கடன் தொல்லையால் அண்ணா நகரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை: போலீசார் விசாரணையில் தகவல்

5 hours ago 3

சென்னை: சென்னை அண்ணாநகர் மேற்கு 17வது பிரதான சாலையில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு உள்ள 2 வது தளத்தில் கடந்த 3 வருடங்களாக டாக்டர் பாலமுருகன் (57), மனைவி சுமதி (47), மகன்கள் ஜஸ்வந்த் குமார்(19), லிங்கேஷ்குமார்(16) ஆகியோர் வசித்து வந்தனர். டாக்டர் பாலமுருகன், அண்ணாநகர் 13வது பிரதான சாலையில் ஸ்கேன் சென்டர் நடத்திவந்தார். சுமதி, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞராக பணியாற்றிவிட்டு தற்போது பணிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதில், மூத்த மகன் ஜஸ்வந்த்குமார் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றுவிட்டு தற்போது நீட் தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார். மற்றொரு மகன் லிங்கேஷ்குமார், அண்ணாநகரில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்துள்ளார்.

கடந்த 13ம் தேதி காலை 7 மணி அளவில், டாக்டர் பாலமுருகன் வீட்டு வேலைக்கார பெண் ரேவதிக்கு வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. இதனால் அதற்கு என்ன மாத்திரை போடவேண்டும் என்று கேட்பதற்காக பாலமுருகனின் செல்போனுக்கு தொடர்பு கொண்டுள்ளார். நீண்ட நேரம் செல்போனில் ரிங் அடித்துகொண்டே இருந்துள்ளது. யாரும் போனை எடுத்து பேசவில்லை என்பதால் பதற்றம் அடைந்த வேலைக்கார பெண் உடனடியாக சுமதி செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது, அந்த போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்ததால் மேலும் பதற்றம் அடைந்தார். இதையடுத்து, அடுத்தடுத்து டாக்டரின் மகன்களின் செல்போனுக்கு அழைத்தபோதும் எந்தவித பதிலும் அளிக்கவில்லை என்றதும் வேலைக்கார பெண் அதிர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து பதற்றத்துடன் டாக்டர் வீட்டுக்கு வந்த ரேவதி, நீண்டநேரம் கதவை தட்டியும் திறக்கவில்லை என்றதும் அக்கம்பக்கத்தினர் உதவியை நாடியுள்ளார். ஆனால் உதவிக்கு யாரும் வராததால் அங்கேயே கதறி அழுதபடி சுற்றி, சுற்றி வந்துள்ளார். இதன்பிறகு ஒருசிலர் வந்து கேட்டபோது விஷயத்தை தெரிவித்ததும் உடனடியாக முன்பக்க கதவின் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். அங்கு ஒரு அறையில் டாக்டர், அடுத்தடுத்த அறைகளில் தனித்தனியாக மகன்கள், மற்றொரு அறையில் டாக்டரின் மனைவி ஆகியோர் தூக்கில் பிணமாக கிடந்ததால் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுபற்றி சென்னை காவல் கட்டுபாட்டு அறைக்கு தகவல் கொடுத்ததும் போலீசார் விரைந்துவந்தனர். பின்னர் வீட்டில் சென்று விசாரித்தனர். இதுபற்றி அறிந்ததும் திருமங்கலம் போலீசார் வந்து விசாரணை மேற்கொண்டனர். அண்ணாநகர் மேற்கு இணை ஆணையர் கல்யாண், அண்ணாநகர் துணை ஆணையர் சிநேகபிரியா ஆகியோர் வந்து ஆய்வு செய்தனர். இதில், டாக்டர் பாலமுருகன், மனைவி சுமதி, மகன்கள் ஜஸ்வந்த், லிங்கேஷ் ஆகியோர் தற்கொலை செய்திருப்பது தெரிந்தது. அவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த தற்கொலை குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். பாலமுருகன் ரூ.5 கோடிக்கு மேல் கடன் வாங்கியதால் தான், தற்கொலை முடிவை எடுத்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், பாலமுருகன் 5 ஸ்கேன் சென்டர் நடத்தி வந்த நிலையில் தொழிலுக்காக ரூ. 6 கோடி வரை கடன் வாங்கியுள்ளது தெரியவந்துள்ளது. பாலமுருகன் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்னதாக யாரோ ஒரு நபர், அவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு ரூ. 1 கோடி நாளைக்கே கொடுக்க வேண்டும், இல்லை என்றால் நேரடியாக வீட்டிற்கே வந்து அவமானப்படுத்துவேன் என தெரிவித்ததால் தான் தற்கொலை முடிவை எடுத்துள்ளதாக போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பாலமுருகனை தொடர்பு கொண்டு பேசிய நபர் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் தற்கொலை செய்யப்பட்டவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 5 செல்போன்கள் சைபர் ஆய்வகத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளது. கடனை அடைப்பதற்காக ஸ்கேன் சென்டர் மூலம் லோன் எடுக்க திட்டமிட்டதும், சிபில் ஸ்கோர் குறைவாக இருந்ததால் லோன் கிடைக்காததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. பிரேத பரிசோதனையில் உயிரிழந்த அனைவரும் தற்கொலை செய்துகொண்டு தான் உயிரிழந்தனர் என உறுதியாகியுள்ளது. தற்கொலை குறித்து 10க்கும் மேற்பட்டோரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கடன் தொல்லையால் அண்ணா நகரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை: போலீசார் விசாரணையில் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article