ஓடும் வெள்ளத்தை ரோட்டில் நின்று பார்த்துவிட்டு வீட்டுக்கு திரும்பிய சேலம்காரரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

1 month ago 5


‘‘பதிவு ஆபிஸ்ல ‘ப‘ வைட்டமின் பாய்வது ஒருபக்கம் என்றாலும், பதிவுக்கு வர்ற ஜனங்க தலையிலதான் எல்லாம் போய் விடியுதுன்னு முணுமுணுப்பு கேட்கிறதாமே..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘வெயிலூர் மாவட்டத்துல பள்ளி கொண்ட ஏரியாவுல சார் பதிவு அலுவலகம் இயங்கி வருது.. இங்க சொத்து வாங்குறது, விற்குறது, அடமானம் வைக்குறதுன்னு பதிவு செய்ய தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து போறாங்க.. இங்க பதிவாளராக இருந்த அதிகாரி விபத்துல சிக்கி மருத்துவ விடுப்புல போயிருக்காரு.. இதனால காட்டுப்பாடி சார் பதிவு ஆபிஸ்ல இருந்து வந்த ஒருத்தரு பொறுப்பு அதிகாரியாக செயல்பட்டு வர்றாராம்.. இவரு, விடுப்புல போனவரையே பீட் பண்றாராம்.. டுபாக்கூர் நிருபர்கள், ஆன்லைன் நிருபர்கள்னு பல பெயர்கள்ல வர்றவங்களுக்கு ப வைட்டமின் வாரி வழங்குறாராம்..

இப்படி எல்லாருக்கும் வழங்குறது, தனக்கு வேண்டியதுன்னு எல்லாத்தையும், பதிவுக்கு வர்ற ஜனங்க தலையில கட்டுறாராம்.. எங்கெங்கோ போகுற விஜிலென்சு டீம் இந்த ஏரியா பக்கம் வராதான்னு பாதிக்கப்படுற ஜனங்களோட புகார் குரலாக ஒலிக்கத் தொடங்கியிருக்குது.. இதனால, சம்பந்தப்பட்ட அதிகாரிங்க, அங்க உண்மையில என்னதான் நடக்குதுன்னு விசாரிச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும்னு கோரிக்கை குரல் எழுந்திருக்குது..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘கூட்டணி மோதல் வெளிச்சத்திற்கு வந்துருக்காமே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘புதுச்சேரியில் புயல் பாதிப்பால் ஆயிரக்கணக்கான மக்கள் உடைமைகளை இழந்தாங்க.. ஆற்றங்கரையோரங்களில் கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தில் சிக்கியுள்ள கிராமங்களில் வாழும் மக்களின் நிலையோ மிகவும் பரிதாபமாக இருக்கு… இதனால் கல்வி நிறுவனங்கள் தற்காலிக பாதுகாப்பு மையங்களாக மாற்றப்பட்டுள்ளது..

நிலைமை இப்படியிருக்க கல்வியமைச்சரான சிவாயமானவர், திடீரென பள்ளிகள் திறக்கப்படும்னு ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.. அடுத்த சில மணி நேரத்தில் முதன்மையாளரான புல்லட்சாமியோ பள்ளிகள் மட்டும் இயங்காது என தடாலடி காட்டினார். இதனால் குழப்பத்திற்கு ஆளான புதுச்சேரிவாசிகள் ஆட்சியாளர்களின் நிலை குறித்து வேதனைப்பட்டுக் கொண்டிருந்த நிலையில் அடுத்த தகவலாக சிவாயமானவரிடம் இருந்து பள்ளியும், கல்லூரியும் மூடப்படுகிறது என்ற தகவல் அவரது லட்டர் பேடில் வெளியானது. இப்படியாக பள்ளிகள் திறப்பு விவகாரத்தில் கண்ணாமூச்சி விளையாடிய ஆட்சியாளர்களின் கூத்தால் சமூக வலைதளத்தில் விமர்சனங்கள் வைரலாகின. இதனிடையே புதுச்சேரி மக்களுக்கான மழை நிவாரணம் தொடர்பான புல்லட்சாமியின் அறிவிப்பின்போது கூட்டணி கட்சியான ஒன்றிய ஆட்சி தரப்பு மக்கள் பிரதிநிதிகள் யாரும் இல்லாததும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.

