ஓய்வுபெற்ற அதிகாரியிடம் ரூ.88 லட்சம் மோசடி: அசாம் வாலிபர் கைது

1 month ago 6

சென்னை: திருவான்மியூரை சேர்ந்த ஓய்வு பெற்ற அதிகாரியிடம் மும்பை போலீஸ் போன்று ஆள்மாறாட்டம் செய்து ரூ.88 லட்சம் மோசடி செய்த அசாம் மாநிலத்தை சேர்ந்த நபரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருவான்மியூரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற சிபிடபிள்யூடி நிர்வாக அதிகாரிக்கு கடந்த செப்டம்பர் 3ம் தேதியன்று தொடர்பில் இல்லாத எண்ணிலிருந்து வாட்ஸ்அப் அழைப்பு வந்தது. அப்போது அந்த நபர் மகாராஷ்டிரா காவல்துறை எனக் கூறி உங்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, கைது வாரண்ட் நிலுவையில் உள்ளது. அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று வேண்டும். மேலும் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட செல்போன் எண் மூலம் நடைபெற்றுள்ள பண மோசடி வழக்கு தொடர்பாக மும்பையில் ஆஜராகுமாறு அறிவுறுத்தியுள்ளார். மேலும் இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் மூத்த தொலைத் தொடர்பு அதிகாரி போன்ற ஒரு நபருக்கு அந்த அழைப்பு அனுப்பப்பட்டு ஓய்வுபெற்ற அதிகாரி குடும்பம் மற்றும் வங்கி விவரங்களை கேட்டறிந்து விசாரணை முடியும் வரை வாட்ஸ்அப் வீடியோ அழைப்பில் தொடர்ந்து இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் வங்கி கணக்கில் வைத்திருக்கும் நிரந்தர வைப்புத் தொகை மற்றும் இதர வங்கி கணக்கில் உள்ள பணத்தினை அவர்கள் தெரிவிக்கும் ரிசர்வ் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் சரிபார்ப்புக்கு பின்னர் வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பி விடுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அதை உண்மை என்று நம்பி கடந்த செப்டம்பர் 4ம் தேதி ஓய்வு பெற்ற அதிகாரி அவர்கள் கொடுத்த வங்கி கணக்கிற்கு இரு தவணைகளாக ரூ.88,00,000 செலுத்தியுள்ளார். அதன்பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து சென்னை காவல் ஆணையரிடம் கொடுத்த புகாரின் பேரில் சென்னை மத்திய விசாரணையில் அவர் பணம் செலுத்திய வங்கி கணக்கு அசாம் மாநிலம் கவுகாத்தியில் தொடங்கப்பட்டுள்ளது. அந்த வங்கி கணக்கிற்கு கடந்த செப்டம்பர் 4ம் தேதி அன்று மட்டும் ரூ.3,82,27,749 ரொக்கமாக இது போன்ற இணையதள குற்றங்கள் மூலமாக வரவு வைக்கப்பட்டு அன்றே இந்திய நாட்டின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 178 வங்கி கணக்குகளுக்கு ஒரே நாளில் பணம் அனுப்பப்பட்டுள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அதன்பேரில் மத்திய குற்றபிரிவு சைபர் கிரைம் பிரிவு காவல் உதவி ஆணையர் தலைமையில் தனிப்படை போலீசார் அசாம் மாநிலம் சென்று விசாரணை மேற்கொண்டு அசாம் மாநிலம் மோரிகான் மாவட்டத்தை சேர்ந்த பார்த்தா பிரதிம் போரா (38) டிரஸ்ட் ஹோம் என்ற நபரை கடந்த 14ம் தேதி கைது செய்து நேற்று முன்தினம் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலுக்கு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இதுபோல் யாரோனும் பாதிக்கப்பட்டால், ஏதேனும் பணம் இழப்பு ஏற்பட்டால் உடனடியாக சைபர் கிரைம் உதவி எண் 1930 மற்றும் வலைதள முகவரி https://cybercrime.gov.in-ல் புகார் அளிக்கலாம், என சைபர் கிரைம் போலீசார் அறிவித்துள்ளனர்.

 

The post ஓய்வுபெற்ற அதிகாரியிடம் ரூ.88 லட்சம் மோசடி: அசாம் வாலிபர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article