புதுடெல்லி: சட்டவிரோதமாக குடியேறியதாக 205 இந்தியர்களை அமெரிக்கா தனது ராணுவ விமானம் மூலம் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள டொனால்ட் டிரம்ப், சட்டவிரோத குடியேறிகளை கையாள்வதில் கடுமையான கொள்கைகளை அறிவித்திருந்தார். அமெரிக்காவில் வசிக்கும் சட்டவிரோதமாக குடியேறியவர்களை அவரவர் நாடுகளுக்கு திருப்பி அனுப்பும் நிர்வாக உத்தரவிலும் அவர் கையெழுத்திட்டார்.
இதன்படி, மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த சட்டவிரோத குடியேறிகளை அமெரிக்கா நாடு கடத்தி உள்ளது. அந்த வகையில், தற்போது அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 205 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக நேற்று தகவல்கள் வெளியாகின. பல்வேறு மாகாணங்களில் இருந்து ஆயிரக்கணக்கான சட்டவிரோத குடியேறிகள் அமெரிக்காவின் ராணுவ விமானத்தில் அனுப்பப்பட்டுள்ளனர். அதில் டெக்சாசில் இருந்து புறப்பட்ட சி-17 விமானத்தில் 205 இந்தியர்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
இவர்கள் அனைவரும் இந்தியர்கள் என்பது உறுதிபடுத்தப்பட்டு அவர்கள் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நோக்கி அழைத்து வரப்படுவதாக அமெரிக்க அதிகாரிகள் கூறி உள்ளனர். இது குறித்து இந்திய அரசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் வெள்ளை மாளிகையோ, இந்திய அரசோ இது குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலையும் வெளியிடவில்லை. அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு கடந்த 27ம் தேதி பிரதமர் மோடி தொலைபேசியில் பேசி அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
அப்போது, சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை திரும்பப் பெறுவது தொடர்பாக மோடியுடன் பேசியது குறித்த கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், ‘இந்த விஷயத்தில் இந்தியா சரியானதை செய்யும்’ என பதிலளித்திருந்தார். அதே போல, வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கடந்த மாதம் அளித்த பேட்டியில், இந்தியா சட்டவிரோத குடியேற்றத்தை எதிர்ப்பதாகவும் அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள இந்தியர்கள், அவர்கள் இந்தியாவை சேர்ந்தவர்கள் தான் என உறுதிபடுத்தும் ஆவணங்கள் இருந்தால் திரும்ப பெறத் தயார் என்றும் கூறியிருந்தார்.
முன்னதாக சமீபத்தில் சட்டவிரோத குடியேறிகளை ஏற்க மறுத்ததால் மெக்சிகோவுக்கு 25 சதவீத வரியை விதித்து டிரம்ப் அதிரடி நடவடிக்கை எடுத்ததும் அதன் பின் மெக்சிகோ தனது நாட்டவர்களை திரும்ப அழைத்துக் கொள்ள சம்மதித்ததும் சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. டிரம்ப் பதவியேற்ற பிறகு, அமெரிக்காவில் இருந்து இந்தியர்கள் முதல் முறையாக நாடு கடத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
* அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்கள் 7.25 லட்சம்.
* அவர்களில் 20 ஆயிரம் பேரை நாடு கடத்த திட்டம்.
* முதல் கட்டமாக 205 பேர் விமானத்தில் அனுப்பி வைப்பு.
* உறுதிப்படுத்தாத அமெரிக்க தூதரகம்
அமெரிக்க ராணுவ விமானம் சட்டவிரோத குடியேறிகளை இந்தியா அழைத்து வருவது குறித்து, இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரக செய்தித் தொடர்பாளரிடம் கேட்ட போது அவர் தகவலை உறுதிப்படுத்த மறுத்துவிட்டார். அவர் கூறுகையில், ‘‘சட்டவிரோத குடியேறிகளை அமெரிக்கா நாடு கடத்தி வருகிறது. ஆனால் அந்த விசாரணைகள் குறித்த தகவல்களை பகிர்ந்து கொள்ள முடியாது. இருப்பினும் அமெரிக்கா குடியேற்றச் சட்டங்களை கடுமையாக்குகிறது. சட்டவிரோத குடியேறிகளை அகற்றுகிறது என்பது நிச்சயம்’’ என்றார்.
The post சட்டவிரோதமாக குடியேறியதாக 205 இந்தியர்களை நாடு கடத்திய அமெரிக்கா: ராணுவ விமானம் மூலம் அழைத்து வரப்படுகின்றனர் appeared first on Dinakaran.