சென்னை: கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அதிமுக, பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஆதரவு அளித்தனர். சட்டசபையில் கச்சத்தீவு மீட்பது குறித்த தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்தின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு இடையே காரசார விவாதம் நடந்தது. சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கச்சத்தீவை திரும்ப பெற வேண்டும் என்று ஒன்றிய அரசை வலியுறுத்தி தீர்மானம் கொண்டு வந்தார்.
இந்த தீர்மானத்தின் மீது பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசன் பேசியதாவது: தற்போது இரண்டு பிரச்னை முக்கியமானது. ஒன்று மீனவர்கள் நலன் மற்றொன்று கச்சத்தீவை மீட்பது. மோடி பிரதமராக பதவியேற்ற பிறகு மீனவர்களுக்கு தனி அமைச்சகம் கொண்டு வந்துள்ளார். மீனவர்களுக்கு பல திட்டங்கள் வகுத்து அவர்களுக்கு கடன் உதவி படகுகள் வாங்க நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. மீனவர்களை குஜராத் மீனவர்கள், தமிழக மீனவர்கள் என்று ஒன்றிய அரசு பார்ப்பது இல்லை. கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்து கொடுக்கப்பட்ட போது கூட அன்றைய நாடாளுமன்ற உறுப்பினர்கள், இரா.செழியன், நாஞ்சில் மனோகரன் கடுமையாக எதிர்த்து நாடாளுமன்றத்தில் பேசினர். அப்போது பாஜக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த வாஜ்பாயும் கச்சத்தீவை தாரை வார்த்து கொடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசினார். அரசியல் அமைப்புகளுக்கு எதிரான அப்போதைய காங்கிரஸ் அரசு கச்சத்தீவை தாரை வார்த்து கொடுத்தது. இப்போது நம்முடைய பிரதமரால் கச்சத்தீவை மீட்க முடியும் என்று தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழக அரசிடம் கலந்தாலோசிக்காமல் கச்சத்தீவை கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் தகவல் உரிமை சட்டத்தில் அப்படி எதுவும் இல்லை.
அமைச்சர் துரைமுருகன்: ஒரு முதலமைச்சருக்கு தெரியாமல் கச்சத்தீவை தாரை வார்க்கப்பட்டதாக அப்போதைய பத்திரிக்கையில் செய்தி வெளியாகிறது. அப்போது முதல்வராக இருந்த கலைஞரிடம் ஒன்றிய அரசு கலந்தாலோசிக்கவில்லை. இதுபற்றி தெரிந்த மறுநாளே, அனைத்து கட்சி கூட்டம் கலைஞர் தலைமையில் நடைபெற்றது. இதற்கு எதிராகவும் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
சபாநாயகர் அப்பாவு: கச்சத்தீவு மீட்டு கொடுப்பீர்களா அல்லது கொடுக்க மாட்டீர்களா என்று சொல்லுங்கள்.
வானதி சீனிவாசன்: தமிழக மீனவ பிரதிநிதிகள் இலங்கை மீனவர்களை சந்தித்து தற்போது பேசி வருகிறார்கள். வரும் 13ம் தேதி தமிழகத்தை சேர்ந்த ஒன்றிய இணை அமைச்சர் எல். முருகன் இலங்கை அமைச்சருடன் விரிவாக பேச உள்ளார். தொடர்ந்து மீனவர்களுக்கான பாஜக ஆதரவு அளித்து வருகிறது. அதன் அடிப்படையில் முதல்வர் கொண்டு வந்த இந்த தீர்மானத்தை பாஜக தனது ஆதரவை தெரிவிக்கிறது.
எடப்பாடி பழனிசாமி(எதிர்க்கட்சி தலைவர்): ஜெயலலிதா முதல்வராக இருக்கும் போது, பல ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்தினோம். தொடர்ந்து ஒன்றிய அரசுக்கு தமிழக மீனவர்கள் பிரச்சனை குறித்து கடிதமும் எழுதினார். ஆனால் எதுவும் நடக்காததால் 2008ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு போட்டார். இந்த பிரச்னையில் நாடாளுமன்றத்தில் தமிழக எம்பிக்கள் குரல் கொடுத்தால் தான் விரைவான தீர்வு காண முடிவும். 16 ஆண்டு காலம் திமுக ஒன்றிய அரசுடன் இணக்கமாக இருந்தது. அப்போது இதுபற்றி பேசி தீர்வு எட்டி இருக்காலாம்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: எதிர்க்கட்சி தலைவர் இங்கு வேகமாக ஆளுங்கட்சியை குறை சொல்லி பதிவு செய்துள்ளார். நீங்களும் (அதிமுக) 10 வருடம் ஒன்றிய அரசுடன் இணக்கமாக இருந்தீர்கள் என்ன செய்தீர்கள். தற்போது டெல்லி சென்றீர்கள் இதுபற்றி பேசினீர்களா. நான் பல முறை டெல்லி சென்று பிரதமரை சந்திக்கும் போது எல்லாம் பேசி இருக்கிறேன். இதுவரை 54 முறை கடிதம் எழுதியுள்ளேன்.
அமைச்சர் துரைமுருகன்: வாஜ்பாய் அரசை ஏன் (அதிமுக) கவுத்தீர்கள். பேச வேண்டும் என்றால் நாங்களும் ரெடியாக இருக்கிறோம். ஒரு நல்ல தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக நாங்கள் வாயை அடக்கி கொண்டு இருக்கிறோம்.
எடப்பாடி பழனிசாமி: எங்களது கோரிக்கையை ஏற்காததால் நாங்கள் வெளியே வந்தோம்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: இந்த தீர்மானத்தை ஒட்டி தான் பேச வேண்டும். வேறு பிரச்னை பற்றி பேச சபாநாயகர் அனுமதிக்கீர்களா.
சபாநாயகர் அப்பாவு: ஒரு தீர்மானம் கொண்டு வந்தால் அதை பற்றி மட்டும் பேசுங்கள்.16வருடங்களுக்கு முன் சென்றால் எப்படி.
எடப்பாடி பழனிசாமி: மீண்டும் கடந்த திமுக அரசு பற்றி குற்றச்சாட்டுகள் கூறுவது போல் பேசினார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: அவைக்கு மீண்டும் தவறான தகவல்களை தருகிறார். இந்த தீர்மானத்தை எதிர்ப்பதாக இருந்தால் எதிர்த்து பேசட்டும். அது அவர்களின் உரிமை.
எடப்பாடி பழனிசாமி: இது உணர்வுப்பூர்வமான பிரச்னை நமது மீனவர்களின் உரிமையை மீட்டு எடுக்க முதல்வர் கொண்டு வந்த தீர்மானத்திற்கு அதிமுக ஆதரவு அளிக்கிறது. இவ்வாறு விவாதம் நடந்தது.
The post கச்சத்தீவை மீட்க தனித் தீர்மானம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்-எடப்பாடி பழனிசாமி பேரவையில் காரசார விவாதம்..!! appeared first on Dinakaran.