இஸ்ரேலுடனான போரில் 1,060 பேர் பலி; ஈரான் அரசு அறிவிப்பு

5 hours ago 1

தெஹ்ரான்,

காசா மீது ஓராண்டுக்கும் மேலாக இஸ்ரேல் போர் தொடுத்து வரும் சூழலில், ஈரானும் கடந்த ஆண்டு அக்டோபரில் இஸ்ரேல் குடியிருப்புகளை இலக்காக கொண்டு, 200-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தியது. அதற்கு பதிலடி தரும் வகையில், ஈரான் மீதும் இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தியது.

ஈரானில் அணுசக்தி நிலையங்கள் அமைந்த நடான்ஸ் மற்றும் இஸ்பாஹன் ஆகிய இடங்கள் மற்றும் ஏவுகணை தளங்கள் அமைந்த தப்ரீஸ் மற்றும் கெர்மன்ஷா மற்றும் தெஹ்ரான் நகரில் உள்ள கட்டுப்பாட்டு மையங்கள் உள்பட 100-ககும் மேற்பட்ட இடங்களை இலக்காக கொண்டு, ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் கடந்த ஜூன் 13-ந்தேதி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.

200-க்கும் மேற்பட்ட விமானங்கள் மற்றும் ஆளில்லா விமானங்களை கொண்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. ஈரான் புரட்சி படை தளபதி உசைன் சலாமி மற்றும் அணு விஞ்ஞானி பெரேதூன் அப்பாஸி உள்ளிட்ட பலர் உயிரிழந்தனர். ஈரானின் மத்திய தெஹ்ரானில் நடந்த வான்வெளி தாக்குதலில், மிக மூத்த ராணுவ தளபதியான மேஜர் ஜெனரல் அலி ஷாத்மனி படுகொலையானார்.

மேஜர் ஜெனரல் குலாம் அலி ரஷீத்தும் கொல்லப்பட்டார். ஷாத்மனி, ஈரான் தலைவர் அயோத்துல்லா அலி காமினியின் நெருங்கிய ராணுவ ஆலோசகர் மற்றும் புரட்சி படைகள், ஆயுத படைகள் ஆகியவற்றின் தளபதியாகவும் செயல்பட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், ஈரானின் வீரமரணம் அடைந்தவர்கள் மற்றும் படைவீரர்கள் விவகாரங்களுக்கான அறக்கட்டளையின் தலைவர் சயீத் ஒஹாதி, ஈரானின் அரசு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின்போது, இஸ்ரேலுடனான போரில் 1,060 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்த எண்ணிக்கை 1,100 ஆக அதிகரிக்க கூடும் என்று கூறினார். சிலர் கடுமையாக காயமடைந்து உள்ளனர் என்றும் கூறினார்.

எனினும், வாஷிங்டனை அடிப்படையாக கொண்ட மனித உரிமைகளுக்கான செயற்பாட்டாளர்கள் குழு அளித்த விரிவான தகவலில், இஸ்ரேல் தாக்குதலில் 1,190 பேர் ஈரானில் பலியாகி உள்ளனர். அவர்களில் 436 பேர் பொது மக்கள். 435 பேர் பாதுகாப்பு படையினர் என தெரிவித்து உள்ளது. இதுதவிர, 4,475 பேர் காயமடைந்து உள்ளனர் என்றும் அந்த குழு தெரிவித்து உள்ளது.

Read Entire Article