கடலில் பால் ஊற்றி அஞ்சலி செலுத்திய பொதுமக்கள்

3 weeks ago 6

கடலூர், டிச. 27: கடலூரில் 20ம் ஆண்டு சுனாமி நினைவு தினத்தையொட்டி பொதுமக்கள் கடலில் பால் ஊற்றி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி இந்தோனேஷியாவில் உள்ள சுமத்ரா தீவில் கடலுக்கு அடியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் எழுந்த சுனாமி பேரலைகள் தமிழக கடற்கரையை தாக்கி, ஆயிரக்கணக்கானவர்களை பலி வாங்கியது. கடலூர் மாவட்டத்தில் மட்டும் சுனாமி பேரலையில் சிக்கி 610 பேர் பலியானார்கள். சுனாமி பேரலையால் பலியானவர்களின் 20ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி கடலூர் முதுநகர் சிங்காரத்தோப்பில் உள்ள சுனாமி நினைவுத்தூணுக்கு சுனாமியில் பலியானவர்களின் உறவினர்கள் மலர் வளையம் வைத்தும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.

இதையடுத்து தமிழ்நாடு மீனவர் பேரவை சார்பாக அதன் தலைவர் சுப்பராயன் தலைமையில் பொதுமக்கள் ஊர்வலமாக சென்று கடற்கரையில் அஞ்சலி செலுத்தினர். அப்போது பெண்கள் கடலில் பால் ஊற்றியும், மலர்கள் தூவியும் துக்கம் தாங்காமல் கதறி அழுதனர். கடற்கரை மணலில் மெழுகுவர்த்தி ஏற்றியும் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

சுனாமியால் இறந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கடலூர் மாவட்ட மீனவர்கள் யாரும் நேற்று மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் திருப்பாதிரிப்புலியூர், மஞ்சக்குப்பம், முதுநகர், கிஞ்சம்பேட்டை ஆகிய இடங்களில் மீன்மார்க்கெட்டுகள் அடைக்கப்பட்டு இருந்தன. எப்போதும் பரபரப்பாக காணப்படும் கடலூர் மீன்பிடி துறைமுகம் வெறிச்சோடி காணப்பட்டது.

The post கடலில் பால் ஊற்றி அஞ்சலி செலுத்திய பொதுமக்கள் appeared first on Dinakaran.

Read Entire Article