ஓம்காரேஷ்வர் ஜோதிர்லிங்கம்

2 weeks ago 4

ஜோதிர்லிங்க தரிசனம்

மத்திய பிரதேசத்தில் நர்மதா நதிக் கரையில், நதிகளால் சூழப்பட்ட ஸ்ரீரங்கம் போன்ற அழகிய தீவில் அமைந்துள்ளது இந்த ஆலயம். உஜ்ஜயினி நகரத்திலிருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் நர்மதை ஆற்றின் வடகரையில் இந்த ஆலயம் அமைந்துள்ள தீவுக்கு சிவபுரி என்று பெயர்.

கோயில் அமைப்பே பிரணவ வடிவில் (அதாவது ஓம்கார வடிவில்) அமைந்துள்ளது.

நர்மதையும் நர்மதையின் துணைநதியான காவிரி நதியும் சங்கமம் ஆகும் இடம். இப்பகுதி இரண்டாக அமைந்துள்ளது. ஒரு பகுதிக்கு சிவபுரி என்று பெயர். இரண்டாவது பகுதிக்கு விஷ்ணுபுரி என்று பெயர். சிவபுரியில் ஓம்காரேஷ்வரரும் விஷ்ணுபுரியில் அமரேஸ்வரரும் காட்சி தருகின்றனர். எங்கு பார்த்தாலும் இயற்கை அழகு கொட்டிக் கிடக்கக்கூடிய அற்புதமான ஆலயம்.

தல வரலாறு

ஒரு காலத்தில் விந்திய மலை, தனக்கு ஒரு பெருமையை வேண்டி, ஓம்கார ரூபமாக ஓர் யந்திரத்தை வரைந்து அந்த யந்திரத்தின் மீது மண்ணாலான சிவலிங்கத்தை வைத்து கடும் தவம் செய்தது. சிவன் இந்த மலையின் முன்னால் தோன்றி அருள் தந்தார். அவர் ஓம்காரத்தின் மீது தோன்றியதால் ஓம்காரேஷ்வரர் என்று அழைக்கப்பட்டார். இன்னொரு கதையும் உண்டு. இஷ்வாகு குலத்தில் வந்த மாந்தாத என்ற மன்னன் இங்கு கடும் தவம் மேற்கொண்டு சிவபெருமானின் பேரருளைப் பெற்றார். அதனால் இங்கு உள்ள மலை(குன்று) மாந்தாத மலை என்று அழைக்கப்படுகிறது. அந்த மன்னனுக்கு ஓம்கார ரூபத்தில் சிவன் அருள் தந்ததால் ஓம்காரேஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது.மூன்றாவதாக ஒரு கதையும் உண்டு. ஒரு காலத்தில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் பெரும் போர் நடந்தது. அசுரர்கள் மிக எளிதாக தேவர்களைத் தோற்கடித்தனர். இதனால் வருந்திய தேவர்கள் சிவனைக் குறித்து மிகப் பெரிய தவத்தை மேற்கொண்டனர். அவர்கள் தவத்திற்கு இரங்கிய சிவபெருமான் ஓம்காரேஸ்வரராக அசுரர்களை வென்று தேவர்களுக்கு வெற்றியைப் பெற்றுத் தந்தார்.

சிறப்புகள்

உலக சிருஷ்டியை பிரணவ ஒலியான ஓம்கார ஒளியிலிருந்து இறைவன் ஏற்படுத்தினார் என்பதை விவரிக்கும் தத்துவமாக ஓம்காரேஸ்வரர் இங்கே விளங்குகின்றார். அத்வைத தத்துவத்தை உலகமெல்லாம் பரப்பிய ஆதிசங்கர பகவத் பாதர் தம்முடைய குருவான கோவிந்த பகவத்வாதரை இந்தத் தலத்தில் தான் சந்தித்தார். அவர் சந்தித்த குகை இந்தப் பகுதியில் உள்ளது. இந்த குகையில் ஆதிசங்கரரால் நிறுவப்பட்ட ஒரு லிங்கமும் உள்ளது.இந்தத் தலத்தில் தான் பாணாசுரன் ஒவ்வொரு நாளும் 2000 லிங்கங்களை பூஜித்து நர்மதை நதியில் விட்டான். அவை பின்னால் சாளக்கிராம கற்களாக மாறியதாக ஒரு வரலாறு உண்டு. முப்பத்து முக்கோடி தேவர்களும் எப்பொழுதும் இங்கே சிவபெருமானை வணங்கிக் கொண்டிருப்பதாக ஐதீகம்.ஒவ்வொரு நாள் இரவும், அர்த்த ஜாம பூஜை முடிந்ததும், சிவபெருமான் பார்வதி தேவியுடன் இங்கு விளையாட வருவதாக ஐதீகம் உள்ளது. மமலேஷ்வரர் சந்நதியில் தினமும் மண் லிங்கங்கள் பிடிக்கப்பட்டு அவற்றுக்கு அர்ச்சனை செய்யப்படுகிறது. நர்மதையின் போக்கில் உள்ள தீர்த்தங்கள் அனைத்தும் அதிக முக்கியத்துவம் பெற்றது. இங்கு பித்ருக் களுக்கு கர்மா செய்வது மிகவும் உகந்தது. இங்கு 5 முக விநாயகர் சந்நதியும் உண்டு.

