கஞ்சா விற்பனை செய்ய வேண்டும் என கூறி ரவுடி கும்பல் மிரட்டுவதாக கல்லூரி மாணவர்கள் புகார்

2 months ago 8

கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி அருகே கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்க சொல்லி மிரட்டுவதாக ரவுடி கும்பல் மீது மாணவர்கள் புகார் தெரிவிக்கின்றனர். செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் மற்றும் பொத்தேரியில் பிரபலம் வாய்ந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இங்கு, கேரளா, ஆந்திரா, ஒடிசா உள்ளிட்ட பல்வேறு வெளி மாநிலங்களில் இருந்தும் உள்ளூர் பகுதிகளில் இருக்கும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் வீடு வாடகை எடுத்து தங்கியும், பலர் தங்களது கல்லூரி விடுதிகளில் தங்கியும் படித்து வருகின்றனர்.

இங்கு, ஏற்கனவே கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்யப்படுவதாக புகார் எழுந்ததையடுத்து, புத்தேரியில் உள்ள கல்லூரி முன்பு 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பிரபல ரவுடி கும்பலை சுற்றி வளைத்து போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், உள்ளூர் மாணவர்கள் மூலம் வெளியூர் மாணவர்களை பிடித்து அவர்களுக்கு கஞ்சா, போதை ஊசி மற்றும் போதை பொருட்களை சப்ளை செய்ய சொல்லி மிரட்டுவதாகவும், இதுகுறித்து போலீசில் புகார் செய்தால் குடும்பத்தையே தீர்த்து கட்டி விடுவோம் என்று மிரட்டுவதாகவும் பிரபல ரவுடி கும்பல் மீது புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத மாணவர்கள் கூறுகையில்; பிரபலம் வாய்ந்த ஒரு ரவுடி கும்பல் ஒன்று கல்லூரிக்கு போகும்போதும், கல்லூரியை முடித்துவிட்டு வெளியே வரும்போதும் வாகனத்தில் வந்து இடிப்பது போன்று வந்து அடிதடியில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வப்போது பணம் கேட்டு தொந்தரவு செய்கின்றனர். அது மட்டுமல்லாமல் செல்போன் மற்றும் லேப்டாப்புகளை பறித்து கொண்டு சென்று விடுகின்றனர்.

மேலும், கல்லூரி மாணவிகளிடம் சங்க மாணவர்கள் நெருக்கமாக இருப்பதை போட்டோ மற்றும் வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு உங்கள் மூலம் வெளியூரை சேர்ந்த கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா, போதை ஊசி மற்றும் போதை பொருட்களை சப்ளை செய்ய ஆட்களைப் பிடித்து விட வேண்டும். இல்லையென்றால், உங்களது போட்டோ மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்பி விடுவோம் என்று ரவுடி கும்பல் ஒன்று கட்டாயப்படுத்துகிறது. மேலும், போலீசில் புகார் செய்தால் அடுத்த நொடியே எங்களுக்கு தகவல் வந்துவிடும். நாங்கள் யார் தெரியுமா? வண்டலூரில் பிரபல அரசியல் பிரமுகரை போட்டு தள்ளிய ரவுடி கும்பல்.

அவரை போட்டு தள்ளியது போன்று உங்களையும், உங்கள் குடும்பத்தையும் போட்டு தள்ளி விடுவோம். இதனை மீறி புகார் கொடுத்தாலும் ஜெயிலுக்கு சென்று விட்டு நாங்கள் இரண்டே மாதத்தில் வெளியே வந்து விடுவோம். அப்போது நீங்கள் வெளியூருக்கு சென்றாலும் உங்களுடைய முகவரியை கண்டுபிடித்து அங்கேயே வந்து உங்களை போட்டு தள்ளுவோம் என்று மிரட்டுவதாகவும் சரமாரியாக புகார் கூறுகின்றனர். எனவே, இதுகுறித்து தாம்பரம் போலீஸ் கமிஷனர் தலையிட்டு பிரபல ரவுடி கும்பல் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கல்லூரி மாணவர்கள் வலியுறுத்துகின்றனர்.

The post கஞ்சா விற்பனை செய்ய வேண்டும் என கூறி ரவுடி கும்பல் மிரட்டுவதாக கல்லூரி மாணவர்கள் புகார் appeared first on Dinakaran.

Read Entire Article