திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே கடம்பத்துார் ரயில் நிலையத்தில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் திருவள்ளூர் மற்றும் சென்னை மார்க்கத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று வருகின்றனர். இந்த ரயில் நிலையம் வழியாக புறநகர் ரயில்கள், விரைவு ரயில்கள், அதிவிரைவு ரயில்கள் செல்கின்றன. ஒவ்வொரு ரயில் செல்லும்போதும் ரயில்வே இருப்பு பாதை கேட் மூடப்படுவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வந்தனர்.
இதனையடுத்து பொது மக்களின் வேண்டுகோளை ஏற்று ரூ.14.5 கோடி மதிப்பில் ரயில்வே மேம்பாலம். கட்டும் பணி 2015ல் துவங்கி 2022ம் ஆண்டில் பயன்பாட்டிற்கு வந்தது. இந்த மேம்பாலம் வழியாக தினமும் புதுமாவிலங்கை, அகரம், சத்தரை, பேரம்பாக்கம், இருளஞ்சேரி, கூவம், குமாரச்சேரி, கீழச்சேரி, மப்பேடு, சிற்றம்பாக்கம், நரசிங்கபுரம், களாம்பாக்கம், போன்ற சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள், மருத்துவமனைக்கு செல்பவர்கள் என தினமும் ஆயிரக்கணக்கானோர் பயணித்து வருகின்றனர்.
மேலும் இந்த ரயில் நிலையத்தில் சுரங்கப்பாதை வசதி இல்லாமல் இருந்தது. அதற்காக கடந்த 2022, டிசம்பர் மாதம் ரூ.5.50 கோடி மதிப்பீட்டில் 300 அடி நீளம் 16 அடி அகல 9 அடி உயரத்தில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி துவங்கப்பட்டது. 6 மாதத்தில் முடிக்க திட்டமிட்டதாக கூறப்பட்ட இந்த பணி தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதே நேரத்தில் ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் ஆபத்தை உணராமல் தண்டவாளத்தை கடந்து செல்லும் போது ரயில் மோதி உயிரிழந்து வரும் சம்பவமும் தொடர்ந்து வருகிறது. மேலும் சரக்கு ரயில்களை அடிக்கடி நிறுத்தி விடுவதால் அதில் நுழைந்து செல்லும் காட்சியும் அரங்கேறி வருகிறது. எனவே கடம்பத்தூரில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க ரயில்வே துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post கடம்பத்தூர் ரயில் நிலையம் அருகே சுரங்கப்பாதை இல்லாததால் மக்கள் அவதி appeared first on Dinakaran.