கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வன்முறையால் பாதிப்பு; மக்களிடம் மன்னிப்பு கேட்ட மணிப்பூர் முதல்வர்: கடந்த கால தவறுகளை மறந்து ஒற்றுமையாக வாழ அழைப்பு

3 weeks ago 5

இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகாலமாக நடக்கும் வன்முறை சம்பவங்களுக்காக அம்மாநில மக்களிடம் முதல்வர் பிரேன் சிங் மன்னிப்பு கேட்டுள்ளார். மக்கள் கடந்த கால தவறுகளை மறக்க வேண்டும், மன்னிக்க வேண்டும். 2025ல் ஒற்றுமையாக வாழ்வோம் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மணிப்பூரில் கடந்த ஆண்டு இரு சமூகத்தை சேர்ந்தவர்களிடையே இனக்கலவரம் வெடித்தது. ஒன்றரை ஆண்டுகளாக நீடிக்கும் வன்முறை சம்பவங்களில் சுமார் 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர். இதுவரை 625 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் 12047 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2023ம் ஆண்டு மே மாதம் முதல் அக்டோபர் வரை 408 துப்பாக்கி சூடு சம்பவங்களும், 2023ம் ஆண்டு நவம்பர் முதல் இந்த ஆண்டு ஏப்ரல் வரை 345 துப்பாக்கி சூடு சம்பவங்களும் அரங்கேறியுள்ளது. இந்த ஆண்டு மே மாதம் முதல் தற்போது வரை 112 துப்பாக்கி சூடு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது. இம்பாலில் ஆங்கில புத்தாண்டுக்கு முன்னதாக நேற்று முதல்வர் பிரேன் சிங் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய முதல்வர் பிேரன் சிங், ‘‘மாநிலத்தில் நடந்த வன்முறை சம்பவங்களுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். பலர் தங்களது அன்புக்குரியவர்களை இழந்தனர். பலர் தங்களது வீட்டை விட்டு வெளியேற வேண்டியிருந்தது. அதற்காக நான் வருந்துகிறேன் மற்றும் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். ஆனால் கடந்த மூன்று -நான்கு மாதங்களில் ஓரளவு அமைதியை கண்ட பிறகு வரும் ஆண்டில் இயல்பு நிலை திரும்பும் என்று நான் நம்புகிறேன். என்ன நடந்ததோ அது நடந்துவிட்டது.

நமது கடந்த கால தவறுகளை மன்னிக்கவும், மறந்துவிடவும் வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன். அமைதியான மற்றும் வளமான மணிப்பூரில் ஒன்றாக வாழ்வதன் மூலமாக புதிய வாழ்க்கையை தொடங்க வேண்டும் என்று அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

பிரதமர் மோடி ஏன் மணிப்பூர் சென்று மக்களிடம் மன்னிப்பு கேட்கவில்லை? காங்கிரஸ் கேள்வி
காங்கிரஸ் பொதுசெயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தன் எக்ஸ் பதிவில், “மணிப்பூர் கலவரத்துக்கு ஓராண்டுக்கு பிறகு முதல்வர் பிரேன் சிங் மன்னிப்பு கேட்டுள்ளார். ஆனால் பிரதமர் மோடி கடந்த 2023 மே 4ம் தேதி முதல் நாடு மற்றும் உலகம் முழுவதும் ஜெட் விமானங்களில் பயணம் செய்து வருகிறார். ஆனால் அவர் ஏன் மணிப்பூர் சென்று அங்குள்ள மக்களிடம் மன்னிப்பு கேட்கவில்லை? பிரதமர் மோடி மணிப்பூர் செல்வதை வேண்டுமென்றே புறக்கணித்து வருகிறார். அவரது இந்த புறக்கணிப்பை மணிப்பூர் மக்களால் புரிந்து கொள்ள முடியவில்லை” என தெரிவித்துள்ளார்.

The post கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வன்முறையால் பாதிப்பு; மக்களிடம் மன்னிப்பு கேட்ட மணிப்பூர் முதல்வர்: கடந்த கால தவறுகளை மறந்து ஒற்றுமையாக வாழ அழைப்பு appeared first on Dinakaran.

Read Entire Article