கடந்த 7ம் தேதி ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள 9 தீவிரவாதிகள் தளங்கள் மீது இந்தியா நடத்திய அதிரடி தாக்குதலில் பலியான லஷ்கர் இ தொய்பா மற்றும் ஜெய்ஷ் இ முகமது அமைப்புகளை சேர்ந்த 5 முக்கிய தீவிரவாதிகள் அடையாளம் காணப்பட்டிருப்பதாக இந்திய ராணுவம் தரப்பில் நேற்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1. முடாசர் காதியன் காஸ்
முடாசர் காதியன் காஸ் என்கிற முடாசர் எனப்படும் அபு ஜூண்டால் என்பவன் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி. முரிட்கேயில் உள்ள மர்காஸ் தைபாவின் பொறுப்பாளர். இவரது இறுதிச் சடங்கில் பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் மற்றும் பஞ்சாப் மாகாண முதல்வர் மரியம் நவாஸ் சார்பாக மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இறுதிச்சடங்கு ஒரு அரசுப் பள்ளியில் நடத்தப்பட்டது. இறுதிச் சடங்குக்கு ஜமாத் உல் தவா அமைப்பை சேர்ந்த சர்வதேச தீவிரவாதி ஹபீஸ் அப்துல் ரவூப் தலைமை தாங்கினான். பாகிஸ்தான் ராணுவ லெப்டினன்ட் ஜெனரல் ஒருவரும், பஞ்சாப் காவல்துறை ஐஜியும் இறுதி தொழுகை நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
2.ஹபீஸ் முகமது ஜமீல்
ஜெய்ஷ்-இ-முகமது நிறுவரன் மவுலானா மசூத் அசாரின் மூத்த சகோதரர் ஹபீஸ் முகமது ஜமீல் கொல்லப்பட்டார். தாக்குதலின் போது சேதப்படுத்தப்பட்ட பஹாவல்பூரில் உள்ள மர்காஸ் சுப்ஹான் அல்லா எனும் முக்கிய தீவிரவாத பயிற்சி மையத்தின் பொறுப்பாளர் இவர். இளைஞர்களை மூளைச்சலவை செய்து தீவிரவாதத்திற்கு அழைத்துச் செல்வதிலும், ஜெய்ஷ்-இ-முகமது அமைப்புக்கு நிதி திரட்டுவதிலும் ஜமீல் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
3.முகமது யூசுப் அசார்
உஸ்தாத் ஜி, முகமது சலீம், கோசி சஹாப் என பல்வேறு பெயர்களை கொண்ட முகமது யூசுப் அசார். ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை சேர்ந்தவன். கந்தகார் விமான கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வரும் தீவிரவாதியும், ஜம்மு காஷ்மீரில் பல்வேறு தீவிரவாதி செயல்களுக்கு காரணமானவனுமான மசூத் அசாரின் மைத்துனர் முகமது யூசுப் அசார்.
4.அபு ஆகாஷா
லஷ்கர் இ தொய்பாவை சேர்ந்த காலித் என்ற அபு ஆகாஷா. ஜம்மு காஷ்மீரில் பல்வேறு தீவிரவாத தாக்குதலில் தொடர்புடையவன். ஆப்கானில் இருந்து ஆயுதங்களை கடத்தி வருவதில் முக்கிய பங்கு வகித்தவன். பைசலாபாத்தில் நடந்த இவனது இறுதிச் சடங்கில் பாகிஸ்தான் மூத்த ராணுவ அதிகாரிகள் மற்றும் பைசலாபாத் துணை ஆணையர் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.
5. முகமது ஹசன் கான்
ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை சேர்ந்த முகமது ஹசன் கான். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின் தளபதி முப்தி அஸ்கர் கான் காஷ்மீரியின் மகன். காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்களை ஒருங்கிணைப்பதில் முக்கிய பங்கு வகித்தவன்.
* ஸ்ரீநகர் விமான நிலையத்தில் வெடிகுண்டு சத்தத்தால் பீதி
காஷ்மீரின் முக்கிய நகரமான ஸ்ரீநகரில் நேற்று அடுத்தடுத்து வெடிகுண்டு சத்தங்களால் மக்கள் பீதி அடைந்தனர். நேற்று முன்தினம் இரவு முதல் பாகிஸ்தானில் இருந்து பல்வேறு டிரோன்கள் அனுப்பப்பட்ட நிலையில் அவற்றை இந்திய ராணுவம் வானிலேயே தாக்கி அழித்தது. இதனால் தொடர்ச்சியாக வெடி சத்தங்கள் கேட்டபடி இருந்தன. இதற்கிடையே காலை 11.45 மணி அளவில் நகர் விமான நிலையம் அருகே 2 பயங்கர வெடிகுண்டு சத்தங்கள் கேட்டதால் மக்கள் பீதி அடைந்தனர். உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. ஏர் சைரன்கள் ஒலிக்கப்பட்டு மக்கள் உஷார்படுத்தப்பட்டனர்.