அமைவிடம்

மத்திய பிரதேச மாநிலத்தில் கான்வா மாவட்டத்தில் அமைந்துள்ள மோர் டக்காவில் இருந்து சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. மிகச்சிறந்த பிரதானமான கட்டடக் கலையில் அமைந்துள்ள அற்புதக் கோயில் இது. கோயிலுக்குள் நுழைய சில படிகள் ஏற வேண்டும். முகப்பில் மிகப்பெரிய நந்தி அமைந்துள்ளது மூன்று அடுக்குகளாக அமைந்துள்ள இந்த கோயிலின் கோபுரம் வடநாட்டு கட்டிடக்கலையின் அமைப்பில் அமைந்துள்ளது. இதன் முதல் தளத்தில் தான் குறுகலான கருவறையில் ஓங்காரேஸ்வரர் சிறிய லிங்க வடிவில் உள்ளார். சில படிகள் மேலே ஏறி இரண்டாவது தளத்திற்குச் சென்றால் அங்கே மாகாளர் லிங்க வடிவில் உள்ளார். அவருக்கு எதிரே ஒரு மண்டபம் உள்ளது. மாந்தாதா நிறுவிய லிங்கமும் அவருடைய சிலையும் இங்கு உள்ளது. மேலும் படிகள் ஏறினால் மூன்றாவது தளத்தை அடையலாம். அங்கே சித்தீஸ்வரலிங்கம் உள்ளது. மூலஸ்தானத்தின் மீது நர்மதை நதியானது மேலே வந்து தானே அபிஷேகம் செய்கின்ற அற்புத காட்சியையும் இங்கே காணலாம்.இங்கே திருவண்ணாமலை கிரிவலம் போலவே ஒரு சிறிய மலையை வலம் வரலாம். இதற்கு ஓம்கார மாந்தாதா மலை என்று சொல்கின்றார்கள். இப்படி கிரிவலம் வருவதற்கு “பரிக்கிரமா” என்று சொல்கின்றார்கள்.

கோயில் திறக்கும் நேரம்

காலை 5:00 முதல் பிற்பகல் வரை திறந்திருக்கும். மாலை 4:15 முதல் இரவு 9:30 வரை. காலை 5:00 மணிக்கு மங்கள ஆரத்தி, காலை 5:30 முதல் மதியம் 12:25 வரை ஜலாபிஷேகம், இரவு 8:20 மணிக்கு சயன ஆரத்தி சேவை. பண்டாக்கள் (குருக்கள்) பூஜைகளை செய்கின்றனர். கோயிலில் இருக்கும் எந்த பண்டாக்களுடனும் கலந்தாலோசித்து நீங்கள் கட்டணம் செலுத்தி ஜலாபிஷேகம் செய்யலாம்.

எப்படிச் செல்வது?

இப்பொழுது மிகச் சிறந்த சாலை வசதி அமைந்துள்ளது. கோயிலில் இருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் உள்ள ஓம்காரேஷ்வர் ரோடு (மோர்டக்கா) ரயில் நிலையம் உள்ளது. கோயிலுக்குச் செல்ல ஸ்டேஷனில் இருந்து டாக்சிகள் மற்றும் ஆட்டோக்கள் உள்ளன. ஓம்காரேஷ்வர் சாலை வழியாகவும் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேசத்தின் முக்கிய நகரங்களான இந்தூர், உஜ்ஜைனி மற்றும் கந்த்வாவிலிருந்து ஓம்காரேஷ்வருக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

முனைவர் ஸ்ரீராம்

The post ஓம்காரேஷ்வர் ஜோதிர்லிங்கம் appeared first on Dinakaran.

Read Entire Article