
கடலூர்,
கடலூரில் செம்மங்குப்பம் அருகே பள்ளி வேன் ஒன்று குழந்தைகளை ஏற்றி கொண்டு இன்று காலை சென்று கொண்டிருந்தது. அப்போது, வழியில் ஆளில்லா லெவல் கிராசிங் ஒன்று இருந்தது. அதன் வழியே அந்த பள்ளி வேன் கடந்து செல்ல முயன்றது.
ரெயில்கள் செல்லும் வழியில் உள்ள இதுபோன்ற ஆளில்லா லெவல் கிராசிங்கில் வாகனங்கள் செல்லும்போது, கவனத்துடன் செல்ல வேண்டியது அவசியம் என தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது.
இந்நிலையில், பள்ளி வேன் சென்றபோது, அந்த பகுதியின் வழியே சிதம்பரம் நோக்கி ரெயில் சென்றது. அது பள்ளி வேன் மீது மோதி கோர விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில், வேனில் இருந்த குழந்தைகள் படுகாயம் அடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்து, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி சென்று அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த சம்பவத்தில், 2 பேர் பலியாகி உள்ளனர். வேன் ஓட்டுநர் மற்றும் பள்ளி குழந்தைகள் பலர் காயம் அடைந்து உள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். பலருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விசாரணைக்கு பின்னரே விபத்துக்கான காரணம் பற்றி தெரிய வரும்.