* ஆபரேஷன் சிந்தூருக்கு பதிலடி: ஆபரேஷன் பன்யான் அல்-மார்சஸ்; பாக். பகிரங்க அறிவிப்பு
இந்தியா மீது பதிலடி நடவடிக்கையை தொடங்கியிருப்பதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் அரசு தொலைக்காட்சி மற்றும் ராணுவத்தின் மக்கள் தொடர்புத் துறை ஆகியவை இந்தியா மீது பதில் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளன. இந்தியா மீதான இந்த பதிலடி நடவடிக்கையை ‘ஆபரேஷன் பன்யான் அல்- மார்சஸ்’ என்று பெயரிட்டுள்ளது. இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைக்கு பதிலடியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக பாக். தெரிவித்துள்ளது. இந்த அரபு வார்த்தைக்கு ‘ஈயத்தின் சுவர்’ என்று பொருள் கூறுகின்றனர். பன்யான் அல்-மார்சஸ் நடவடிக்கை என்ற பெயர் குர்ஆனில் உள்ள ஒரு வசனத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. இதன் பொருள் திடமான, உறுதியான கட்டமைப்பு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பெயர் தேர்ந்தெடுக்கப்பட்ட குர்ஆன் வசனத்தில்,’உண்மையிலேயே அல்லாஹ் தனது பாதையில் போருக்கு அணிவகுத்துச் செல்பவர்களை, அவர்கள் ஒரு திடமான சிமென்ட் கட்டமைப்பைப் போல நேசிக்கிறான்’ என்றும் கூறப்பட்டுள்ளது.
* தீவிரவாதிகள் ஏவுதளம் தாக்கி அழிக்கப்பட்டது
நேற்று முன்தினம் இரவு 9 மணி முதல் ஜம்மு பகுதியில் எல்லை பாதுகாப்பு படை (பிஎஸ்எப்) நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தி வருகிறது. இதற்கு பிஎஸ்எப் வீரர்கள் தகுந்த பதிலடி கொடுத்து வருகின்றனர். இதில், ஜம்முவின் அக்னூருக்கு எதிரே தீவிரவாதிகளின் ஏவுதளம் ஒன்று முற்றிலும் அழிக்கப்பட்டதாக பிஎஸ்எப் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில், ‘‘பிஎஸ்எப் வீரர்களின் பதிலடி தாக்குதல் மூலம் சர்வதேச எல்லையில் உள்ள பாகிஸ்தான் ராணுவ முகாம்கள் மற்றும் தளவாடங்களுக்கு பெரும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது. அக்னூர் பகுதிக்கு எதிரே பாகிஸ்தானின் சியால்கோட் மாவட்டத்தில் உள்ள லூனியில் உள்ள தீவிரவாதிகள் ஏவுதளம் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் இறையாண்மையைப் பாதுகாப்பதற்கான எங்கள் உறுதிப்பாடு அசைக்க முடியாதது’’ என்றார்.
* அமிர்தசரஸில் டிரோன்களுக்கு தடை
பஞ்சாபின் அமிர்தசரஸ் மாவட்டத்தில் டிரோன்களை பயன்படுத்துவதற்கு தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் பிறப்பித்துள்ள உத்தரவில், ‘‘அமிர்தசரஸ் மாவட்டத்தின் அதிகார வரம்பிற்குள் டிரோன்களை பயன்படுத்துவது உடனடியாக அமலுக்கு வரும் வகையில் தடை செய்யப்பட்டுள்ளது. சில சமூக விரோத சக்திகள் அல்லது குற்றவாளிகள் பொது அமைதிக்கு பாதகமான நடவடிக்கைகளுக்காக டிரோன்களை தவறாக பயன்படுத்தலாம் என்று நம்பகமான தகவல்கள் கிடைத்துள்ளது. இந்த கட்டுப்பாடு மறு உத்தரவு வரும் வரை அமலில் இருக்கும்.
* பாகிஸ்தான் டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் உள்ள கசா கண்டோன்மென்ட் மீது நேற்று அதிகாலை 5 மணி அளவில் பாகிஸ்தானின் டிரோன் பறந்து வந்தது. இந்த டிரோனில் வெடிமருந்துகளும் வைக்கப்பட்டிருந்தன. இந்திய ராணுவ தளங்களை தாக்க அனுப்பப்பட்ட இந்த டிரோனை இந்திய பாதுகாப்பு படை வீரர்கள் வான் பாதுகாப்பு அழிப்பு அமைப்புகள் மூலம் சுட்டு வீழ்த்தினர். இது குறித்து ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், ‘டிரோன்களை ஏவும் பாகிஸ்தானின் அப்பட்டமான அதிகரிப்பு இந்திய மேற்கு எல்லைகளில் தொடர்கிறது. பாகிஸ்தானின் அனைத்து திட்டங்களையும் ராணுவம் முறியடிக்கும்’ என கூறப்பட்டுள்ளது.
