கடலூர்: கடலூர் முதுநகர் அருகே சிப்காட்டில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் இன்று அதிகாலை பாய்லர் வெடித்து ரசாயன நீர் கிராமத்துக்குள் புகுந்ததால் கண் எரிச்சல் மூச்சுத் திணறல் ஏற்பட்டு 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், 3 வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்தது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் முதுநகர் அருகே உள்ள சிப்காட்டில் ஏராளமான தனியார் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இங்கு உள்ளூர் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.
முதுநகர் அருகே உள்ள குடிகாடு என்ற பகுதியில் ரசாயனத் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்த நிறுவனத்தில் கழிவுநீரை சேமித்து வைத்து சுத்திகரிக்கும் சுமார் 6 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட டேங்க் ஒன்று உள்ளது. இன்று அதிகாலை சுமார் 2.30 மணி அளவில் அந்த பாய்லர் டேங்க் பயங்கர சத்தத்துடன் திடீரென வெடித்துள்ளது. இதனால் நிறுவனத்தில் வேலை பார்த்த தொழிலாளர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே வந்தனர். மேலும் பாய்லர் டேங்க் வெடித்ததால் வெளியேறிய ரசாயன தண்ணீர் ஊருக்குள் புகுந்ததால் அங்கிருந்த மூன்று வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்தன.
இதனால் அந்த பகுதி முழுவதும் கடும் பதற்றம் நிலவியது. இதுகுறித்து தகவல் அறிந்த கடலூர் முதுநகர் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இந்த சம்பவத்தால் கண்ணெரிச்சல் மற்றும் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்ட சுமார் 20க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கழிவுநீர் மிகவும் சூடாக இருந்ததால் சிலருக்கு காயமும் ஏற்பட்டது. அவர்களுக்கும் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் திடீரென கடலூர்-சிதம்பரம் சாலைக்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
வீடுகளுக்குள் புகுந்த ரசாயன கழிவுநீர்
விபத்து நடந்த நிறுவனம் சாயத் தொழிற்சாலை என்பதால் இதிலிருந்து வெளியேறும் கழிவுநீர் அங்கிருக்கும் ஒரு பாய்லரில் சேமித்து வைக்கப்படுகிறது. இதன் பின்னர் அதை சுத்திகரித்து வெளியேற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். ஆனால் திடீரென அந்த டேங்க் வெடித்ததால் அதிலிருந்து ரசாயன கழிவு நீர் முழுவதும் கருப்பு நிறமாக வெளியேறி வீடுகளுக்குள் புகுந்துள்ளது. இதனால் கடும் துர்நாற்றமும் வீசி உள்ளது. இந்தக் கழிவு நீரில் மண் போன்ற படலமும் உள்ளதால் அவை வீடுகளுக்குள்ளும் தேங்கி உள்ளது.
The post கடலூர் சிப்காட்டில் தனியார் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து ரசாயன நீர் கிராமத்துக்குள் புகுந்தது: கண் எரிச்சல், மூச்சு திணறலால் 20 பேர் அட்மிட் appeared first on Dinakaran.