கடலில் கண்டெடுத்த கடகோலு கிருஷ்ணர்

1 month ago 7

துவைத தத்துவத்தை நிறுவிய  மத்வாச்சாரியார், உடுப்பியில் “கடகோலு கிருஷ்ணா’’ அதாவது “வெண்ணெய் துருவிய கிருஷ்ணரையும் பிரதிஷ்டை செய்தார். இங்கு ஆண்டுதோறும் வருகின்ற கிருஷ்ண ஜெயந்தியை வெகு விமர்சையாக கொண்டாடுகிறார்கள். அஷ்ட மடங்களையும் (எட்டு மடங்கள்) சேர்ந்த மடாதிபதிகள் ஒன்றுகூடி, கிருஷ்ணரை பலவிதமாக அலங்கரித்து, ஆராதித்து கொண்டாடுகிறார்கள்.கிருஷ்ணஜெயந்தி அன்று, உடுப்பி கிருஷ்ணருக்குச் சிறப்பு அபிஷேகமும், நடைபெறுகின்றன. கிருஷ்ண பகவான், இரவு நேரத்தில் பிறந்ததாக கூறப்படுகிறது. ஆகையால், கிருஷ்ண ஜெயந்தி அன்றிரவில், உடுப்பி கிருஷ்ணர், கோயிலைச் சுற்றி உள்ள மாடவீதிகளில், வாணவேடிக்கை, ஜெண்டை மேளம், கிருஷ்ணர் வேடமணிந்து குழந்தைகளின் ஊர்வலங்கள், கோலாட்டம், கும்மி என கோலாகலமாக நடைபெறும்.மேலும், நிகழ்ச்சியின் மிக முக்கிய பகுதியாக, உறியடித் திருவிழாவும் வெகு சிறப்பாக கொண்டாடப்படும். கிருஷ்ண ஜெயந்தி தின முழுவதும் உடுப்பியில் ஆட்டமும், பாட்டமும், கொண்டாட்டமும்தான். சரி.. எப்படி கிருஷ்ணர் உடுப்பியில் பிரதிஷ்டையானார்? உடுப்பி கிருஷ்ணருக்கென்று தனிச் சிறப்புகள் என்னென்ன? கனக்கன கிண்டி என்றால் என்ன? என்பதனை பற்றி இவ்வருட கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சிந்திப்போம். வாருங்கள்…

கிருஷ்ணரை கண்டெடுத்த மத்வர்

கர்நாடக மாநிலம், உடுப்பி அருகில் இருக்கும் இடம், பஜக க்ஷேத்திரம் (pajaka kshetra). இங்குதான் மத்வ மார்க்கத்தை உருவாக்கிய  மத்வாச்சாரியார் (1199 CE) பிறந்தார். சிறுவயது முதலே பல வாத – பிரதிவாதங்களில் பங்கேற்று, வெற்றி பெற்றவர். இவர் பல அற்புதங்களை நிகழ்த்தி இருக்கிறார். அதில் ஒன்றுதான் உடுப்பி  கிருஷ்ணரை பிரதிஷ்டை செய்தது.உடுப்பி அருகில் இருக்கும் மால்பே பகுதி, அரபிக் கடல் சார்ந்த பகுதியாகும். ஒரு முறை இந்த இடத்தில் பயங்கரமான புயல் வீசியது. அந்த புயலில் பெரிய படகொன்று சிக்கிக் கொண்டது. இவ்வழியாக சென்ற மத்வாச்சாரியார் இதனைக் கண்டு தத்தளித்துக் கொண்டிருந்த படகை காப்பாற்றுகிறார். அந்த படகில் பயணித்தவர்கள் வைர வியாபாரிகள்.படகை காப்பாற்றியதற்காக, வைர வியாபாரிகள், மத்வாச்சாரியாருக்கு பல வைரங்கள் அடங்கிய சுருக்குப் பை ஒன்றை தருகிறார்கள். “இதுயெல்லாம் எனக்கு வேண்டாம். எனக்கு வேண்டியது உங்களிடம் ஒன்று உள்ளது அதுதான் வேண்டும்’’ என்கிறார், மத்வாச்சாரியார். “எங்களிடம் இந்த விலையுயர்ந்த வைரங்களை தவிர வேறு எதுவும் இல்லையே… அப்படியே இருந்தாலும், இந்த வைரத்திற்கு ஈடானது இருக்கமுடியுமா என்ன?’’ என்று கேள்வி எழுப்பினர் வைர வியாபாரிகள்.