புல்லட்சாமியின் தன்னிச்சையான இந்த அறிவிப்புக்கு ஒன்றிய அரசின் ஆதரவு முழுமையாக கிடைக்குமா? என்ற கேள்வி ஒருபுறமிருக்க, ஆட்சியாளர்களுக்குள் நிலவும் மோதல் வெட்டவெளிச்சமாகி இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் தகவல் உலாவுது’’ என்றார் விக்கியானந்தா.‘‘மக்கள் மீது பாசம் இருப்பதுபோல காட்டிக்கொள்ள பாதிப்பு இல்லாத பகுதிகளை பார்வையிட்ட இலைக்கட்சி மாஜி அமைச்சர் யாரு..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘மனுநீதி சோழன் மாவட்ட இலை கட்சி மாஜி அமைச்சர் கர்மவீரர் பெயர் கொண்டவர், மழை பெய்த உடனே தனது சொந்த தொகுதிக்குட்பட்ட மக்களை தனது ஆதரவாளர்களுடன் சந்திக்க நேரில் சென்றாராம்.. மக்கள் மீது பாசம் உள்ளது போல் காட்டிக்கொள்வதற்கான இந்த வேலையில் மாஜியானவர் தீவிரமாக இறங்கினாராம்.. மழை பாதிப்பு இடங்கள் குறித்தும், மக்களை நேரில் சந்தித்து பேசியது பற்றியும் உடனே தலைமைக்கு தெரியப்படுத்தினாராம்..

கட்சியில் எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பதை காட்டிக்கொள்வதற்காக இதுபோன்ற வேலையில் அவர் இறங்கியுள்ளார்.. சொந்த மாவட்டத்தை பொறுத்தவரையில் தன்னை விட மற்றவர்கள் வளர்ந்து விடக்கூடாது என்பதில் அவர் கண்ணும் கருத்துமாக இருந்து வருகிறார்.. தலைமையிடத்தில் தன்னுடைய பவரை காட்டிக்கொள்வதற்காகவே, இதுபோன்ற வேலையில் மாஜியானவர் இறங்கியுள்ளதாக கட்சிக்குள்ளே அரசல்புரசலாக பேசிட்டாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.‘‘புயல் பாதித்த இடங்களுக்கு காலில் சக்கரம் கட்டிக்கிட்டு சேலத்துக்காரர் பறந்தாலும் யாருக்கும் எந்த பயனும் இல்லைன்னு கட்சிக்காரங்களே சொல்றாங்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா.‘‘இலைக்கட்சி தலைவரான சேலத்துக்காரர் ரொம்பவே ஆக்டிவா இருப்பது போல காட்டிக்கிறதா கட்சிக்காரங்க சொல்றாங்க.. பெஞ்சல் புயலினால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு காலில் சக்கரம் கட்டிக்கொண்டு பறக்குறாராம்..

ஆனால், இந்த ஆய்வினால் எந்த பயனும் யாருக்கும் இல்லைன்னு கட்சிக்காரங்க அடிச்சி சொல்றாங்க.. அதுக்கு ஒரு உதாரணத்தையும் கட்சிக்காரங்க சொல்றாங்க.. சொந்த ஊரில் ஏற்காடு மலைப்பிரதேசத்தில் பெய்த மழை தண்ணீர் திருமணிமுத்தாறு வழியாக காவிரி ஆற்றில் கலக்குதுங்க.. அளவுக்கு அதிகமான தண்ணீர் வந்ததினால், அவரது நெடுஞ்சாலை நகர் வீட்டு பக்கத்தில் இருக்கும் மேம்பாலத்தை தாண்டி சென்றிருக்கு.. இதனால வேட்டியை மடிச்சிக்கிட்டு மேம்பாலத்தின் வழியாக குபுகுபுவென வரும் தண்ணீரை பார்த்திருக்காரு.. வழக்கம்போலவே வீட்டுக்கு போயிட்டாராம்.. இதனால யாருக்கு லாபமுன்னு ரத்தத்தின் ரத்தங்களே கேட்குறாங்க..

அவரது வீட்டுக்கு அருகில் சிவதாபுரம் குடியிருப்பு பகுதியில் தண்ணீர் புகுந்திருச்சாம்.. அங்கு வந்து மக்களை சந்தித்து ஆறுதல் கூறி ஏதாவது ஒரு உதவி செஞ்சா மக்களும் சந்தோசப்படுவாங்க.. கட்சியின் செல்வாக்கும் ஏறும். தேர்தல் நேரத்தில் ஓட்டையும் அறுவடை செய்யலாம்.. அதை விட்டுட்டு, நெடுஞ்சாலை பகுதியில் போகும் தண்ணீரை பார்த்தால் யாருக்கு லாபம்? யாருதான் தலைவருக்கு வழிகாட்டுறாங்களேன்னு தெரியலையேன்னு தலையில் அடிக்கிறாங்க ரத்தத்தின் ரத்தங்கள்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.

The post ஓடும் வெள்ளத்தை ரோட்டில் நின்று பார்த்துவிட்டு வீட்டுக்கு திரும்பிய சேலம்காரரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Read Entire Article