ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் 91,558 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார். நாம் தமிழர் கட்சி டெபாசிட்டை இழந்தது. நோட்டாவுக்கு 3வது இடம் கிடைத்து உள்ளது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் கடந்த டிசம்பர் மாதம் 19ம் தேதி உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என கடந்த ஜனவரி மாதம் 7ம் தேதி அறிவிக்கப்பட்டது.
இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த ஜனவரி மாதம் 10ம் தேதி முதல் தொடங்கி 17ம் தேதி வரை நடந்தது. இதில், 58 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இந்த தேர்தலை அதிமுக, பாஜ உள்ளிட்ட முக்கிய கட்சிகள் புறக்கணித்தது. இறுதியாக திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், நாதக வேட்பாளர் சீதாலட்சுமி மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என மொத்தம் 46 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.
இதையடுத்து திமுக, நாதக மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர்.
இந்த பிரசாரம் கடந்த 3ம் தேதி மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. கடந்த 5ம் தேதி 237 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் 1 லட்சத்து 54 ஆயிரத்து 657 பேர் வாக்களித்தனர். இது 67.97 சதவீதம் ஆகும். வாக்குப்பதிவு முடிந்தவுடன் மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணிக்கை மையமான சித்தோடு அருகே உள்ள ஈரோடு அரசு பொறியியல் கல்லூரிக்கு எடுத்து செல்லப்பட்டு, ‘ஸ்ட்ராங் ரூமில்’ வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டது.
இந்நிலையில், ஈரோடு இடைத்தேர்தலுக்கான வாக்குகள் எண்ணும் பணி ஈரோடு அரசு பொறியியல் கல்லூரியில் நேற்று காலை 8 மணிக்கு துவங்கியது. முன்னதாக தபால் வாக்குகள் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் முன்னிலையில் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. தேர்தலில் பதிவான தபால் வாக்குகள் எண்ணுவதற்கு ஒரு மேஜையும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 14 மேஜைகளிலும் 17 சுற்றுகளாக எண்ணுவதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால், பெரியவலசு பகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி எண் 71, திருநகர் காலனி பகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி எண் 115 மற்றும் நேதாஜி சாலைக்கு உட்பட்ட வாக்குச்சாவடி எண் 220 ஆகிய 3 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோளாறு ஏற்பட்டது. இதனால், அந்த வாக்குப்பதிவு இயந்திரத்திற்கு உண்டான விவிபேடில் பதிவான வாக்குச்சீட்டுகள் தனித்தனி சுற்றுகளாக எண்ணப்பட்டது. அதாவது 17வது சுற்று முடிந்ததும் 20வது சுற்றுவரை கூடுதலாக 3 சுற்றுகள் எண்ணப்பட்டது. இந்த வாக்கு எண்ணும் பணியில் 51 அலுவலர்கள் ஈடுபட்டனர்.
ஒவ்வொரு சுற்று முடிவுகளிலும் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் முன்னிலை வகித்தார். முதல் சுற்று முடிவில் சந்திரகுமார் 6,756 வாக்குகள் வித்தியாசத்திலும், இரண்டாம் சுற்று முடிவில் 13,681 வாக்குகள் வித்தியாசத்திலும், 5ம் சுற்று முடிவில் 29,212 வாக்குகள் வித்தியாசத்திலும், 8ம் சுற்று முடிவில் 43,821 வாக்குகள் வித்தியாசத்திலும், 10ம் சுற்று முடிவில் 50 ஆயிரத்தை கடந்து 54,649 வாக்குகள் வித்தியாசத்திலும், 14வது சுற்று முடிவில் 76,002 வாக்கு வித்தியாசத்திலும் முன்னிலையில் இருந்தார்.
இறுதி சுற்றான 20வது சுற்றின் முடிவின்படி திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் 91,558 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் 1,15,709 வாக்குகள் பெற்றார். நாம் தமிழர் வேட்பாளர் சீதாலட்சுமி 24,151 வாக்குகள் பெற்று டெபாசிட் இழந்தார். நோட்டாவுக்கு 6,109 வாக்குகள் பதிவானது. இந்த தேர்தலில் நோட்டாவுக்கு 3வது இடம் கிடைத்து உள்ளது.
வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார்க்கு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஸ்ரீகாந்த் தலைமையில், மாவட்ட தேர்தல் அலுவலர் ராஜகோபால் சுன்கரா முன்னிலையில் வெற்றி சான்றிதழ் வழங்கப்பட்டது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக அபார வெற்றி பெற்றதை தொடர்ந்து, வாக்கு எண்ணும் மையம் முன்பு பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் திமுகவினர் கொண்டாடினர். இதேபோல் தமிழகம் முழுவதும் திமுவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
* நோட்டாவுக்கு கீழ் 44 வேட்பாளர்கள்
ஈரோடு இடைத்தேர்தலில் திமுக, நாதக உட்பட 46 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் திமுக 91,558 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில், நாதகவை தவிர மீதமுள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர், சுயேட்சை வேட்பாளர்கள் என 44 பேரும் நோட்டாவை விட குறைவான வாக்குகளையே பெற்றுள்ளனர். நோட்டாவில் 6,109 வாக்குகள் பதிவாகியுள்ளது. அதே நேரத்தில் போட்டியிட்ட அனைத்தும் வேட்பாளர்கள் இரட்டை இலக்கை தாண்டிதான் வாக்குகளை பெற்று உள்ளனர்.
* 2026 சட்டமன்ற தேர்தல் வெற்றிக்கான அச்சாரம்: வி.சி.சந்திரக்குமார்
திமுக வேட்பாளர் வி.சி.சந்திரக்குமார் நிருபர்களிடம் கூறுகையில், ‘ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுகவின் வெற்றியை எங்களுடைய தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினுக்கு சமர்பிக்கிறோம். எவ்வளவோ பேர் விதவிதமாக பிரசாரம் மேற்கொண்டாலும், திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு, அனைவரும் ஒன்று சேர்ந்து வந்தாலும், நாங்கள் களத்திலே சந்திப்போம் என மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார். அவரது கூற்றுப்படி தேர்தல் களத்தில் 46 வேட்பாளர்கள் நின்றாலும், இந்த தேர்தலில் இதுவரை இல்லாத அளவுக்கு 75 சதவீதம் வாக்குகள் பெற்று திமுக வெற்றி பெற்றிருக்கிறது.
இந்த வெற்றி என்பது ஈரோடு கிழக்கு தொகுதியின் வெற்றி அல்ல. 2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மிகப்பெரிய திமுக வெற்றி பெறும் என்பதற்கு மிகப்பெரிய அச்சாரம். ஈரோடு பார்முலா என்பது மக்களை நேருக்கு நேர் சந்தித்து, மக்களின் பிரச்னைகளை கேட்டு, அதனை நிவர்த்தி செய்வதற்காக பணிகளை மேற்கொண்டு, அப்பிரச்னையை குறிப்பெடுத்து, அதற்கு நடவடிக்கை எடுப்பதாக கூறி வந்திருப்பதே ஆகும். இதுவரை பார்த்திராத எம்எல்ஏவாக நான் செயல்படுவேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
* 2023ல் நடந்த இடைத்தேர்தலைவிட 25,000 வாக்குகள் கூடுதலாக பெற்று திமுக வெற்றி
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் 4ம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து இத்தொகுதிக்கு கடந்த 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக மறைந்த திருமகன் ஈவெராவின் தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டு, 66,233 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
கடந்த இடைத்தேர்தலில் அதிமுக, நாதக, தேமுக உட்பட 77 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். தற்போது நடந்த இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் கடந்த 2023ம் ஆண்டு இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவன் பெற்ற வாக்கு வித்தியாசத்தைவிட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அதாவது 91,558 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் வெற்றி பெற்றுள்ளார்.
* 45 வேட்பாளர்கள் டெபாசிட் காலி
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக வி.சி.சந்திரகுமார், நாதக வேட்பாளராக சீதாலட்சுமி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 46 பேர் போட்டியிட்டனர். இதில் திமுக வேட்பாளர் 1,15,709 வாக்குகள் பெற்று, 91,558 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதற்கு அடுத்தபடியாக நாதக வேட்பாளர் சீதாலட்சுமி 24,151 வாக்குகளை பெற்றார்.
3வது இடத்தில் நோட்டாவுக்கு 6,109 வாக்குகளும் பதிவானது. மொத்தம் பதிவான வாக்குகளில் ஒரு வேட்பாளர் 6ல் ஒரு பங்கு வாக்குகளை பெற்றால் மட்டுமே டெபாசிட் தொகையை திரும்ப பெற முடியும். அந்த வகையில் நாதக வேட்பாளர் சீதாலட்சுமி உட்பட அவரை எதிர்த்து போட்டியிட்ட 45 பேரும் 6ல் ஒரு பங்கு வாக்குகளை பெறாததால், 45 வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்.
The post ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 91,558 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் அபார வெற்றி: நாம் தமிழர் கட்சிக்கு டெபாசிட் காலி, நோட்டாவுக்கு 3வது இடம் appeared first on Dinakaran.