* பாதுகாப்பு சைரன் ஒலிகளை பயன்படுத்த வேண்டாம்
ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள தீயணைப்பு சேவை, சிவில் பாதுகாப்பு மற்றும் உள்நாட்டு காவல் இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘சிவில் பாதுகாப்பு சட்டத்தின் படி சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தவிர, பிற நிகழ்ச்சிகளில் சிவில் பாதுகாப்பு விமானத் தாக்குதல் சைரன் ஒலியை பயன்படுத்துவதை ஊடகங்கள் தவிர்க்க வேண்டும். விமான தாக்குதல் சைரன் ஒலிகளை பொதுமக்கள் தொடர்ந்து கேட்கும்பபோது அதன் மீதான எச்சரிக்கை உணர்திறன் குறையலாம். உண்மையான விமானத் தாக்குதலின்போது அது ஊடகங்களில் ஒலிபரப்பப்படும் வழக்கமான சைரன் ஒலி என பொதுமக்கள் தவறாக புரிந்துகொள்ளக்கூடும்” என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
* இந்தியாவுக்கு ரஷ்யா ஆதரவு
ரஷ்யாவில் நடந்த உலகப்போரில் வெற்றி பெற்றதன் 80ம் ஆண்டு விழாவில் இந்தியாவின் சார்பில் ஒன்றிய பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் சஞ்சய் சேத் கலந்து கொண்டார். செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சஞ்சய் சேத், ‘‘தீவிரவாதத்தின் அனைத்து வெளிபாடுகளுக்கும் எதிரான எங்களது போராட்டத்தில் இந்தியாவுக்கு ஆதரவு அளிப்பதாக ரஷ்யா உறுதியளித்தது. இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பானது ஏற்கனவே உள்ள ஒப்பந்தங்களின் அடிப்படையில் தொடர்ந்து முன்னேறும்” என்றார்.
* வதந்திகளை நம்பாதீர்கள்
ஜம்மு காஷ்மீர் அரசு வெளியிட்ட அறிக்கையில், ‘‘சமூக ஊடகங்களில் பரவும் தவறான தகவல்களும், சரிபார்க்கப்படாத கூற்றுகளும் தேவையற்ற பீதியை ஏற்படுத்தும். எனவே பொதுமக்கள் வதந்திகளில் ஈடுபடுவதையோ அல்லது வதந்திகளை பரப்புவதையோ தவிர்க்குமாறு கடுமையாக அறிவுறுத்தப்படுகிறார்கள். துல்லியமான தகவல்களுக்கு நம்பகமாக செய்தி சேனல்கள் மற்றும் அரசு தகவல் தொடர்புகளை மட்டும் நம்புங்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
* 1.1லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம்
ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா, பந்திபோரா மற்றும் குப்வாரா மாவட்டங்களில் உள்ள எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்புக்கள் , அரசு கட்டிடங்கள் மீது பாகிஸ்தான் ஷெல் தாக்குதல் நடத்தி வந்தது. இதன் காரணமாக பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்து பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்தனர். சுமார் 1.1லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுள்ளனர்.
* வீட்டிற்குள் இருக்க அறிவுறுத்தல்
பாகிஸ்தானில் இருந்து நேற்று முன்தினம் நடத்தப்பட்ட டிரோன் தாக்குதல்களை இந்திய ஆயுதப்படைகள் முறியடித்தன. கட்ச் மற்றும் குஜராத்தின் இரண்டு மாவட்டங்களில் மின்தடை அமல்படுத்தப்பட்ட நிலையில், பொதுமக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்றும், தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம், வதந்திகளுக்கு கவனம் செலுத்த வேண்டாம், பீதி அடைய வேண்டாம் என்று கட்ச் மாவட்ட கலெக்டர் அதிகாரப்பூர் சமூக வலைதளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
* பாக்.கில் 9 பாதுகாப்பு படை வீரர்கள் பலி
ஆப்கானிஸ்தானின் எல்லையையொட்டி உள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் தெற்கு வஜீரிஸ்தான் மாவட்டத்தின் ஷகாய் தெஹ்லில் உள்ள டாண்டா சோதனை சாவடியை நேற்று முன்தினம் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதாக செய்தி வெளியானது. தீவிரவாதிகளுடனான மோதலின்போது பாதுகாப்பு படையினர் 9 பேர் கொல்லப்பட்டனர். 5 பேர் காயமடைந்ததாகவும் ஊடக அறிக்கைகள் தெரிவித்துள்ளன. எனினும் இது குறித்து ராணுவத்தின் ஊடகப்பிரிவில் இருந்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை.
The post ஓயாத குண்டு சத்தம்… நிற்குமா யுத்தம்?… பலியான 5 தீவிரவாதிகளின் அடையாளங்கள் வெளியீடு; லஷ்கர், ஜெய்ஷ் இ முகமது அமைப்பினர் appeared first on Dinakaran.