
புதுடெல்லி,
தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லும்போது எல்லை தாண்டியதாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவது தொடர்கதையாக நடந்து வருகிறது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர் சங்கங்கள் மற்றும் அனைத்து தரப்பில் இருந்தும் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாண கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் நேற்று தனித் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானம் அனைத்துக்கட்சிகள் ஆதரவுடன் ஒரு மனதாக நிறைவேறியது.
இதனை தொடர்ந்து கச்சத்தீவு விவகாரம் குறித்து மக்களவையில் இன்று திமுக எம்.பி. டி.ஆர்.பாலு பேசியதாவது:-
கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று தமிழ்நாடு சட்டசபையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. நாடாளுமன்ற அனுமதியின்றி எந்த நிலமும் எந்த நாட்டுக்கும் வழங்கக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. கச்சத்தீவை விட்டுக்கொடுத்தல் 1976ல் நடந்தது. அப்போதைய அரசு, மாநில அரசையோ அல்லது நாடாளுமன்றத்தையோ கலந்தாலோசிக்கவில்லை. நாடாளுமன்ற ஒப்புதல் இல்லாமல், கச்சத்தீவை விட்டுக்கொடுத்தது அரசியலமைப்பிற்கு விரோதமானது. அதை விரைவாக மீட்டெடுக்க வேண்டும். கச்சத்தீவு தமிழக மீனவர்களின் ஒரே உணவு வழங்கும் பகுதி என்று கூறினார்.