்து நேர்ந்ததாக அந்த பகுதியில் தகவல் பரவியது. இதனால் கொதித்தெழுந்த அந்த பகுதி மக்கள் 200-க்கும் மேற்பட்டவர்கள் அங்கு திரண்டு வந்தனர். தொடா்ந்து அவர்களில் சிலர், பங்கஜ் சர்மாவுக்கு தர்ம அடிகொடுத்தனர்.
அவர்களிடம் இருந்து தப்பிய கேட் கீப்பர் அங்கிருந்த அறைக்குள் சென்று பதுங்கினார். இதையடுத்து கேட் கீப்பர் அறையை முற்றுகையிட்டு அவரை மீண்டும் தாக்க பொதுமக்கள் முயற்சி செய்தனர்.
இந்த சூழலில் அங்கு வந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, கலைந்து போக செய்தார். நீண்ட நேரத்துக்கு பின், சிதம்பரம் ரெயில்வே போலீசார் அங்கு வந்து, பங்கஜ் சர்மாவை அங்கிருந்து சிதம்பரத்துக்கு அழைத்துச்சென்றனர்.
இதனைத்தொடர்ந்து பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்த வழக்கில் கேட் கீப்பர் பங்கஜ் சர்மா சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் ரெயில்வே கேட்டை மூடாமல் அலட்சியமாக இருந்ததாக கைது செய்யப்பட்ட கேட் கீப்பர் பங்கஜ் சர்மா மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவை பணியிடை நீக்கம் செய்து தெற்கு ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது குறிப்பிடத்தக்கது.