
புதுடெல்லி,
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் ரோகித் சர்மா (வயது 38). இவர் இந்திய அணிக்காக 67 டெஸ்ட், 273 ஒருநாள் மற்றும் 159 டி20 போட்டிகளில் ஆடி உள்ளார். இவரது தலைமையில் இந்திய அணி 2024 டி20 உலகக்கோப்பை மற்றும் சமீபத்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்றுள்ளது.
2024 டி20 உலகக்கோப்பையை வென்ற பின்னர் சர்வதேச டி20 போட்டிகளில் ரோகித் ஓய்வு பெற்றார். தொடர்ந்து டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன் என அறிவித்திருந்தார். இந்திய அணி நடப்பு ஐ.பி.எல். தொடர் நிறைவடைந்ததும் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது.
இந்த தொடருக்கு ரோகித் கேப்டனாக நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்நிலையில், யாரும் எதிர்பாராத வண்ணம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோகித் அறிவித்தார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோகித்தை கேப்டனாக நியமிக்க பி.சி.சி.ஐ முன்வரவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றார் என தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது இந்திய அணிக்கு புதிய கேப்டனை நியமிக்க வேண்டிய கட்டாயத்தில் பி.சி.சி.ஐ உள்ளது. அந்த வகையில் சுப்மன் கில் அடுத்த டெஸ்ட் கேப்டன் ஆக அதிக வாய்ப்புகள் இருப்பதாக பி.சி.சி.ஐ வட்டாரங்கள் தெரிவிகின்றன. பும்ரா அடிக்கடி காயம் அடைவதால், அவரை தேர்ந்தெடுக்க பி.சி.சி.ஐ தயக்கம் காட்டுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
சுப்மன் கில் இந்திய ஒருநாள் அணிக்கு துணை கேப்டனாக செயல்பட்டு வருகிறார். மேலும், ஐ.பி.எல் தொடரில் குஜராத் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.