“இருக்கிறது. வைரம் என்ன! அதைவிட விலைமதிப்பற்ற ஒன்று உங்களிடம் இருக்கிறது. அதோ பாருங்கள் அதுதான் எனக்கு வேண்டும்’’ என்று படகில் ஒரு ஓரமாக இருக்கும், சந்தனத்தால் மூடிய ஒரு கல்லை காட்டுகிறார், மத்வாச்சாரியார். “இந்த கல், வைரத்திற்கு ஈடாகுமா?’’ என்று வைர வியாபாரிகள் யோசிக்கிறார்கள். இருந்தும், நம் படகை காப்பாற்றிய மகான் ஆயிற்றே! அவர் கேட்பதை கொடுத்துத்தானே ஆகவேண்டும், என்று மத்வாச்சாரியார் கேட்ட அந்த கல்லை எடுத்துக் கொடுக்கிறார்கள்.  மத்வாச்சாரியார், அதனை பெற்றுக்கொண்டு, கீழே வைக்கிறார். கடல் தண்ணீரை எடுத்து, அந்த சந்தனக்கற்களின் மீது ஊற்றுகிறார். மெதுவாக சந்தனம் கரையக்கரைய, அதிலிருந்து அழகான “கடகோலு கிருஷ்ணர்’’ காட்சியளிக்கிறார். அந்த கிருஷ்ணரைத்தான் உடுப்பியில், பிரதிஷ்டை செய்கிறார், மத்வாச்சாரியார். இவருக்கு பின், கடகோலு கிருஷ்ணரையும், துவைத சமயத்தையும் காக்க அஷ்ட மடங்களை (எட்டு மடம்) உருவாக்குகிறார். இந்த எட்டு மடாதிபதிகளும், இரண்டு ஆண்டிற்கு ஒரு முறை சுழற்சி முறையில் உடுப்பி கிருஷ்ணரை பூஜைசெய்து வருகிறார்கள்.

தனிச் சிறப்பு

கோயிலின் அருகிலேயே ரதம் போல் விறகுகளை அடுக்கி வைத்திருப்பார்கள். உடுப்பி கிருஷ்ணரை பூஜை செய்யும் மடாதிபதிகள், தங்களின் இரண்டு ஆண்டு காலத்திற்குள் அந்த ரதம் போல் இருக்கும் விறகுகளைக் கொண்டு சமைத்து, உடுப்பி கிருஷ்ணரைத் தரிசிக்க வரும் அத்தனை பக்தர்களுக்கும் அன்னதானம் செய்யவேண்டும். இன்றும் தினமும் நடக்கிறது, அன்னதானம். மிகச் சரியாக இரண்டு ஆண்டிற்குள் அந்த விறகுகள் அத்தனையும் தீர்ந்துவிடுகின்றன.

கனக்கன கிண்டி

முன்னொரு காலத்தில், உடுப்பி கிருஷ்ணரை தரிசிப்பதற்காக ஒரு பக்தர் வருகிறார். அவரின் தோற்றத்தை வைத்து அவரைக் கோயிலுக்குள் அனுமதிக்க மறுக்கிறார்கள். அவர் கிருஷ்ணரின் மீது அதீத பிரியம் கொண்டவர். மனம் நொந்து, கிருஷ்ணரின் மீது பாடல்களைப் பாடுகிறார். “பாகிலனு தெரது, சேவேயனு கொடு ஹரியே…’’ என்று உருக்கமாக கன்னடத்தில் பாடுகிறார். அதாவது,“கதவுத் தடுப்புகளையெல்லாம் திறந்து உடைத்து எனக்கு காட்சி தருவாயா…’’ என்று மனமுருகிப் பாடுகிறார். இதில் உடுப்பி கிருஷ்ணர், பிரதிஷ்டை செய்திருந்த இடத்தில் இருந்து திரும்புகிறார். அந்த பக்தர் இருக்கும் சுவர் வெடித்து அங்கு கிருஷ்ணர், அவருக்காகக் காட்சியளிக்கிறார். அந்த பக்தர் வேறு யாருமில்லை, அவர்தான் `கனகதாசர்’. புரந்திரதாசரைப் போல், இவரும் பல பாடல்களை கன்னடத்தில் இயற்றியிருக்கிறார். கிருஷ்ணர்,கனகதாசருக்கு காட்சி கொடுத்த இடத்தில், இன்றும் நாம் நவ துவாரம் (சுவரில் 9 ஓட்டைகள்) வழியாகத்தான் உடுப்பி கிருஷ்ணரை தரிசித்து வருகிறோம். அதற்கு பெயர்தான் கனக்கன கிண்டி. இப்படி பல அற்புதங்களைக் கொண்டது உடுப்பி கிருஷ்ணர் கோயில்.
– ரா.ரெங்கராஜன்

The post கடலில் கண்டெடுத்த கடகோலு கிருஷ்ணர் appeared first on Dinakaran.

Read Entire Article