புதுடெல்லி,
பிரதமர் மோடி மாதந்தோறும் இறுதி ஞாயிற்று கிழமையில் வானொலி வழியே பொதுமக்களுடன் உரையாடும், மன் கி பாத் நிகழ்ச்சியில் இன்று பங்கேற்று பேசினார். இது 118-வது மன் கி பாத் நிகழ்ச்சி ஆகும். இந்த ஆண்டின், முதல் மன் கி பாத் நிகழ்ச்சி என்ற பெருமையை பெற்ற இதில் கலந்து கொண்டு அவர் பேசினார்.
பிரதமர் மோடி பேசும்போது, சென்னை ஐ.ஐ.டி.யின் எக்ஸ்டெம் மையத்தின் பணிகளை பற்றி பாராட்டி பேசினார். அவர் பேசும்போது, விண்வெளியில் உற்பத்திக்காக, புதிய தொழில் நுட்பங்களை பற்றி சென்னை ஐ.ஐ.டி.யின் எக்ஸ்டெம் மையம் பணியாற்றி வருகிறது.
இந்த மையம், 3டி பதிக்கப்பட்ட கட்டிடங்கள், உலோக நுரைகள் மற்றும் ஆப்டிகல் பைபர்கள் போன்ற தொழில் நுட்பங்களை பற்றியும் ஆராய்ச்சி செய்து வருகிறது. நீரின்றி கான்கிரீட் உற்பத்தி செய்வது போன்ற புரட்சிகர வழிமுறைகளை மேற்கொள்ளும் பணியிலும் ஈடுபட்டு வருகிறது.
இந்த ஆராய்ச்சியானது, இந்தியாவின் ககன்யான் திட்டம் மற்றும் வருங்காலத்தில் விண்வெளி நிலையங்கள் அமைப்பது ஆகியவற்றை வலுப்படுத்துவதற்கு உதவும் என்று அவர் பேசியுள்ளார்.
நம்முடைய நாட்டில் கடந்த 2 மாதங்களில், 2 புதிய புலிகள் காப்பகங்கள் சேர்க்கப்பட்டு உள்ளன. அவற்றில் ஒன்று சத்தீஷ்காரில் உள்ள குரு காசிதாஸ் - தமோர் பிங்லா புலிகள் காப்பகம். 2-வது, மத்திய பிரதேசத்தில் ரதபானி புலிகள் காப்பகம் ஆகும் என கூறியுள்ளார்.