சின்னசேலம், பிப். 6: கச்சிராயபாளையம் பகுதியில் பழைய பாத்திரங்களை உருக்கி அழகிய சுவாமி சிலைகளை தயார் செய்து ₹300 முதல் ₹1000 வரை விற்கும் பணியில் ஆந்திர மாநில தொழிலாளிகள் ஈடுபட்டு வருகின்றனர். மனிதர்கள் பயன்படுத்தும் பொருட்களில் பெரும்பாலானவை மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களில் இருந்து உருவாக்கப்படுகின்றன. சில பொருட்கள் பயன்பாட்டுக்கு பிறகு மீண்டும் பாட்டில்களாக, பாத்திரங்களாக, பிளாஸ்டிக் பொருட்களாக உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழகத்தில் தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பாட்டில்களில் சுமார் 30 சதவீதம் மறுசுழற்சி செய்யப்பட்டு, மீண்டும் கொள்கலன்களாக, பாட்டில்களாக, சுற்றுலா மேசைகளாக, பூங்கா பெஞ்சுகளாக, விளையாட்டு உபகரணங்களாக செய்யப்படுகின்றன.
இதைப்போல் மறுசுழற்சி செய்யப்பட்ட பத்திரிகைகள் காகித பலகை, அட்டை பலகைகளாக பயன்படுகின்றன. இந்நிலையில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 50 பேர் கொண்ட 12 குடும்பத்தினர், விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் சர்க்கரை ஆலை முன்புள்ள வளாகத்தில் கொட்டகை அமைத்து தங்கியுள்ளனர். தினமும் காலையில் கச்சிராயபாளையத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று தெருக்களில் அடுப்பு அமைத்து பழைய அலுமினியம், பித்தளை பாத்திரங்களை பொதுமக்களிடம் இருந்து வாங்கி, அதை உருக்கி ஏழுமலையான், விநாயகர், கற்பக விநாயகர், முருகன், அம்மன், பார்வதி, சிவன், சரஸ்வதி உள்ளிட்ட சுவாமி சிலைகளை அங்கேயே தயார் செய்து தருகின்றனர். அதற்கு கூலியாக ₹300 முதல் ₹1000 வரை சிலைகளின் அளவை பொறுத்து பணம் பெறுகின்றனர். அவர்களும் பழைய பாத்திரங்களை விலைக்கு வாங்கி அதை உருக்கி சுவாமி சிலைகளை செய்து விற்கின்றனர். இதை அறிந்ததும் அக்கராயபாளையம், கச்சிராயபாளையம், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் தங்களிடமிருந்த பழைய பாத்திரங்களை கொடுத்து தேவையான சுவாமி சிலைகளை வடிவமைத்து பெற்று செல்கின்றனர்.
The post கச்சிராயபாளையம் பகுதியில் கொட்டகை அமைத்து பழைய பாத்திரங்களை உருக்கி அழகிய சுவாமி சிலைகள் ஆந்திர தொழிலாளிகள் அசத்தல் appeared first on Dinakaran.