* கள நிலவரம் குறித்து முதல்வரே மாவட்ட செயலாளர்களிடம் தொலைபேசியில் கேட்டறிகிறார்
சென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ளதால் அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றனர். சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ள ஆளுங்கட்சியான திமுக முழு வீச்சில் தயாராகி வருகிறது. இதன் ஒரு பகுதியாக நம் மண் மொழி மானம் காக்க, “ஓரணியில் தமிழ்நாடு” எனும் மாபெரும் முன்னெடுப்பை திமுக தொடங்கியுள்ளது. இந்த ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பை திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கடந்த 1ம் தேதி தொடங்கி வைத்தார். தொடர்ந்து கடந்த 3ம் தேதி முதல் வீடு, வீடாக சென்று புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணி தொடங்கியது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது இல்லம் அமைந்துள்ள ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள 3வது தெருவில் நடந்து சென்று வீடு, வீடாக உறுப்பினர் சேர்க்கை பணியை அவரே நேரடியாக மேற்கொண்டார்.
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார். தொடர்ந்து அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், திமுக முன்னணியினர் அனைவரும் அவரவர் சொந்த வாக்குச்சாவடிகளில் இருக்கும் பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு நேரில் சென்று மக்களை சந்தித்து வருகின்றனர். ஒரு விடாமல் அனைவர் வீட்டுக்கும் சென்று பரப்புரையை முடுக்கி விட்டுள்ளனர். பல்வேறு மாவட்ட ெசயலாளர்களை தொடர்பு கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின், ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை குறித்த விவரங்களை கேட்டறிந்து வருகிறார். அவரது கேள்விகளுக்கு பதிலளித்த நிர்வாகிகள், மக்களிடம் நல்ல ஆதரவும், வரவேற்பும் இருப்பதாகவும், எழுச்சியுடன் உறுப்பினர் சேர்க்கை நடந்து வருவதாகவும் கூறி வருகின்றனர்.
திமுகவினர் ஓரணியில் தமிழ்நாடு பரப்புரை மக்களிடையே மிகுந்த ஆதரவை பெற்று வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக ஓரணியில் தமிழ்நாடு பரப்புரை தொடங்கப்பட்டு 5 நாட்களில்(நேற்று இரவு வரை) 31 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓரணியில் தமிழ்நாடு பயணம் மொத்தம் 45 நாட்கள் நடக்கிறது. ஆகஸ்ட் 15ம் தேதிக்கு பிறகு, தமிழ்நாடு முழுக்க ஓரணியில் தமிழ்நாடு நிறைவு விழாக்கள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
The post ஓரணியில் தமிழ்நாடு பரப்புரை தொடங்கப்பட்டு 5 நாட்களில் 31 லட்சம் உறுப்பினர்கள் சேர்ப்பு appeared first on Dinakaran.